மக்கள் உஷார் ஆகிட்டாங்களா? ஹூண்டாய் கார் வாங்க கூட்டம் குறையுது - ஏப்ரலில் எத்தனை பேர் வாங்கினாங்கனு தெரியுமா?
ஹூண்டாய் (Hyundai), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது சுமார் 50 ஆயிரம் ஹூண்டாய் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், நடந்து முடிந்த கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் கார்கள் விற்பனையில் ஹூண்டாய் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த மாதத்தில் இந்த தென்கொரிய கார் நிறுவனத்தால் இந்தியாவில் 45 ஆயிரம் கார்களை கூட விற்பனை செய்ய முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹூண்டாயில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 374 மட்டுமே ஆகும்.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக 50,201 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் ஹூண்டாய் கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 5 ஆயிரத்து 827 யூனிட்கள் குறைந்துள்ளது. அதாவது, 2024 ஏப்ரலை காட்டிலும் 2025 ஏப்ரலில் 5,827 கார்களை ஹூண்டாய் குறைவாக விற்பனை செய்துள்ளது.
இதை வைத்து, சமீப காலமாக ஹூண்டாய் கார்கள் விற்பனை குறைவாக பதிவாகி வருகிறது என சொல்ல முடியாது. ஏனெனில், இந்த 2025ஆம் ஆண்டின் கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 51 ஆயிரத்து 820 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் ஹூண்டாயின் விற்பனை இவ்வாறு சரிவை கண்டுள்ளது.

இந்த 2025ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரலில் சுமார் 7 ஆயிரத்து 446 கார்களை இந்தியாவில் ஹூண்டாய் குறைவாக விற்பனை செய்துள்ளது. ஹூண்டாயின் உள்நாட்டு கார் விற்பனை ஒருபக்கம் குறைந்தாலும், மறுப்பக்கம் வெளிநாட்டு ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 16 ஆயிரத்து 400 கார்களை ஹூண்டாய் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது 2024 ஏப்ரல் மாத வெளிநாட்டு ஏற்றுமதியை காட்டிலும் 2,900 கார்கள் அதிகமாகும்.
ஏனெனில், அந்த மாதத்தில் 13 ஆயிரத்து 500 கார்களை மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிநாட்டுகளுக்கு ஹூண்டாய் ஏற்றுமதி செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், ஹூண்டாய் கார்கள் ஏற்றுமதி ஆனது 21.48% அதிகரித்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டில் ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்கள் எண்ணிக்கை ஆனது கடந்த 2024ஆம் ஆண்டின் இதே 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 16.2% அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 44,374 கார்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 16,400 கார்கள் என இரண்டையும் சேர்த்து பார்த்தால், கடந்த மாதத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 774 கார்கள் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024 ஏப்ரலில் 63 ஆயிரத்து 701 கார்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்க்கும்போது, ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனை ஆனது 4.59%, அதாவது 2,927 யூனிட்கள் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே கூறியதுபோல் ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை குறைந்திருப்பது ஆகும். தென்கொரியாவில் தோன்றி உலகளவில் ஆதிக்கம் செலுத்திவரும் கார் நிறுவனங்களுள் ஒன்றான ஹூண்டாய் இந்திய சந்தையில் 1996ஆம் ஆண்டில் நுழைந்தது.
இந்த 30 வருடங்களில் சுமார் 90 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இடையில், கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் உள்ளிட்ட சில காரணங்களினால் ஹூண்டாய் கார்கள் உற்பத்தி தடைப்பட்டு இருந்தாலும், 30 வருடங்களுக்கு உள்ளாகவே கார்கள் விற்பனையில் 90 இலட்சம் என்கிற இமாலய மைல்கல்லை ஹூண்டாய் கடந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வருடத்திலும் சராசரியாக 3 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை இந்திய சந்தையில் ஹூண்டாய் விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஹூண்டாய்க்கும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் டாடா கார்கள் விற்பனை ஆனது 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், ஹூண்டாயின் 2வது இடத்திற்கு ஆபத்து போல் தெரிகிறது. டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் வெளிவந்தால்தான், மாருதி சுஸுகிக்கு அடுத்து யாருக்கு 2வது இடம் என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications








