இந்த ரெண்டும் ஹோண்டா கார்கள்னு சொன்னா யாருமே நம்ப மாட்றாங்க.. விற்பனைக்கு வந்தாதான் நம்புவாங்க போல!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), சிஇஎஸ் 2025 (CES 2025)-இல் வைத்து அதன் இரண்டு தயாரிப்புகளை காட்சிப்படுத்தி இருக்கின்றது. ஹோண்டா ஓ சலூன் (Honda 0 Saloon) மற்றும் ஹோண்டா ஓ எஸ்யூவி (Honda 0 SUV) எனும் இரண்டு கார் மாடல்களையே அது காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த இரண்டும் முன்மாதிரி (Prototypes) கார் மாடல்கள் ஆகும். ஹோண்டா ஓ சீரிஸ் (Honda 0 Series)-இன் கீழேயே இந்த காரை ஹோண்டா தயார் செய்திருக்கின்றது.
விரைவில் இந்த காரை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இப்போதைக்கு இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேவேளையில், 2026 ஆம் ஆண்டில் இது விற்பனைக்கு வரும் என மட்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இவை விற்பனைக்கு வரும் எனில் இதுவரை ஹோண்டா தயாரித்ததிலேயே மிகவும் கவர்ச்சியான கார் மாடல்களாக அவை அமையும்.

ஹோண்டா ஓ சலூன்: லம்போர்கினி சூப்பர் கார் மாடலை போன்று லுக்கில் இந்த கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் மின்சார கார் மாடல் ஆகும். இதன் அறிமுகம் 2026 ஆம் ஆண்டில் அரங்கேற இருக்கின்றது. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரம் வெளியாகவில்லை. இப்போது இருப்பதைப் போலவே விற்பனைக்கு வரும்போதும் இந்த கார் மாடல் இருக்கும் என நம்பப்படுகின்றது.
உயரம் குறைவான ஸ்போர்ட்ஸ் கார் லுக்கே ஹோண்டா ஓ சலூன் காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. வெளிப்புறத்தைப் போலவே இந்த காரின் உட்பக்கமும் தனித்துவமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், அதுபற்றிய விபரங்கள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இந்த கார் மாடலை வடிவமைத்து இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

சுவாரஷ்யமான அம்சங்கள் பலவற்றை இந்த கார் மாடல் தாங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக நிறுவனம் உருவாக்கிய அசிமோ ஓஎஸ் சாஃப்ட்வேரை இது தாங்கியிருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இது வாகனத்தை இயக்கத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லக் கூடிய ஓர் தொழில்நுட்பம் என நம்பலாம். இத்துடன், லெவல் 3 ஆட்டோமேட்டிக் டிரைவிங் வசதி போன்றவையும் ஹோண்டா ஓ சலூன் காரில் இடம் பெற இருக்கின்றது.
ஹோண்டா ஓ எஸ்யூவி: அதிக இட வசதியை விரும்புவோருக்கு ஏற்ற தயாரிப்பாக இந்த கார் மாடல் இருக்கும் என நம்பப்படுகின்றது. ஹோண்டா ஓ சலூனில் காணப்படும் அம்சங்கள் பலவற்றை இதிலும் எதிர்பார்க்கலாம். உருவத்தில் மாறுபட்டுக் காட்சியளிக்கும் இவை சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த காரும் 2026 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும், முதலில் வட அமெரிக்காவிலேயே இவை விற்பனைக்கு வர இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாகவே ஹோண்டா நிறுவனம் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
இந்திய வருகை பற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் வெளியாகவில்லை. இந்திய சந்தை மின்சார வாகனங்களுக்கான சந்தையாக வேகமாக மாறி வருகின்றது. ஆகையால், எதிர்காலத்தில் ஹோண்டா தன்னுடைய இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வரும் நம்பப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி ஒரு இ-காரை கூட அது விற்பனைக்கு வழங்கவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக எலிவேட் உள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் மின்சார வெர்ஷனையே விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதன் அறிமுகம் இந்த ஆண்டு இறுதிக்குள் அரங்கேற உள்ளது.


Click it and Unblock the Notifications









