விற்குற 3 காரையும் கம்மியான விலைக்கு கொண்டுவந்த ஹோண்டா! ஒவ்வொன்னும் பல ஆயிர ரூபாயில் விலை குறைப்பு!
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), 2025 ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய தனது திருத்தப்பட்ட கார் விலைகளை அறிவித்து உள்ளது. அதுகுறித்த விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மத்திய அரசாங்கம் இந்தியாவில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு & சேவை வரியை குறைத்தும் அதிகரித்தும் அறிவிப்பை வெளியிட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஜிஎஸ்டி திருத்தங்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

சீர்திருத்தங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பே தனது கார்களின் விலைகளை எந்த அளவிற்கு குறைக்க போகிறோம் என்பதை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் முழுப் பலன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான தனது முந்தைய உறுதிப்பாட்டை மீண்டும் ஹோண்டா உறுதிப்படுத்துகிறது.
இதன் மூலமாக, பண்டிகைக் காலத்திற்கு முன்னதாகவே சிறப்பான மதிப்பைக் கொண்டதாக ஹோண்டாவின் வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன. பிரபலமான ஹோண்டா அமேஸ் (Amaze) காரின் அனைத்து வேரியண்ட்களும் தற்போது ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இதன்படி, அமேஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.6,97,700 முதல் ரூ.9,99,900 வரை தொடங்குகின்றன.

இது பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது. இந்தியாவில் 3வது தலைமுறை மற்றும் 2வது தலைமுறை என இரு விதமான வெர்சன்களில் ஹோண்டா அமேஸ் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 3-வது தலைமுறை அமேஸ் காரின் விலைகள் ரூ.69,100 முதல் ரூ.1,20,000 வரையிலும், 2-வது தலைமுறை அமேஸ் காரின் விலைகள் ரூ.65,100 முதல் ரூ.72,800 வரையிலும் குறைந்துள்ளன.
ஹோண்டா எலிவேட் (Elevate) காரின் விலைகளும் கவர்ச்சிகரமானதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் எண்ட்ரீ-லெவல் எஸ்வி (SV) மேனுவல் வேரியண்ட்டின் விலை தற்போது ரூ.10,99,900 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. நடுத்தர அளவிலான எஸ்யூவி (SUV) கார் பிரிவில் எலிவேட் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

ஹோண்டா எலிவேட் சிறப்பான வடிவமைப்பு, விசாலமான கேபின் மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது. எலிவேட் காரின் பல்வேறு வேரியண்ட்களுக்கான விலைக் குறைப்புகள் ரூ.42,800 முதல் ரூ.91,100 வரை கொண்டுவரப்பட்டு உள்ளன. இவற்றுடன், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் பலன்கள் ஹோண்டா சிட்டி (City) காருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.41,790 முதல் ரூ.57,500 வரையிலான விலைக் குறைப்புகளுடன், ஹோண்டா சிட்டியின் விலை இப்போது ரூ.11,95,300 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. ஹோண்டாவின் பிரபலமான செடான் (Sedan) ரக காரான சிட்டி அதன் சிறப்பம்சங்கள், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றுடன் பல வருடங்களாக தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.

இந்த கார் விலை குறைப்புகள் குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துணைத் தலைவர் திரு.குனால் பெஹ்ல் கூறுகையில், "2025 ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய எங்களின் புதிய விலைகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஜிஎஸ்டி பலன்களுடன், இந்த விலை குறைப்புகள் டிசம்பர் 2025 வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
இவை, இந்த பண்டிகைக் காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற மதிப்பை வழங்குகின்றன. இந்த நடவடிக்கை வலுவான தேவைக்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என்றும், ஹோண்டாவின் உலகத் தரம் வாய்ந்த தரம் மற்றும் செயல்திறனை மேலும் பல வாடிக்கையாளர்கள் அனுபவிக்க உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தச் சிறப்புமிக்க பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த மதிப்பை வழங்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய கார் விலைகளுடன் கவர்ச்சிகரமான பண்டிகைக் கால சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது. இதனால், வரும் மாதங்களில் மற்ற கார் நிறுவனங்களை போன்று, ஹோண்டா கார்களின் விற்பனையும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









