எந்த நாட்டிடமும் கையேந்த தேவை இல்ல! சூரிய ஒளி தான் மூல ஆதாரமே... எலக்ட்ரிக் வாகனங்களை சாதாரணமா நெனைச்சிடாதீங்க
எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. பசுமையான சுற்றுச்சூழலை பேண முடியும், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து நாட்டின் செலவினங்களை குறைக்கலாம் மற்றும் இரைச்சலற்ற போக்குவரத்தை பெற முடியும் என சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுடன், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் கிடைக்க பெறும் மற்றொரு அசத்தலான நன்மையும் உள்ளது.
அது என்னவென்றால், எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரிகள் ஆகும். இன்றைய காலத்தில் பல வீடுகளில் ஜெனரேட்டர்கள் (Generators) பயன்படுத்தப்படுகின்றன. ஜெனரேட்டர் & அதற்கான அளவில் பெரியதான பேட்டரிக்காக பல ஆயிர ரூபாய்களை செலவழிக்க வேண்டி இருந்தாலும் மின்கம்பத்தில் இருந்து வரும் மின்சாரம் நின்று போனாலும் வீட்டின் வெளிச்சம் அணைவதில்லை.

வீட்டில் ஜெனரேட்டருக்காக பயன்படுத்தப்படும் பேட்டரியை போன்றதுதான் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியும். இன்னும் சொல்லப்போனால், விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்களில் இன்னும் அதிக ஆற்றல்மிக்க பேட்டரி பேக்குகள் (Battery Packs) பொருத்தப்படுகின்றன. அவற்றை வைத்து 2, 3 வீடுகளுக்கு கூட மின்சாரம் வழங்க முடியும். இதை பற்றி தான் இந்த தொகுப்பில் கூற வந்தோம்.
எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சார்ஜை கொண்ட மின்சாதன பொருட்களை இயக்கும் பழக்கம் மக்கள் இடையே கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் 2-வீலர்களில் இவ்வாறான வசதிகள் இன்னும் வரவில்லை என்றாலும், எலக்ட்ரிக் கார் (Electric Car) கம்பெனிகள் வைகல்-டூ-லோடு (Vehicle-to-Load) வசதியை தங்களது கார்களில் வழங்க ஆரம்பித்துள்ளன.

அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் காரில் இருந்து சார்ஜ் எடுத்து பயன்படுத்த உதவும் அடாப்டர்கள் உதிரி பாகங்களின் சந்தையிலும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இருப்பினும் இப்போதைக்கு எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜை பயன்படுத்தி மின்சாதனங்களை உபயோகப்படுத்துவது, சார்ஜ் காலியான வேறொரு எலக்ட்ரிக் வாகனத்திற்கு வழங்குவது போன்ற சிறு சிறு வேலைகளை தான் செய்து வருகிறோம்.
எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரியின் சார்ஜை கொண்டு ஜெனரேட்டரை போல வீட்டின் அனைத்து மின் சாதனங்களையும் இயக்கும் அளவிற்கு நம் இந்திய மக்கள் இன்னும் வரவில்லை. சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இவ்வாறான நடைமுறைகள் வந்துவிட்டன என்றாலும், இந்தியாவில் எங்களுக்கு தெரிந்தவரையில் யாரும் அவ்வாறு எலக்ட்ரிக் வாகனங்களை வீட்டிற்கான ஜெனரேட்டர்களாக பயன்படுத்துவதில்லை.

ஆனால், எதிர்காலத்தில் (இன்னும் சில வருடங்களில்) வீட்டிற்கான மின்சாரத்தை பெறுவது மட்டுமின்றி, அடுக்குமாடி கட்டிடங்கள் கூட எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை கொண்டு இயங்கலாம். இது இல்லாமல், வைகல்-டூ-கிரிட் (Vehicle-to-Grid) தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியில் உள்ள சார்ஜை மீண்டும் மின்கம்பத்திற்கே வழங்கி மின்சாரத்தை சேமிப்பதுடன், மின் கட்டணத்தையும் மிச்சப்படுத்தும் யோசனைகளும் வெளிநாட்டு மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இதன் மூலம் பயன்பெற வேண்டுமெனில், மின்கம்பத்தில் இருந்து மின்சாரத்தை பெற்று எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்ய கூடாது. அதற்கு மாற்றாக சூரிய ஒளி, சிறிய காற்றாலை மூலம் மின்சாரத்தை பெற்று எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்வதாக இருக்க வேண்டும். முக்கியமாக, சோலார் பேனல்களின் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக, எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகள் எதிர்காலத்தில் மனிதனின் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கருவிகளாக முக்கிய பங்காற்றுவதற்கு, இயற்கை மூலங்களில் இருந்து நாம் பேட்டரியை சார்ஜ் செய்யும் சாதனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் சோலார் பேனல்கள் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை சார்ஜ் நிரப்பி பயன்படுத்துவது மட்டுமில்லாமல் வைகல்-டூ-கிரிட் மூலம் மின்கம்பத்திற்கே திரும்ப வழங்கினால், நாட்டின் ஒட்டுமொத்த மின்சார தேவை வெகுவாக குறைந்துவிடும். பல ஏக்கர்கள் பரப்பளவில் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரத்தை பெறுவதை காட்டிலும் இந்த வழிமுறை இன்னும் அதிக பயனுள்ளதாக இருக்கும்.
Note: Images were used for representational purpose only.


Click it and Unblock the Notifications









