மலை உயரத்துக்கு ஸ்பீடு பிரேக்கர் இருக்குற நம்ம ஊருக்கு இந்த கார் தான் சரி... 15 லட்ச ரூபாயில் புது ஹோண்டா கார்
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Limited) நிறுவனம், அதன் பிரபலமான எஸ்யூவி காரான எலிவேட் வரிசையில், புதியதாக எலிவேட் ஏடிவி (ADV) என்கிற புதிய ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அட்வென்ச்சர் (Adventure) என்பதன் சுருக்கமாகவே 'ஏடிவி' என குறிப்பிட்டுள்ளனர் என கருதுகிறோம்.
புதிய ஹோண்டா எலிவேட் ஏடிவி எடிசனின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் டோன் மற்றும் டூயல் டோன் என இரு விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஹோண்டா எலிவேட் ஏடிவி எடிசன் காரை அதேபோல் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வாங்கலாம்.

சிங்கிள் டோன் கலர் ஆப்ஷனில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் காரின் விலை ரூ.15,29,000; சிவிடி கியர்பாக்ஸ் உடன் காரின் விலை ரூ.16,46,800 ஆகும். டூயல் டோன் கலர் ஆப்ஷனில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் காரின் விலை ரூ.15,49,000; சிவிடி கியர்பாக்ஸ் உடன் காரின் விலை ரூ.16,66,800 ஆகும். எலிவேட் ஏடிவி எடிசன் காரில், அனைவரும் அறிந்த 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது பேடில் ஷிஃப்டர்களுடன் கூடிய 7-ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் ஆகிய இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. என்ஜினின் பவர் மற்றும் டார்க் அவுட்புட் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. இந்த ஏடிவி எடிசன் தனது தனித்துவமான தோற்றத்தால் கவர்கிறது.
இதன் முன் பகுதியில் பளபளப்பான கருப்பு நிற 'ஆல்ஃபா-போல்ட் பிளஸ்' கிரில், கருப்பு நிற விளிம்பு மற்றும் ஆரஞ்சு நிற ஹைலைட்களுடன் கூடிய ஹூட் டீகால் ஆகியவை சாலையில் இயங்கும்போது காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. கூடுதலாக, ரூஃப் ரெயில்கள், ORVM-கள், மேல் கிரில் மோல்டிங், கதவு மற்றும் ஜன்னல் மோல்டிங்குகள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா மற்றும் கதவு கைப்பிடிகள் போன்ற பல்வேறு கூறுகள் கருப்பு நிறத்தில் அமைந்துள்ளன.
இது வாகனத்திற்கு ஒரு துணிச்சலான வெளித்தோற்றத்தை அளிக்கின்றன. மேலும், ஏடிவி எடிசன் காரில் தரையில் இருந்து அதிகரிக்கப்பட்ட காரின் அடிப்பகுதியின் உயரம் (கிரவுண்ட் கிளியரென்ஸ்), ஆரஞ்சு நிற ஃபாக் லைட் கார்னிஷ், ஏடிவி பிராண்டட் டோர் டீகால்கள் மற்றும் ஆரஞ்சு நிற சிறப்பம்சங்களுடன் கூடிய கருப்பு அலாய் சக்கரங்கள் உள்ளன.

பின் பகுதியில், ஆரஞ்சு நிற ஹைலைட் செய்யப்பட்ட பம்பர் ஸ்கிட் கார்னிஷ், பாடி கலர் ஸ்கிட் பிளேட் மற்றும் காரின் இரட்டை நிற கலர் ஆப்ஷன்களில் கருப்பு நிற சி-பில்லர் ஆகியவை கூடுதல் ஸ்போர்ட்டியான மற்றும் பிரீமியம் தோற்றத்தை அளிக்கின்றன. எலிவேட் ஏடிவி எடிசனின் உட்புறம் நேர்த்தியான கருப்பு நிற தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆரஞ்சு நிற தையல்கள் மற்றும் சிறப்பம்சங்கள் புதிய, பிரீமியம் உணர்வை வழங்குகின்றன. முன் மற்றும் பின் இருக்கைகளில் ஆரஞ்சு நிற தையல்கள் மற்றும் ஏடிவி லோகோக்கள் தனிப்பட்ட மற்றும் ஸ்டைலான தோற்றத்தை சேர்க்கின்றன. ஏசி க்னாப்கள், கியர் நாப் மோல்டிங் மற்றும் டோர் டிரிம்களில் உள்ள ஆரஞ்சு நிற விவரங்கள் காரின் உட்புறத்தின் தனித்துவமான கவர்ச்சியை மேலும் மேம்படுத்துகின்றன.
கார்களின் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஹோண்டா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறது. அந்த வகையில், எலிவேட் ஏடிவி எடிசன் காரிலும் ஹோண்டா சென்சிங் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது, கார் மோதலுக்கு உள்ளாகுவதை தவிர்க்கும் பிரேக்கிங் சிஸ்டம், சாலையில் ஒரே பாதையை தொடர்வதான உதவி, சாலையில் இருந்து கார் விலகுவது குறித்த எச்சரிக்கை, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், கார் புறப்படுவதற்கு முன்னர் தெரிவிக்கப்படும் எச்சரிக்கைகள் மற்றும் பல மேம்பட்ட டிரைவர் அசிஸ்ட் அம்சங்களை வழங்கக்கூடியது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அட்வென்ச்சர் மற்றும் துடிப்பான வாழ்க்கை முறையைக் கொண்ட இளம் வாடிக்கையாளர்களுக்காக புதிய எலிவேட் ஏடிவி காரை ஹோண்டா உருவாக்கி உள்ளது. என்ஜினின் பவர் மற்றும் டார்க் அவுட்புட் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடர்வதால், வழக்கமான எலிவேட் காரை காட்டிலும் மேம்பட்ட செயல்திறனை எதிர்பார்த்து இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் காரை வாங்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications








