29 வருஷத்துக்கு முன்ன தமிழ்நாடு அரசு செய்த தரமான காரியம்! விதையாக வந்த ஹூண்டாய் இப்போ மரமா வளர்ந்து நிற்குது!!
ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான முன்னணி கார் நிறுவனம். குறிப்பாக, உலகின் மிக பெரும் கார் சந்தையாக விளங்கும் இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து 2வது பெரிய கார் நிறுவனமாக அதிக எண்ணிக்கையிலான கார்களை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. நடந்து முடிந்த கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் சற்று சறுகலை சந்தித்து இருப்பினும், இதுவரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த கார்கள் எண்ணிக்கையில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆதிக்கம் மிக பெரியதாக உள்ளது.
இந்தியாவில் மட்டும் இதுவரையில் சுமார் 1.2 கோடிக்கும் அதிகமான கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இத்தனை கோடிக்கணக்கிலான கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருப்பதற்கு காரணம், அந்த அளவிற்கு இந்தியாவில் வருடக்கணக்கில் ஹூண்டாய் நிறுவனம் செயல்பட்டு வருவது ஆகும். இதையெல்லாம் இப்போது ஏன் கூறுகிறோம் என்றால், இந்தியாவிற்குள் நுழைந்து வெற்றிக்கரமாக 29 வருடங்களை ஹூண்டாய் கடந்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (Hyundai Motor India Limited - HMIL) நிறுவனமாக 1996ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் தென்கொரியாவின் ஹூண்டாய் நுழைந்தது. இந்த வகையில் பார்த்தால், இந்திய சந்தையில் 29 வருடங்களை கடந்து 30ஆம் ஆண்டிற்குள் ஹூண்டாய் அடியெடுத்து வைக்கிறது. இந்தியாவில் 29 வருடங்களை நிறைவு செய்துள்ளதை பல்வேறு விதமான சிறு சிறு நிகழ்ச்சிகள் மூலமாக ஹூண்டாய் கொண்டாடி வருகிறது.
இதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உன்சூ கிம் (Unsoo Kim) பேசுகையில், "உலகளாவிய உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் மையமாக இந்தியாவை கற்பனை செய்து பார்த்த ஹூண்டாய், 29 ஆண்டுகளுக்கு முன்பு பரஸ்பர முன்னேற்றம் என்கிற தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவில் தனது பயணத்தை தொடங்கியது.

ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகளை (Smart Mobility Solutions) வழங்குவது மட்டுமல்லாமல், புதுமை, நிலைத்தன்மை மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுடனான ஆழமான தொடர்பை பிரதிபலிக்கும் எதிர்காலம் உள்ளிட்டவற்றுடன் இன்று நாங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். 'மனிதகுலத்திற்கான முன்னேற்றம்' என்ற எங்கள் உலகளாவிய தொலைநோக்கு பார்வையால் வழிநடத்தப்படும் HMIL சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதோடு, தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் தொடர்ந்து மாற்றங்களை வழங்குவோம்" என்றார்.
1996ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்ததுமே ஹூண்டாய் முதலாவதாக கால்பதித்த இடம் எது தெரியுமா? நம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளில் ஹூண்டாய் கவரப்பட்டது. அதன்படி, சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் தனது கார் உற்பத்தி தொழிற்சாலையை ஹூண்டாய் நிறுவியது. இங்கிருந்து சென்னை துறைமுகம் அருகாமையில் உள்ளதால், இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் ஹூண்டாய்க்கு பெரியதாக பிரச்சனை இல்லாமல் உள்ளது.
இந்த 29 வருடங்களில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது ஹூண்டாய் வலுப்படுத்தி உள்ளது. இதனாலேயே, ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றால் ஹூண்டாயின் பிரம்மாண்டமான தொழிற்சாலையை காணலாம். ஹூண்டாயின் இந்த இந்திய தொழிற்சாலை ஆனது இந்தியாவிற்கு மட்டுமின்றி, ஹூண்டாய் தொழிற்சாலை இல்லாத மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கார்களை கொண்டு செல்ல ஹூண்டாய்க்கு பெரிதும் உதவியாக உள்ளது.
மேலும், மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வது செலவு குறைந்ததாக உள்ளதால், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை ஹூண்டாய் நன்கு பயன்படுத்தி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால், இந்தியாவில் ஹூண்டாயின் வளர்ச்சிக்கு இந்த தமிழ்நாட்டு தொழிற்சாலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட்ட இந்த ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை தான் தென்கொரியா நாட்டிற்கு வெளியே ஹூண்டாய் நிறுவிய முதல் தொழிற்சாலை என சொன்னால் நம்ப முடிகிறதா? ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சாண்ட்ரோ (Santro), கிரெட்டா (Creta) கார்களில் இருந்து லேட்டஸ்ட் ஐயோனிக் 5 (Ioniq 5) எலக்ட்ரிக் கார் (Electric Car) வரையில் என பல ஹூண்டாய் கார்களை ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை பார்த்துள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார் ஆனது வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் முழு காராக அசெம்பிள் (Assemble) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் வருடத்திற்கு சுமார் 8.24 லட்ச கார்களை உற்பத்தி செய்ய முடிகிறது. இந்த எண்ணிக்கையை இந்த 2025ஆம் ஆண்டில் இருந்து 10 இலட்சமாக அதிகரிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலேகான் என்கிற பகுதியில் புதியதாக ஒரு தொழிற்சாலையை மிக விரைவில் ஹூண்டாய் திறக்க உள்ளது. வருடத்திற்கு 1.30 லட்ச கார்களை உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு திறன் கொண்ட இந்த தொழிற்சாலையை உருவாக்கியது ஹூண்டாய் நிறுவனம் கிடையாது. இந்திய சந்தையை விட்டு சில வருடங்களுக்கு முன்னரே வெளியேறிவிட்ட ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனம் இந்த தொழிற்சாலையை நிறுவியது.
இந்தியாவை விட்டு சென்றுவிட்டதால், இந்த தொழிற்சாலையை ஹூண்டாய்க்கு ஜெனரல் மோட்டார்ஸ் ஏற்கனவே விற்றுவிட்டது. இந்த தலேகான் தொழிற்சாலையை தனது பயன்பாட்டிற்கு ஏற்ப ஹூண்டாய் மாற்றி வருகிறது. கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ள இந்த மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் ஹூண்டாயின் தலேகான் தொழிற்சாலை திறக்கப்படும். இந்த தொழிற்சாலையை இந்த 2025ஆம் வருடத்திற்குள் திறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் 29 வருடங்களில் 1 கோடியே 27 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 37 லட்சம் கார்களும் அடங்குகின்றன. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கையில் 10 இலட்சத்தை 2010ஆம் ஆண்டில் ஹூண்டாய் எட்டிய நிலையில், அடுத்த 27 இலட்சம் கார்களை வெறும் 15 வருடங்களில் ஏற்றுமதி செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், உலகளவில் வணிகம் செய்துவரும் ஹூண்டாய் நிறுவனத்துக்கு இந்தியா மிக முக்கியமான சந்தை ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டின் நிலவரப்படி, உலகளவில் ஹூண்டாய் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 18.5% ஆகும். இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் விரிவடைந்து வருவதால், எதிர்காலத்தில் இந்தியாவை ஹூண்டாய் பெரிதும் சார்ந்திருக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








