ஹூண்டாய் கார்கள் விற்பனை இந்தியாவில் என்ன இப்படி ஆயிடுச்சு!! கிரெட்டா மட்டும் இல்லையென்றால்...
ஹூண்டாய் (Hyundai) இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளராக வலம் வரும் நிறுவனம். குறிப்பாக, மார்க்கெட் டிரெண்டிற்கு ஏற்ப எஸ்யூவி (SUV) ரக கார்களை விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கும் ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, மொத்தம் 44,001 கார்களை விற்பனை செய்துள்ளது.
இருப்பினும், இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த 49,525 கார்கள் உடன் ஒப்பிடும்போது 11% சரிவைக் காட்டுகிறது. சமீபத்திய ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தங்கள் காரணமாக வாடிக்கையாளர்கள் புதியதாக கார் வாங்குதலை ஒத்திவைத்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த 2025 ஜூலை மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த 43,973 கார்கள் உடன் ஒப்பிடுகையில் கணிசமான வளர்ச்சியை ஹூண்டாய் கண்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய கார்கள் சந்தைப் பங்கைப் பொறுத்தவரை, ஹூண்டாய் 13.4% ஆக பதிவு செய்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் கார்கள் வாங்கியவர்களில் 100இல் 13 பேர் ஹூண்டாய் கார்களை வாங்கியவர்களாவர்.
இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் இருந்த 14% ஐ விட 0.6% குறைவு. ஜிஎஸ்டி 2.0 கொள்கைகளை அமல்படுத்தியதைத் தொடர்ந்து செப்டம்பர் 22 முதல் எக்ஸ்-ஷோரூம் விலைகளை குறைப்பதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. மேலும், பண்டிகை கால சலுகைகளையும் அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான காராகத் தொடர்ந்து கிரெட்டா (Creta) ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக அதிகம் விற்பனையான கார்கள் லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள கிரெட்டா, எஸ்யூவி கார்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த மாதத்தில் 15,925 கிரெட்டா கார்கள் விற்பனையாகி, 2024 ஆகஸ்ட்டில் இருந்த 16,762 யூனிட்களை விட (YoY) 5% சரிவைக் கண்டுள்ளது. அதேபோல், 16,898 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்ட கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையிலும் விற்பனையில் 6% சரிவை கிரெட்டா கண்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது 8,109 யூனிட்களுடன் 11% சரிவை சந்தித்துள்ளது. ஏனெனில், 2024 ஆகஸ்ட்டில் 9,085 வென்யூ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இருப்பினும், ஜூலை 2025 இல் விற்பனையான 8,054 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் இது 1% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
புதிய தலைமுறை வென்யூவை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த ஹூண்டாய் தயாராகி வருகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் (Exter) மாடலும் ஆகஸ்ட் 2024 இல் 6,632 யூனிட்டுகளிலிருந்து 5,061 யூனிட்டுகளாக 24% விற்பனை சரிவை கண்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த ஜூலை உடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட்டில் வென்யூ கார்களின் விற்பனை பெரிய அளவில் மாற்றமின்றி உள்ளது.

வென்யூவுக்கு அடுத்து அதிகம் விற்பனையான ஹூண்டாய் காராக உள்ள அவ்ரா (Aura) காம்பெக்ட் செடான் (Compact Sedan) கார் பிரிவில் நேர்மறையான வளர்ச்சியை கண்டுள்ளது. இதன் விற்பனை 24% YoY மற்றும் 15% MoM என அதிகரித்து 5,336 யூனிட்டுகளை எட்டியது. கடந்த ஆண்டு 2024 ஆகஸ்ட்டில் 4,304 அவ்ரா கார்களும், 2025 ஜூலையில் 4,636 அவ்ரா கார்களும் விற்பனையாகி இருந்தன.
சமீபத்தில், அவ்ரா காரின் புதிய எஸ்.எக்ஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை சேர்த்தது, மேலும் விலையிலும் ஹூண்டாய் சிறிய அதிகரிப்பை கொண்டுவந்தது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 (Grand i10) மற்றும் ஐ20 (i20) ஆகிய மாடல்கள் ஆண்டுக்கு ஆண்டு (YoY) விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்தாலும், மாதாந்திர (MoM) விற்பனை நேர்மறையாக முடிவடைந்துள்ளது.
