ஹூண்டாயில் இந்த காரை தான் எல்லாரும் வாங்குறாங்க போல... சேல்ஸ் நம்பர் என்ன சொல்லுது?
ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) விகிதங்கள் கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வந்த பிறகு, பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் மாதந்தோறும் விற்பனை அதிகரிப்பைக் கண்டுள்ளனர். ஹூண்டாய் நிறுவனமும் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையில் கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை செப்டம்பரில் 51,547 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 2024 செப்டம்பர் மாதத்தை விட (YoY) 1% வளர்ச்சியாகும். ஏனெனில், முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் 51,101 ஹூண்டாய் கார்கள் விற்கப்பட்டன. அதே சமயம், ஆகஸ்ட் 2025 இல் விற்கப்பட்ட 44,001 கார்கள் உடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் ஹூண்டாய் கார்கள் விற்பனை 17% உயர்ந்துள்ளது.

கடந்த மாதம், ஹூண்டாய் நிறுவனம் மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி குறைப்பின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது, இதன் மூலம் ஹூண்டாய் கார் விலைகள் ரூ.75,000 வரையில் குறைந்தன. இதனால் தற்சமயம் ஹூண்டாய் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.5.47 லட்சம் முதல் ரூ.20.96 லட்சம் வரை உள்ளன.
2025 செப்டம்பர் மாத ஹூண்டாய் விற்பனை விவரங்களை பொறுத்தவரை, ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான காராக கிரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 18,861 கிரெட்டா கார்கள் விற்பனையாகி உள்ளன. இது முந்தைய ஆண்டின் 15,902 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் 19% வளர்ச்சியாகும்.

அதே சமயம், 15,924 யூனிட்டுகள் விற்கப்பட்ட 2025 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையிலும் கிரெட்டா விற்பனை 18% அதிகரித்துள்ளது. கிரெட்டாவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ள ஹூண்டாய் வென்யூவின் விற்பனையும் கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. 2024 செப்டம்பரில் 10,259 வென்யூ கார்களும், 2025 ஆகஸ்ட்டில் 8,109 வென்யூ கார்களும் விற்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 11,484 வென்யூ கார்கள் விற்கப்பட்டு உள்ளன.
| No | Hyundai | DUSHLARE | Diff | Growth % YoY | % Share Sep 25 | |
|---|---|---|---|---|---|---|
| Sep-25 | Sep-24 | |||||
| 1 | Creta / EV | 18,861 | 15,902 | 2,959 | 18.61 | 36.59 |
| 2 | Venue | 11,484 | 10,259 | 1,225 | 11.94 | 22.28 |
| 3 | Exter | 5,643 | 6,908 | -1,265 | -18.31 | 10.95 |
| 4 | Aura | 5,387 | 4,462 | 925 | 20.73 | 10.45 |
| 5 | Grand i10 | 4,238 | 5,103 | -865 | -16.95 | 8.22 |
| 6 | i20 | 3,884 | 4,428 | -544 | -12.29 | 7.53 |
| 7 | Alcazar | 1,234 | 2,712 | -1,478 | -54.50 | 2.39 |
| 8 | Verna | 725 | 1,198 | -473 | -39.48 | 1.41 |
| 9 | Tucson | 85 | 98 | -13 | -13.27 | 0.16 |
| 10 | IONIQ 5 | 6 | 31 | -25 | -80.65 | 0.01 |
| - | Total | 51,547 | 51,101 | 446 | 0.87 | 100.00 |
இது ஆண்டுக்கு ஆண்டு 12% மற்றும் மாதந்தோறும் 42% அதிகரிப்பைக் குறிக்கிறது. வென்யூவுக்கு அடுத்து எக்ஸ்டர் (Exter) மூன்றாவது இடத்தில் 5,643 யூனிட்டுகள் விற்பனையுடன் உள்ளது. இதன் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை 18% குறைந்தாலும், மாதந்தோறும் 11% வளர்ச்சி கண்டுள்ளது. ஹூண்டாய் அவ்ரா (Aura) 5,387 யூனிட்டுகள் விற்பனையுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இதன் விற்பனை 2024 செப்டம்பரை விட 21% அதிகரித்து 4,462 யூனிட்டுகளில் இருந்து உயர்ந்துள்ளது. மேலும், 2025 ஆகஸ்ட்டை விட 1% வளர்ச்சி கண்டுள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 2024 செப்டம்பரை விட 17% சரிவை சந்தித்தாலும், 2025 ஆகஸ்ட்டை விட விற்பனை 8% அதிகரித்து 4,238 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
ஐ20 (i20) எலைட் காரின் விற்பனை 2024 செப்டம்பர் மாதத்தை விட 12% குறைந்தாலும், 2025 ஆகஸ்ட்டை காட்டிலும் 7% வளர்ச்சி கண்டு 3,884 யூனிட்டுகளாக கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. ஹூண்டாய் அல்கஸார் (Alcazar), வெர்னா (Verna), டக்சன் (Tucson) மற்றும் ஐயோனிக் 5 (IONIQ 5) ஆகிய இதற்கடுத்துள்ள ஹூண்டாய் கார்களின் விற்பனை 2024 செப்டம்பரை காட்டிலும் சரிந்துள்ளது.

கடந்த மாதத்தில் 1,234 யூனிட்கள் விற்பனையாகி உள்ள அல்கஸாரின் விற்பனை 2024 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 54% குறைந்துள்ளது என்றாலும், 2025 ஆகஸ்ட்டை காட்டிலும் 4% வளர்ச்சி கண்டுள்ளது. வெர்னா விற்பனை 2024 செப்டம்பரை விட 39% மற்றும் ஆகஸ்ட்டை விட 6% குறைந்து 725 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது.
| No | Hyundai | Sep-25 | Aug-25 | Diff | Growth % MoM | % Share Aug 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Creta / EV | 18,861 | 15,924 | 2,937 | 18.44 | 36.19 |
| 2 | Venue | 11,484 | 8,109 | 3,375 | 41.62 | 18.43 |
| 3 | Exter | 5,643 | 5,061 | 582 | 11.50 | 11.50 |
| 4 | Aura | 5,387 | 5,336 | 51 | 0.96 | 12.13 |
| 5 | Grand i10 | 4,238 | 3,908 | 330 | 8.44 | 8.88 |
| 6 | i20 | 3,884 | 3,634 | 250 | 6.88 | 8.26 |
| 7 | Alcazar | 1,234 | 1,187 | 47 | 3.96 | 2.70 |
| 8 | Verna | 725 | 771 | -46 | -5.97 | 1.75 |
| 9 | Tucson | 85 | 57 | 28 | 49.12 | 0.13 |
| 10 | IONIQ 5 | 6 | 14 | -8 | -57.14 | 0.03 |
| - | Total | 51,547 | 44,001 | 7,546 | 17.15 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாயின் மொத்த விற்பனையில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், சில கார் மாடல்கள் கடந்த செப்டம்பரில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இதன் மூலமாக இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஹூண்டாய் தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. வரும் மாதங்களில் இன்னும் சில புதிய ஹூண்டாய் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், இந்த தென்கொரிய நிறுவனத்தின் கார்கள் விற்பனை இந்தியாவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









