மீண்டும் கிரிக்கெட்டில் நுழையும் ஹூண்டாய்... 10 வருடத்துக்கு பின் இது மறுபடியும் நடக்கும்னு எதிர்பார்க்கல!!
ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) உடன் அடுத்த சில ஆண்டுகளுக்கான உலகளாவிய கூட்டணியை அறிவித்துள்ளது. இதன்படி, 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஆறு முக்கிய ஐசிசி கிரிக்கெட் (Cricket) தொடர்களுக்கான முதன்மைப் பங்காளராக ஹூண்டாய் இணைந்துள்ளது. ஐசிசி உடன் தென் கொரியா நாட்டின் ஹூண்டாய் இணைவது இது ஒன்றும் முதல்முறை அல்ல.
முன்னதாக, 2011 முதல் 2015 வரை ஐசிசி உடன் இணைந்து ஹூண்டாய் செயல்பட்டது. இந்த வகையில் பார்த்தால், ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப்பிற்கு ஹூண்டாய் திரும்பி உள்ளது. தற்போதைய புதிய ஒப்பந்தத்தின் கீழ், 2027 ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் உட்பட அனைத்து ஐசிசி நிகழ்வுகளிலும் பிரீமியம் பிராண்டிங் மற்றும் செயல்பாட்டு உரிமைகளை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் பெறும்.

மேலும், இந்த கூட்டணி ஆனது ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளின் பல வடிவ கிரிக்கெட் போட்டி தொடர்களையும் உள்ளடக்கியது ஆகும். தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் முன்னதாக டாஸ் (Toss) போடும்போது போன்ற முக்கிய தருணங்களில் மைதானத்திற்குள் தனது பிராண்டை விளம்பரப்படுத்துவதுடன், ரசிகர்களை விளையாட்டுடன் ஒன்றிணைக்கும் திட்டங்களிலும் ஹூண்டாய் ஈடுபடும்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஜோஸ் முனோஸ் இதுகுறித்து பேசுகையில், "கிரிக்கெட் மற்றும் ஹூண்டாய் இரண்டும் தொடர்ந்து தன்னை தானே மேம்படுத்திக் கொள்ளும் உத்வேகத்தையும், சவால்களை எதிர்கொள்ளும் நெகிழ்ச்சியையும் கொண்டுள்ளன. ஐசிசி உடன் பங்கெடுப்பதில் பெருமை கொள்வதுடன், உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான ஆர்வமுள்ள ரசிகர்களுடன் இணைகிறோம்".

"இந்தியா போன்ற முக்கிய சந்தைகளில், கிரிக்கெட் ஒரு வாழ்க்கை முறையாகும். அங்குள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தினருடன் எங்கள் பிணைப்பை இந்த கூட்டணி ஆழப்படுத்துகிறது. புகழ்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் மறக்க முடியாத அனுபவங்களை ஒன்றாக உருவாக்க எதிர்நோக்குகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார். ஐசிசி தலைவர் திரு.ஜெய் ஷா கூறுகையில், "உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் கிரிக்கெட் ஒன்றாகும்".
"ஐசிசி-யின் முக்கிய நிகழ்வுகளின்போது, 200 கோடிக்கும் அதிகமான ரசிகர்களின் ஆர்வம் வெளிப்படையாகத் தெரியும். இந்த உலகளாவிய நிகழ்வுகள், புதுமையான டிஜிட்டல் மற்றும் மைதான ஒருங்கிணைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்க்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. ஹூண்டாயை ஒரு முதன்மை பங்காளராக வரவேற்பதுடன், சிறந்த நிகழ்வுகளை இணைந்து வழங்க ஆவலுடன் உள்ளோம்".

"ஹூண்டாய் ஒரு உலகளாவிய பிராண்ட், இது நீண்ட காலமாக விளையாட்டுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்த நிகழ்வுகளில் எங்கள் ஒருங்கிணைந்த பலத்தை அதிகப்படுத்துவோம் என நம்புகிறோம்," என்று தெரிவித்தார். இந்தியாவை பொறுத்தவரை, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் வருகிற 2026 பிப்ரவரியில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் இருபது ஓவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் உள்ளூர் விளம்பரங்களில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட்டில் ஹூண்டாயின் இருப்பை இந்த நடவடிக்கை வலுப்படுத்தும். கிரிக்கெட் மீதான ஹூண்டாயின் இந்த புதிய கவனம், முக்கியமான பிராந்தியங்களில் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஹூண்டாயின் உலகளாவிய விளையாட்டு உத்தியுடன் ஒத்துப்போகிறது.
200 கோடிக்கும் அதிகமான உலகளாவிய ரசிகர்களைக் கொண்டுள்ள கிரிக்கெட், இந்தியா போன்ற பரந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகளுக்கு மிகப் பொருத்தமானது. ஹூண்டாய்க்கு இந்திய சந்தையின் முக்கியத்துவத்தை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உடனான கூட்டணி அறிவிப்பு விழா நிச்சயம் எடுத்துரைத்திருக்கும்.


Click it and Unblock the Notifications









