ஹோண்டா கார் ஷோரூம்களை இழுத்து மூடிட்டு போகலாம்... கஸ்டமர்ஸ் வராமல் காத்து வாங்குது!!
ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Car India), ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் செயல்படும் கார் நிறுவனம். ஒரு சமயத்தில் முன்னணி கார் நிறுவனமாக விளங்கிய ஹோண்டாவின் கார்கள் விற்பனை சமீப காலத்தில் வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த ஜூன் மாதத்தில் ஹோண்டா விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2024 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஜூன் மாதத்தில் ஹோண்டா கார்கள் விற்பனை ஆனது கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.
ஜப்பானில் இருந்து பல கார் நிறுவனங்கள் இந்தியாவில் வளர்ந்துள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி கூட இந்தியாவின் மாருதியும், ஜப்பானின் சுஸுகியும் இணைந்த நிறுவனமே ஆகும். மாருதி சுஸுகி ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்கிறது. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், மாதத்திற்கு சில பத்தாயிரம் கார்களை ஆவது சராசரியாக விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹோண்டா விளங்கும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, ஹோண்டா கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 9 ஆயிரத்து 776 கார்களை விற்பனை செய்து இருந்த ஹோண்டா நிறுவனம், இந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 5 ஆயிரத்து 124 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
அதாவது, ஹோண்டா கார்கள் விற்பனை கடந்த ஆண்டு ஜூனை காட்டிலும் இந்த ஆண்டு ஜூனில் கிட்டத்தட்ட 47.6% குறைந்துள்ளது. இந்த 5,124 ஹோண்டா கார்களில் உள்நாட்டில் அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவையும் இருக்கின்றன. அதேநேரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையும் அடங்குகின்றன. கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 618 ஆகும்.

அதுவே, 2024 ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்து 804 கார்களை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், இந்த நிறுவனத்தின் விற்பனை ஆனது 3.87% குறைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் வெறும் 3 ஆயிரத்து 950 கார்களை மட்டுமே இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்து இருந்ததால், அதனுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 668 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை நினைத்துதான் ஹோண்டா சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டும்.
2024 ஜூனை காட்டிலும் ஹோண்டாவின் உள்நாட்டு விற்பனையாவது பரவாயில்லை 3.87% மட்டுமே குறைந்துள்ளது. அதுவே ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதி ஆனது சுமார் 90% குறைந்துள்ளது. 2024 ஜூனில் இந்தியாவில் விற்பனை செய்ததை காட்டிலும் அதிகமாக 4 ஆயிரத்து 972 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஹோண்டா ஏற்றுமதி செய்திருந்தது.

ஆனால், இந்த ஏற்றுமதி எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 506 ஆக பதிவாகி உள்ளது. அதாவது, 2024 ஜூனில் ஏற்றுமதி செய்ததில் 10இல் 1% கார்களை மட்டுமே ஹோண்டா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 3 மாதங்களில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் உள்நாட்டில் 11 ஆயிரத்து 928 கார்களையும், வெளிநாடுகளுக்கு 4 ஆயிரத்து 52 கார்களையும் ஏற்றுமதி செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் எலிவேட், அமேஸ் மற்றும் சிட்டி என்கிற மூன்று கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதே இந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை குறைவிற்கு காரணமாகும். ஆனால், ஹோண்டாவின் வெளிநாட்டு ஏற்றுமதி எதனால் குறைகிறது என்பது தெரியவில்லை. ஏனெனில், உள்நாட்டில் விற்பனை செய்யும் கார்களை மட்டுமில்லாமல் இன்னும் பல கார்களை ஹோண்டா இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.


Click it and Unblock the Notifications









