இதுக்கு இந்தியாவுக்கு வராமலேயே இருந்திருக்கலாம்... டெஸ்லா இதை மட்டும் செய்திருந்தால் பட்டாசா இருந்து இருக்கும்
டெஸ்லா (Tesla) நிறுவனம் ஒருவழியாக இந்தியாவில் நுழைந்துவிட்டது. மத்திய அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்தப்படி எந்த சலுகையும் கிடைக்காவிட்டாலும், அறிவித்தப்படி முதல் டீலர்ஷிப் ஷோரூமை மும்பையில் டெஸ்லா திறந்துள்ளது. உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள டெஸ்லா நிறுவனம் இந்தியாவின் எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட தனது எலக்ட்ரிக் கார்களை தான் டெஸ்லா இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பது எதிர்பார்த்த அளவுக்கு இந்த நிறுவனம் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்வியை எழுப்புகிறது. ஏனெனில், டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை ரூ.30- 40 லட்சம் என்கிற விலையில் எதிர்பார்த்தோம்.

ஆனால், இந்தியாவில் முதல் டெஸ்லா காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.60 லட்சம் ஆகும். இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடு விலை இன்னும் 5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை அதிகமாக வரும்.
மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் ஆனது டெஸ்லாவின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் கிடையாது; இதனை காட்டிலும் குறைந்த விலையிலான மாடல் 3 எலக்ட்ரிக் கார் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது என்றாலும், மாடல் ஒய் காரின் விலை ஆனது அதன் அமெரிக்க விலையை காட்டிலும் டபுள் மடங்கு அதிகமாக இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், டெஸ்லா கார்கள் மீது நம் இந்தியர்களுக்கும் ஒருவித ஈர்ப்பு உள்ளதால், அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் டெஸ்லா கார்களை அதிக பேர் வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், டெஸ்லாவின் இந்திய வருகை ஆனது எலக்ட்ரிக் சொகுசு கார்களை விற்பனை செய்யும் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பி.எம்.டபிள்யூ (BMW), ஆடி (Audi) போன்ற நிறுவனங்களுக்கு நிச்சயமாக தலைவலியாக இருக்கும்.
இதன் மூலமாக, இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை அதிகரிக்கும் என்பது மட்டும் உறுதி. சீனாவில் 2019ஆம் ஆண்டில் டெஸ்லா நுழைந்த பின் அந்த நாட்டின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஒரேடியாக சுமார் 150% அதிகரித்தது. டெஸ்லா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்களில் அதிக ரேஞ்ச், பெர்ஃபார்மன்ஸ், சார்ஜிங் தொழிற்நுட்பங்கள் மற்றும் மென்பொருள் வசதிகளை வழங்குவதினால் அதற்கு ஈடுக்கொடுக்க மற்ற இவி நிறுவனங்களும் முயற்சி செய்யும்.

டெஸ்லாவின் சூப்பர்சார்ஜர் நெட்வொர்க் (Super Charger Network) இந்தியாவின் முக்கியமான மெட்ரோ நகரங்களில் முதலாவதாக கொண்டுவரப்பட உள்ளது. இதனை பார்த்து டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் அதன் ஃபாஸ்ட் சார்ஜர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த முயற்சிக்கும். மேலும், டெஸ்லா நிறுவனத்துக்காக மத்திய அரசாங்கம் தனது சட்ட திருத்தங்களில் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு நேரம் நாம் பார்த்தது எல்லாம் டெஸ்லா நிறுவனத்தின் வருகையால் இந்தியாவிலும், இந்திய எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதாகும். இவற்றை காட்டிலும் இந்திய சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், இந்தியாவிலேயே எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய டெஸ்லா துவங்க வேண்டும். குறைந்தப்பட்சம், இந்தியாவிலேயே கார்களை அசெம்பிள் செய்ய ஆவது முயற்சிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









