ஹூண்டாய் ஷோரூமுக்கு வருபவர்கள் முதலில் போகும் இடம் இந்த காரை நோக்கி தான்... அப்படி என்ன தான் இருக்கு இதில்?
ஹூண்டாய் (Hyundai), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. தென்கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தற்சமயம் ஹூண்டாயில் இருந்து மொத்தம் 11 கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், வழக்கத்தை காட்டிலும் அது எவ்வளவு அதிகம் என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஹூண்டாயில் இருந்து கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 3 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை முந்தி கார்கள் விற்பனையில் 2வது இடத்தை ஹூண்டாய் பிடித்துள்ளது. இருப்பினும், இந்த 54,003 என்பது 2024 ஜனவரி மாதத்தை காட்டிலும் 3,112 குறைவாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் சுமார் 57,115 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் வெறும் 42,208 கார்களை மட்டுமே விற்பனை செய்து 3வது இடத்திற்கு ஹூண்டாய் தள்ளப்பட்டது. அந்த மாதத்தில் கார்கள் விற்பனையில் 2வது இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடித்தது.
வழக்கம்போல், கடந்த ஜனவரி மாதத்திலும் ஹூண்டாயில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை கிரெட்டா (Creta) பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 18,522 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் 13 ஆயிரம், 12 ஆயிரம் என்கிற எண்ணிக்கையில்தான் கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கிரெட்டாவுக்கு அடுத்து 2வது இடத்தை வென்யூ பிடித்துள்ளது. ஹூண்டாயில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 106 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 ஜனவரியில் இதனை காட்டிலும் 725 கார்கள் அதிகமாக 11,831 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த வரிசையில் 3வது இடத்தில் எக்ஸ்டர் 6,068 கார்கள் விற்பனை உடன் உள்ளது.
அதுவே, 2024 ஜனவரியில் 8,229 எக்ஸ்டர் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. 4வது இடத்தை கடந்த மாதத்தில் 5,388 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட அவ்ரா பெற்றுள்ளது. 2024 ஜனவரியிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான அவ்ரா கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஐ10 நியோஸ் இந்த வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐ10 நியோஸ் கார்களின் எண்ணிக்கை 5,311 ஆகும்.

ஹூண்டாய் ஐ20 கார் 4,741 யூனிட்கள் விற்பனை உடன் இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ளது. 7வது மற்றும் 8வது இடங்களில் வெர்னா, அல்கஸார் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,477 மற்றும் 1,310 ஆகும். இவை இல்லாமல், கடந்த ஜனவரியில் 64 டக்ஸன் கார்கள் மற்றும் 16 ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார்களையும் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாயில் இருந்து கோனா எலக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு கோனா எலக்ட்ரிக் கார் கூட விற்பனை செய்யப்படவில்லை. கிரெட்டா எலக்ட்ரிக் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் கிரெட்டா கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









