என்னங்க பெரிய லம்போர்கினி...? இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டாவின் தரமான கை வண்ணம்!!
புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் டைப் ஆர் (Honda Civic Type R) கார் இந்திய சாலைகளில் வலம் வந்த காட்சிகள், கார் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், வெளிநாட்டில் விற்பனையில் உள்ள இந்த ஜப்பானிய-ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஆதலால், இத்தகைய காரை இந்தியாவில் கண்டது கார் ஆர்வலர்கள் பலருக்கு ஆச்சிரியமான செய்தியாக அமைந்துள்ளது.
'ஆட்டோ எக்ஸ் மேக்' (AutoXmag) வெளியிட்ட புகைப்படங்கள், இந்த ஹோண்டா ஸ்போர்ட்ஸ் கார் அதன் சர்வதேச தோற்றத்தில் இந்தியாவிற்கு வந்திருப்பதைக் காட்டுகின்றன. அடுத்த ஆண்டு முதல் CBU முறையில் (முழுமையாக வெளிநாட்டில் உற்பத்தி செய்து, இறக்குமதி செய்யும் முறை) சில கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிவிக் டைப் ஆர் கார் இந்தியாவில் காட்சித் தந்து இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், சிவிக் டைப் ஆர் இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்த போகும் முக்கிய இறக்குமதி கார்களில் ஒன்றாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஹோண்டா டபிள்யூ.ஆர்-வி ஆர்.எஸ் (WRV RS) எஸ்யூவி காரும் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய தலைமுறை ஹோண்டா சிவிக் டைப் ஆர் கார் சற்று கோணலான வடிவமைப்பைக் கொண்டிருந்த நிலையில், புதிய சிவிக் டைப் ஆர், நேர்த்தியான மற்றும் காற்றோட்டமான அணுகுமுறை வடிவமைப்பு உடன் மிகவும் முதிர்ச்சியடைந்த தோற்றத்தைப் பெற்றுள்ளது. இது 11வது தலைமுறை ஹோண்டா சிவிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

காரின் இந்த மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, காரின் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. புதிய வடிவிலான பொனட், மேம்படுத்தப்பட்ட காற்றோட்டத்திற்காக பெரிய கிரில், மற்றும் குளிர்ச்சியை அதிகரிக்கும் பம்பர்-மவுண்டெட் ஏர் சேனல்கள் ஆகியவை இந்த காரின் முகப்பு பகுதியில் அடங்குகின்றன. பக்கவாட்டில், இலகுவான 19 அங்குல அலாய் சக்கரங்கள் மற்றும் சக்திவாய்ந்த பிரேக்கிங் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
காரின் பின்பகுதியில், நீக்க முடியாத பெரிய விங், மூன்று எக்ஸாஸ்ட் குழாய் முனைகள் மற்றும் முற்றிலும் கருப்பு நிறத்தில் டிஃப்யூசர் ஆகியவை தனித்துவமாகக் காட்சியளிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த டிசைன் சிவிக் டைப் ஆர் காருக்கு மிகவும் அதிநவீன மற்றும் அதேநேரத்தில் டிராக்-ரெடி தோற்றத்தை வழங்குகிறது.
உட்புறத்தில், ஓட்டுநருக்கு ஏற்ற ஒரு காக்பிட்-ஸ்டைல் தோற்றத்தை வழங்குவதற்காக ஹோண்டா சில மாற்றங்களைச் செய்துள்ளது. சிகப்பு நிற தீம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரகாசமான சிகப்பு நிறத்தில் சூயிட்-தோல்-எஃபெக்ட் அப்ஹோல்ஸ்டரி, ஸ்டீயரிங் சக்கரத்தில் சிகப்பு ஹோண்டா பேட்ஜ் மற்றும் சாலை & ரேஸ் என இரண்டிற்கும் ஏற்ற வகையில் ஆழமாகப் பொருத்தப்பட்ட டைப் ஆர் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் ஆகியவை இதில் உள்ளன.

கூடுதலாக, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. அன்றாடப் பயன்பாட்டிற்கும், மோட்டார்ஸ்போர்ட் பயன்பாட்டிற்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணும் வகையிலான இந்த காரின் உட்புற அமைப்பு, ஹோண்டா டைப் ஆர் கார்களுக்கே உண்டான பாரம்பரியத்தை எதிரொலிக்கிறது.
இதன்படி, 12 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே, பந்தயங்களில் பயன்படுத்தும் போது பந்தயம் குறித்த விபரங்களை வழங்கும் வகையிலான டிஸ்பிளே கொண்ட 10.2 இன்ச் MID, அல்காண்டரா ஸ்டீயரிங் சக்கரம் போன்றவையும் உள்ளன. புதிய சிவிக் டைப் ஆர் காருக்கு சக்தியளிப்பது, ஹோண்டா சிவிக் டைப் ஆர் காரின் வழக்கமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜினின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா இதுவரையில் உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த சிவிக் டைப் ஆர் கார் இதுவாகும். ஆதலால், இந்தியாவில் பிரீமியம் CBU கார்களை 2026ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா அறிவித்திருப்பதன் பின்னணியில் சிவிக் டைப் ஆர் கார் இருக்கலாம் என்பது ஆர்வத்தை தூண்டுகிறது.
இதன் விலை ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருந்தாலும், தற்போது இந்தியாவில் காணப்பட்ட இந்த கார் தனிப்பட்ட இறக்குமதியாக இருக்கலாம் என்பதையும், ஹோண்டாவின் இந்தியாவிற்கான உத்தியுடன் நேரடித் தொடர்பு இல்லாமலும் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









