குறைந்த செலவில் சர்வீஸ் செய்ய சரியான நேரம் வந்தாச்சு! ஹூண்டாய் கார் வைத்திருப்பவர்கள் கொடுத்து வெச்சவங்க!!
ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் என்றால், ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான கார் நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. கடந்த சில மாதங்களாக மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தால் கார்கள் விற்பனையில் சற்று பின்தங்கினாலும், ஹூண்டாயை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. கார்கள் விற்பனை குறைவை சரிசெய்யும் முயற்சிகளில் ஹூண்டாய் ஏற்கனவே இறங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக ஹூண்டாய் அறிவித்துள்ள மழைக்கால சேவை முகாமை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் மழைக்காலம் துவங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் கனமழை பெய்வதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. மழைகாலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள் தான். கட்டிடத்திற்கு அடியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தாலும், கனமழை பெய்து வெள்ளம் ஏற்படும்போது வாகனங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

குறிப்பாக, தரையில் இருந்து குறைவான உயரத்தில் அடிபகுதியை கொண்ட கார்கள் மழைக்காலங்களில் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றன. இதனால், அடிக்கடி சர்வீஸ் மையத்திற்கு காரை கொண்டு செல்ல வேண்டியதாக உள்ளதால், அதற்கேற்ப பணமும் அதிகமாக செலவாகிறது. இதனை புரிந்துக் கொண்ட ஹூண்டாய் நிறுவனம் இந்த மழைக்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் விதமாக மழைக்கால சர்வீஸ் முகாமை துவங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஹூண்டாய் டீலர்ஷிப் ஷோரூம்களிலும் ஜூலை 25ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்த முகாமின் மூலமாக ஹூண்டாய் கார் வைத்திருப்பவர்கள் சலுகைகள் உடன் தங்களது காரை சர்வீஸ் செய்துக் கொள்ளலாம். இந்த சர்வீஸ் முகாமின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், காரின் 70 இடங்களில் சரிப்பார்ப்பு செய்யப்படும் என்பதாகும்.

மழைக்காலத்தில் எளிதில் சேதமடையக்கூடிய காரின் பிரேக்குகள், விளக்குகளுக்கான வயரிங், டயர்கள், வைபர்கள், பேட்டரி, எலக்ட்ரிக்கல் சிஸ்டம்ஸ் மற்றும் அண்டர்பாடி எலிமெண்ட்ஸ் உள்ளிட்டவை இந்த 70 இடங்களில் அடங்குகின்றன. இதில் பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அதனை காரின் உரிமையாளர் கட்டணத்துடன் சரி செய்துக் கொள்ளலாம். இந்த கட்டணங்களும் தற்போது தள்ளுபடிகள் மூலமாக குறைக்கப்பட்டுள்ளன.
பணியாளர் கட்டணம், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு சேவைகள், காரின் வெளிப்புறம் & உட்புறத்தை அழகுப்படுத்தும் வேலைகள் மற்றும் துருப்பிடித்தலை தடுப்பதற்கான கோட்டிங் உள்ளிட்டவற்றின் கட்டணத்தில் 15% குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. காருக்கான பிரேக் பேட்கள், க்ளட்ச் & சஸ்பென்ஷன் பாகங்களின் விலைகளில் 10% குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், ஹெட்லைட்கள், டெயில்லைட்கள், இண்டிகேட்டர்கள் மற்றும் வைபர் பிளேட்கள் போன்ற விளக்குகளின் விலைகளிலும் 10 சதவீதத்தை ஹூண்டாய் குறைத்துக் கொண்டுள்ளது. இவற்றை விட முக்கியமாக காருக்கான உத்தரவாதத்தை நீட்டித்தால் அதற்கான கட்டணத்தில் சுமார் 35% குறைத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழைக்கால சர்வீஸ் முகாமில் ஹூண்டாய் அறிவித்து இருப்பதிலேயே உத்தரவாதத்தை நீட்டிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருப்பதுதான் ஹைலைட்டான விஷயம் ஆகும். நிச்சயமாக இது ஹூண்டாய் கார் ஓனர்களை வெகுவாக கவரும். மேலும், ஹூண்டாயின் இந்த அறிவிப்பு புதிய கஸ்டமர்களையும் ஈர்க்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









