டாடாவின் இடத்தை எடுத்துக் கொண்ட மஹிந்திரா... ஹூண்டாய் காருக்கும் இனி இதற்கும் தான் போட்டியே!
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவி கார் ஆகும். அந்த அளவிற்கு வரவேற்பை பெற்ற கிரெட்டா கார் எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது, இதற்கு டாடா மோட்டார்ஸின் கர்வ் இவி (Curvv EV) எலக்ட்ரிக் கார் தான் முக்கியமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்த்தோம். இப்போதும் கர்வ் இவி தான் முக்கியமான போட்டியாக விளங்குகிறது என்றாலும், அதனை காட்டிலும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) எலக்ட்ரிக் கார் முக்கியமான போட்டியாக விளங்குகிறது.
மஹிந்திராவின் லேட்டஸ்ட் அறிமுகமான பிஇ 6 அதன் கவர்ச்சிக்கரமான தோற்றத்தினால் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா பிஇ 6 இவை இரண்டும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் அறிமுக எலக்ட்ரிக் கார்கள் ஆகும். இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பேட்டரி & ரேஞ்ச்: கிரெட்டா எலக்ட்ரிக் காரை 42kWh மற்றும் 51.4kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உடன் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 42kWh ஆனது 390கிமீ வரையிலான ரேஞ்சையும், 51.4kWh பேட்டரி ஆனது 473கிமீ வரையிலான ரேஞ்சையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
மறுப்பக்கம், மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரிலும் 59kWh மற்றும் 79kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அளவில் பெரியதான பேட்டரிகள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அதற்கேற்ப இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரில் பேட்டரி ரேஞ்சும் அதிகமாக கிடைக்கிறது. 59kWh பேட்டரியில் 556கிமீ ரேஞ்சையும், 79kWh பேட்டரியில் 682கிமீ ரேஞ்சையும் பெறலாம் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

பெர்ஃபார்மன்ஸ் (Performance): கிரெட்டா எலக்ட்ரிக் காரில் 42kWh பேட்டரி உடன் 133 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலையும், 51kWh பேட்டரி உடன் 169 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலையும் பெறலாம் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. 169 பிஎச்பி என்பது கிரெட்டா என்-லைன் காரின் இயக்க ஆற்றலை விட அதிகமாகும். இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டிவிடலாமாம்.
மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஆனது பின் சக்கரங்களின் மூலம் இயங்கும் கார் ஆகும். அதாவது, எலக்ட்ரிக் மோட்டார் வழங்கும் ஆற்றல் ஆனது இந்த காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 59kWh பேட்டரி உடன் 228 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலையும், 79kWh பேட்டரி உடன் 277 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

விலை: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, 51.4kWh பேட்டரி உடன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.23.49 லட்சம் வரையில் செல்கின்றன. மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.90 லட்சத்தில் இருந்து ரூ.26.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா எலக்ட்ரிக் காரை காட்டிலும் பிஇ 6 எலக்ட்ரிக் காரில் அளவில் பெரியதான & பவர்ஃபுல்லான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கேற்ப காரின் விலைகள் அந்த அளவிற்கு அதிகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, தோற்றத்திலும் மஹிந்திரா எலக்ட்ரிக் கார் ஆனது எவரொருவரையும் கவரக்கூடியதாக உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