கிராண்ட் ஐ10 (Grand i10) கடந்த மாதத்தில் 3,908 யூனிட்கள் விற்பனையாகி 27% YoY சரிவை கண்டுள்ளது. இருப்பினும், 2025 ஜூலையில் விற்பனையான 3,560 யூனிட்களுடன் ஒப்பிடும்போது இது 10% MoM வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மறுப்பக்கம், ஐ20 கார் 26% YoY சரிவுடன் கடந்த மாதத்தில் 3,634 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 3,396 ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்ட ஜூலை உடன் ஒப்பிடுகையில் 7% MoM வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அல்கஸார் (Alcazar) காரின் MoM விற்பனையும் ஜூலையில் விற்பனையான 1,419 யூனிட்டுகளிலிருந்து, ஆகஸ்ட்டில் 1,187 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் YoY விற்பனையில் 7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த விற்பனை பட்டியலில் 8வது இடத்தில் வெர்னா (Verna) 771 யூனிட்கள் விற்பனையுடன் 35% YoY மற்றும் 7% MoM சரிவை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளது.
ஹூண்டாய் டக்சன் (Tucson) விற்பனையும் கடுமையாக குறைந்து 57 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட 125 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் 54% YoY சரிவாகும். அதேபோல், MoM விற்பனையும் 32% குறைந்துள்ளது. ஜிஎஸ்டி 2.0 அமலாக்கத்துடன், ஹூண்டாய் டக்சன் காரின் டாப்-ஸ்பெக் சிக்னேச்சர் டீசல் ஏடி AWD வேரியண்ட்டின் விலை ரூ.2,39,303 வரை குறையும் சூழல் உருவாகி உள்ளது.
| No | Hyundai | Aug-25 | Aug-24 | Diff | Growth % YoY | % Share Aug 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Creta / EV | 15,924 | 16,762 | -838 | -5.00 | 36.19 |
| 2 | Venue | 8,109 | 9,085 | -976 | -10.74 | 18.43 |
| 3 | Aura | 5,336 | 4,304 | 1,032 | 23.98 | 12.13 |
| 4 | Exter | 5,061 | 6,632 | -1,571 | -23.69 | 11.50 |
| 5 | i10 NIOS | 3,908 | 5,365 | -1,457 | -27.16 | 8.88 |
| 6 | i20 | 3,634 | 4,913 | -1,279 | -26.03 | 8.26 |
| 7 | Alcazar | 1,187 | 1,105 | 82 | 7.42 | 2.70 |
| 8 | Verna | 771 | 1,194 | -423 | -35.43 | 1.75 |
| 9 | Tucson | 57 | 125 | -68 | -54.40 | 0.13 |
| 10 | IONIQ 5 | 14 | 40 | -26 | -65.00 | 0.03 |
| Total | 44,001 | 49,525 | -5,524 | -11.15 | 100.00 | |
ஹூண்டாய் ஐயோனிக் 5 (Ioniq 5) ஆனது கிரெட்டா இவி உடன் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இதன் விற்பனை கடந்த 2025 ஆகஸ்ட்டில் வெறும் 14 யூனிட்டுகளாகக் குறைந்து 65% YoY மற்றும் 44% MoM சரிவை சந்தித்துள்ளது. 2024 ஆகஸ்ட்டில் 40 ஐயோனிக் 5 கார்களும், 2025 ஜூலையில் 25 ஐயோனிக் 5 கார்களும் விற்பனையாகி இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் மட்டுமின்றி, மற்ற கார் நிறுவனங்களின் விற்பனையும் வரும் மாதங்களில் வெகுவாக உயர உள்ளது. ஆனால், ஜிஎஸ்டி குறைப்புக்காக காத்திருப்பதால் தற்சமயம் வாடிககையாளர்கள் மத்தியில் புது கார் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைக்கப்படுவதை முன்கூட்டியே அறிந்திருந்த சில வாடிக்கையாளர்களால் ஹூண்டாயின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை சற்று சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications









