கொரியன் ஹூண்டாயின் பாட்சா இனி பலிக்குமா...? சுத்து போட்டு தாக்கும் இந்திய கார் கம்பெனிகள்!
கடந்த அக்டோபர் மாதத்தைப் போலவே, ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் நவம்பர் மாதத்திலும் தங்களது விற்பனையில் பெரிய அளவில் மாற்றத்தைக் காணவில்லை. வழக்கம்போல் கடந்த மாதத்திலும், கிரெட்டா (Creta) காரையே ஹூண்டாய் பெரிதும் நம்பி இருந்தது. 2025 நவம்பரில் இந்தியாவில் ஹூண்டாய் மொத்தம் 50,340 கார்களை விற்பனை செய்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4% வளர்ச்சியாகும். ஏனெனில், 2024 நவம்பரில் 48,246 ஹூண்டாய் கார்கள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டு இருந்தன. ஏற்கனவே கூறியதுபோல், கடந்த மாதத்திலும் ஹூண்டாயின் முதலிட வாகனமாக கிரெட்டா திகழ்ந்தது. இது கடந்த ஆண்டு நவம்பரை விட 12% அதிகமாக 17,344 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல், ஹூண்டாய் கார்கள் விற்பனை பட்டியலில் வென்யூ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மாதம் 11,645 யூனிட்கள் விற்பனையாகியுள்ள வென்யூ, முந்தைய ஆண்டு நவம்பர் மாதத்தில் 9,754 யூனிட்கள் விற்பனையானதை விட 19% அதிகமாகும். விற்பனையில் டாடா நெக்ஸான் (Tata Nexon) காருக்கு போட்டியாளரான வென்யூ, சமீபத்தில் முழுமையான அப்கிரேடைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹூண்டாய் காரின் உற்பத்தி அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில், ஹூண்டாயின் மொத்த 50,340 கார்கள் விற்பனையில் 5,731 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு அவ்ரா (Aura) உள்ளது. 2024 நவம்பரில் 4,248 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த சப்-4 மீட்டர் செடான் கார் 35% ஈர்க்கக்கூடிய விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Exter) மூன்றாவது இடத்தை மிக சொற்ப வித்தியாசத்தில் தவறவிட்டு, 5,705 யூனிட்கள் விற்பனை உடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. டாடா பன்ச் காருக்கு போட்டி மாடலான எக்ஸ்டர், 2024 நவம்பரில் 5,747 யூனிட்கள் விற்பனையானதுடன் ஒப்பிடுகையில் 1% சரிவை சந்தித்துள்ளது. நவம்பர் மாதத்தில் ஹூண்டாயின் ஹேட்ச்பேக் கார் மாடல்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS) 4,559 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டு நவம்பர் (5,667 யூனிட்கள்) உடன் ஒப்பிடுகையில் 20% சரிவை சந்தித்துள்ளது. ஹூண்டாய் ஐ20 (i20) காரின் விற்பனை இதை விட குறைவாகவே இருந்தது, 3,777 யூனிட் ஐ20 கார்கள் மட்டுமே கடந்த மாதத்தில் விற்பனையாகி உள்ளன.
இது 2024 நவம்பரை விட 4% குறைவான விற்பனையாகும். உள்ளூர் தயாரிப்பு ஹூண்டாய் கார்களில் மோசமான விற்பனை உடன் உள்ளவற்றில், அல்கசார் (Alcazar) முன்னணியில் உள்ளது. பிரபலமான கிரெட்டா கார் அடிப்படையிலான இந்த மூன்று வரிசை எஸ்யூவி காரை கடந்த நவம்பர் மாதத்தில் 840 யூனிட்கள் மட்டுமே ஹூண்டாய் நிறுவனத்தால் விற்க முடிந்துள்ளது.
| Model | November 2025 Sales | November 2024 Sales | Difference |
|---|---|---|---|
| Hyundai Creta | 17,344 | 15,452 | 12% |
| Hyundai Venue | 11,645 | 9,754 | 19% |
| Hyundai Aura | 5,731 | 4,248 | 35% |
| Hyundai Exter | 5,705 | 5,747 | -1% |
| Hyundai Grand i10 | 4,559 | 5,667 | -20% |
| Hyundai i20 | 3,777 | 3,925 | -4% |
| Hyundai Alcazar | 840 | 2,134 | -61% |
| Hyundai Verna | 709 | 1,213 | -42% |
| Hyundai Tucson | 6 | 84 | -93% |
| Hyundai Ioniq 5 | 24 | 22 | 9% |
| Total | 50,340 | 48,246 | 4% |
இது கடந்த ஆண்டு நவம்பர் (2,134 யூனிட்கள்) உடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய 61% சரிவாகும். வெர்னா (Verna) 709 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு, 2024 நவம்பர் மாதத்தை (1,213 யூனிட்கள்) விட 42% சரிவை சந்தித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் கார்களைப் பொறுத்தவரை, ஐயோனிக் 5 (Ioniq 5) எலெக்ட்ரிக் கார் 24 யூனிட்களைப் பதிவு செய்து, 2024 நவம்பரை விட (22 யூனிட்கள்) 9% வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஹூண்டாய் டக்ஸன் (Tucson) நவம்பர் மாத நடுப்பகுதிக்கு முன்னதாகவே விற்பனை நிறுத்தப்பட்டது. ஹூண்டாயின் உலகளாவிய முழு-அளவு எஸ்யூவி காரான டக்ஸன் கடந்த மாதம் வெறும் ஆறு யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. அதுவே, 2024 நவம்பரில் 84 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இது 93% சரிவை குறிக்கிறது. இருப்பினும், ஒரு கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்படும்போது இத்தகைய சரிவு சாதாரணமானது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த நவம்பர் மாத கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கு அடுத்து ஹூண்டாய் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலும் ஹூண்டாய் 2வது இடத்தை பிடிப்பது வழக்கம். கிரெட்டா மற்றும் வென்யூ போன்ற எஸ்யூவி கார்களின் விற்பனை சிறப்பாக இருந்தாலும், கிராண்ட் ஐ10 நியோஸ், அல்கஸார் மற்றும் வெர்னா கார்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவது ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சரிவுக்கு காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications








