குடும்பத்துடன் கூட்டம் கூட்டமா வந்து வாங்கும் ஹூண்டாய் கார்... எலக்ட்ரிக்கிலும் கிடைச்சா சும்மா விடுவாங்களா?
ஹூண்டாய் (Hyundai) தென்கொரியா நாட்டை சேர்ந்த உலகின் மிக பெரும் கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனையாகும் ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த மார்ச் மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் தனது வழக்கமான 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு ஹூண்டாய் சறுக்கி இருந்தது. அந்த மாதத்தில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக மஹிந்திரா (Mahindra) 2வது இடத்தை பிடித்து இருந்தது. இந்த நிலையில், இந்த மார்ச் மாதத்தில் ஹூண்டாய் மீண்டும் தனது 2வது இடத்தை சொந்தமாக்கி உள்ளது.

கடந்த மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 820 ஆகும். கார்கள் விற்பனையில் 3வது இடத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தை விட ஹூண்டாயில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை வெறும் 204 யூனிட்கள் மட்டுமே அதிகம் ஆகும்.
கடந்த 2024ஆம் ஆண்டில் சுமார் 53 ஆயிரத்து 1 கார்களை இந்திய சந்தையில் ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கையில், கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் 1,181 கார்களை ஹூண்டாய் குறைவாக விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் கார்கள் விற்பனை 2.2%-இல் சிறிய சறுக்கலை சந்தித்துள்ளது.

ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச்சில் ஹூண்டாய் கார்கள் விற்பனை 8.6% அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்படும் கார்களில் 13.4% ஹூண்டாய் கார்கள் ஆகும். இது முந்தைய ஆண்டின் மார்ச்சை விட 0.9% குறைவாகும். வழக்கம்போல் கடந்த மார்ச் மாதத்திலும் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக கிரெட்டா (Creta) முதலிடத்தை பிடித்துள்ளது.
ஹூண்டாய் காராக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாக கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இந்தியாவின் நம்பர் ஒன் காராக கிரெட்டா உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 59 ஆகும். அதுவே, 2024 மார்ச் மாதத்தில் வெறும் 16 ஆயிரத்து 458 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் பார்க்கும்போது, கிரெட்டா கார்கள் விற்பனை ஆனது 10% அதிகரித்துள்ளது. ஹூண்டாய் வென்யூ (Venue) இதற்கடுத்து 2வது இடத்தில் உள்ளது. கிரெட்டாவை காட்டிலும் அளவில் சிறியதான ஹூண்டாய் எஸ்யூவி காரான வென்யூ கடந்த 2025 மார்ச் மாதத்தில் 10 ஆயிரத்து 441 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதுவே, 2024 மார்ச்சில் 9,614 வென்யூ கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், பார்க்கும்போது, வென்யூ கார்கள் விற்பனை ஆனது 9% அதிகரித்துள்ளது. கிரெட்டா மற்றும் வென்யூ இவை இரண்டும் தான் தற்போதைக்கு இந்தியாவில் ஹூண்டாயின் பிரதானமான விற்பனை கார்களாக உள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்த எக்ஸ்டர் (Exter) இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. வென்யூ விற்பனை செய்யப்பட்டதில் பாதி எண்ணிக்கையிலான எக்ஸ்டர் கார்கள் மட்டுமே கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 5,901 எக்ஸ்டர் கார்கள் கடந்த மார்ச்சில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், 2024 மார்ச் மாதத்தில் 8,475 எக்ஸ்டர் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் 30% குறைவான எண்ணிக்கையில் எக்ஸ்டர் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாயின் விலை குறைவான செடான் (Sedan) ரக காரான அவ்ரா இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் ஓரளவிற்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் செடான் கார்களுள் ஒன்றான ஹூண்டாய் அவ்ரா கடந்த மாதத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 74 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 மார்ச்சில் 4 ஆயிரத்து 883 யூனிட்கள் மட்டுமே இந்த ஹூண்டாய் செடான் கார் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த வகையில், அவ்ரா கார்களின் விற்பனை 4% அதிகரித்துள்ளது.
இதற்கடுத்து 5வது இடத்தில் ஹூண்டாயின் விலை குறைவான கார்களுள் ஒன்றான கிராண்ட் ஐ10 (Grand i10) 4 ஆயிரத்து 990 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில் கிராண்ட் ஐ10 கார்களின் விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்திருந்தது. இதேபோல், 2024 மார்ச்சில் 5,155 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த ஹூண்டாய் ஐ20 எலைட் (i20 Elite) இந்த முறை இந்த லிஸ்ட்டில் 6வது இடத்தை பிடித்துள்ளது.
ஹூண்டாயில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐ20 எலைட் கார்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 452 ஆகும். ஹூண்டாய் கிரெட்டா காரின் 6/7-சீட்டர் வெர்சனான அல்கஸார் (Alcazar) இந்த வரிசையில் 1,431 யூனிட்கள் விற்பனை உடன் 7வது இடத்தில் உள்ளது. 2024 மார்ச்சில் இதனை காட்டிலும் 11 அல்கஸார் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
விலைமிக்க ஹூண்டாய் செடான் காரான வெர்னா இந்த லிஸ்ட்டில் 8வது இடத்தை தனதாக்கி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஹூண்டாய் நிறுவனம் 100 யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யும் கார்களுள் கடைசி இடத்தில் இருப்பது வெர்னா ஆகும். 2024 மார்ச்சில் 1,716 வெர்னா கார்கள் விற்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச்சில் வெறும் 1,364 வெர்னா கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், 89 விலையுயர்ந்த டக்ஸன் கார்களையும், 19 ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார்களையும் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. 2024 மார்ச் சமயத்தில் விற்பனையில் இருந்த கோனா எலக்ட்ரிக் கார் இந்த மார்ச்சில் ஒரு யூனிட் கூட விற்பனை ஆகவில்லை. கிரெட்டா கார்களின் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியமான காரணம், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா எலக்ட்ரிக் (Creta Electric) ஆகும்.


Click it and Unblock the Notifications








