கஸ்டமர்ஸ் கிடைக்குறது குதிரை கொம்பா இருக்கு! இந்த 2 கார்களை வைத்து பிஸ்னஸை ஓட்டும் ஹூண்டாய்!
ஹூண்டாய் (Hyundai), உலகளவில் பிரபலமான தென்கொரிய கார் நிறுவனம். இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய சுமார் 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யக்கூடிய ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனம் நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாதத்தில் 47 ஆயிரத்து 727 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 50,201 ஹூண்டாய் கார்கள் அந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், ஹூண்டாய் கார்கள் விற்பனை ஆனது 2,474 கார்கள் குறைந்துள்ளது. வழக்கம்போல், கடந்த மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக முதலிடத்தை கிரெட்டா (Creta) பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 16,317 ஆகும். ஆனால், 2024 பிப்ரவரியில் 15,276 கிரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஆயிரத்திற்கும் அதிகமான கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிரெட்டாவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் வென்யூ 10,125 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2024 பிப்ரவரியில் 8,933 வென்யூ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதன்படி பார்க்கும்போது, கடந்த மாதத்தில் 1,192 வென்யூ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள இந்த இரு ஹூண்டாய் கார்களின் விற்பனை மட்டுமே கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் அதிகமாக பதிவாகி உள்ளது. இதற்கடுத்து உள்ள மற்ற ஹூண்டாய் கார்கள் அனைத்தின் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த ஹூண்டாய் கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது சரிந்துள்ளது.
இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தை எக்ஸ்டர் பிடித்துள்ளது. 2024 பிப்ரவரியில் 7,582 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் வெறும் 5,361 எக்ஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்த வகையில் பார்த்தால், சுமார் 2,221 எக்ஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 4வது இடத்தில் ஐ10 நியோஸ் உள்ளது.

இந்த விலை குறைவான ஹூண்டாய் காரின் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை. கடந்த மாதத்தில் 4,940 ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 பிப்ரவரியிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ஐ10 நியோஸ் கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 5வது இடத்தை ஹூண்டாயின் செடான் ரக காரான அவ்ரா 4,797 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. 2024 பிப்ரவரியில் 5,053 அவ்ரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இதேபோல், 2024 பிப்ரவரியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த ஐ20 கார் கடந்த மாதத்தில் 3,627 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு 6வது இடத்தில் உள்ளது. 7வது மற்றும் 8வது இடங்களில் அல்கஸார் மற்றும் வெர்னா கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,264 மற்றும் 1,207 ஆகும். இவை இல்லாமல், 73 டக்ஸன் கார்கள், 16 ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார்களையும் கடந்த மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், கோனா எலக்ட்ரிக் காரையும் இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. ஆனால், அது கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனை ஆகவில்லை. ஆக, மேற்கூறப்பட்ட 10 கார் மாடல்கள் மட்டுமே ஹூண்டாயில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கார் மாடல்களின் விற்பனை குறைந்துக் கொண்டே வருவது நிச்சயமாக ஹூண்டாய்க்கு பெரும் தலைவலியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









