வருஷத்துக்கு ஒரு பிரச்சனையை சீனா கொண்டுவந்துடுது! மத்திய அரசின் கதவை தட்டும் கார் கம்பெனிகள்!!
உலகம் முழுக்கவே அரிதான புவியியல் தனிமங்களுக்கு மிக பெரிய தேவை உருவாகி வருகிறது. நியோடிமியம் (Neodymium), டிசிப்ரோசியம் (Dysprosium), டெர்பியம் (Terbium) உள்ளிட்ட உலகின் அரிதான இந்த தனிமங்களை கொண்டுதான் ஆட்டோமொபைல் வாகனங்கள் மற்றும் மொபைல் போனில் இருந்து பெரிய ஏவுகணைகள் வரையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக, அதிகரித்துவரும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான அதிவலிமைமிக்க காந்தகங்கள் இந்த தனிமங்களில் இருந்துதான் உருவாக்கப்படுகின்றன. இந்த அளவிற்கு முக்கியமான தனிமங்கள் கிடைப்பதில்தான் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அது என்னவென்றால், அரிதான இந்த தனிமங்கள் உலகில் வேறு சில பகுதிகளில் கிடைத்தாலும், சீனாவில்தான் அதிகமாக கிடைக்கிறது. இதனை புரிந்துக்கொண்ட சீன அரசு, அமெரிக்கா உடனான பனி போரில் இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக, உலகின் அரிதான 7 விதமான தனிமங்களை சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.

அதாவது, அரிதான தனிமங்களை சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்ய சிறப்பு லைசன்ஸை கொண்டிருக்க வேண்டும் என சீன அரசு அறிவித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் உலகளவில் மோட்டார் வாகனங்களை, குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் பெரிய இடையூறுகளையும், தாமதங்களையும் ஏற்படுத்தக்கூடும் என நாம் அப்போதே தெரிவித்து இருந்ததை போல், உலகளவில் ஆட்டோமொபைல் துறை சீன அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகளினால் ஆட்டம் காண துவங்கியுள்ளது.
மாருதி சுஸுகி (Maruti Suzuki) போன்ற ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் கூட இதன் மூலம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதை வெளிக்காட்டும் விதமாக, இந்த பிரச்சனைக்கு வேறு வழிகளில் தீர்வு கண்டு வருவதாக மாருதி சுஸுகி சார்பில் சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டதை கூட நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம்.

உலகின் அரிதான தனிமங்களை ஏற்றுமதி செய்வதில் சீன அரசாங்கம் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) போன்ற இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் பெரிய தலைவலியாக மாறி வருகிறது. இதன் வெளிப்பாடாகவே, மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆன இ-விட்டாரா (e-Vitara) காரின் அறிமுகத்தை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது.
அதேபோல், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய முடியாமல் சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இந்திய அரசாங்கத்தை நாடி வருகின்றன. மேலும், அரிதான தனிமங்களை வழங்கக்கூடிய மற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உடனும் கூட்டணி சேர திட்டமிட்டுள்ளன.

மேலும், இத்தகைய தனிமங்களுக்கு மாற்றான தனிமங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளிலும் ஈடுப்பட்டு வருகின்றன. அதேநேரம், சீனாவில் இருந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த சூழல் ஆனது சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உலகிலேயே பலத்த போட்டி மிகுந்த சீனாவில் இருந்து மிக மிக சில எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இந்திய மார்க்கெட்டிற்கு வந்துள்ளன.
அவற்றுள் முக்கியமானது, பிஒய்டி (BYD) ஆகும். எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் கண்களிலேயே விரல்விட்டு ஆட்டிவரும் பிஒய்டி நிறுவனத்தை போன்று, சீன அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகள் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்திற்கு பெரிதும் அனுகூலமாக உள்ளது. எம்ஜி மோட்டார் ஆனது பிரிட்டிஷ் கார் நிறுவனமாக இருப்பினும், தற்போது அது மொத்தமாக சீனாவின் பிரபலமான SAIC க்ரூப்பின் கீழ் செயல்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை காண இப்போதுதான் துவங்கியுள்ளன. ஆதலால், இதற்கு எந்த மாதிரியான தீர்வை அவை தேர்வு செய்துள்ளன என்பதை அறிய இன்னும் சில வாரங்கள் ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், சீன அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த பிரச்சனையை சமாளிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்திய அரசாங்கங்களும் மனது வைத்தால்தான் முடியும்.


Click it and Unblock the Notifications









