எப்படா மார்ச் மாதம் வரும்னு இருக்கு... முதல் மாருதி எலக்ட்ரிக் காருக்கு போட்டியா இப்படியொரு கார் இருக்கா?
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான இது பலத்த யோசனைகளுக்கு பிறகு ஒருவழியாக எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மார்க்கெட்டில் நுழைந்துவிட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியில் தனது முதல் எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வெளியீடு செய்தது. வருகிற மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மாருதி எலக்ட்ரிக் காருக்கு போட்டியான எலக்ட்ரிக் காரும் இதே ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுதான், ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் (Hyundai Creta Electric) ஆகும். இந்த இரு கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றித்தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
வெளிப்பக்க தோற்றம்: தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த இரு எலக்ட்ரிக் கார்களும் வேறுப்பட்டவை ஆகும். கிரெட்டா எலக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட பெட்ரோல்/டீசல் வெர்சனின் தோற்றத்தையே கொண்டுள்ளது. மாருதி இ-விட்டாரா கார் ஷார்ப்பான தோற்றத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்கரங்களுக்கான வளைவானது இ-விட்டாராவில் சதுரமாகவும், கிரெட்டா எலக்ட்ரிக்கில் வளைவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இ-விட்டாரா கார் ஆனது கிரெட்டா எலக்ட்ரிக்கை காட்டிலும் 65மிமீ நீளம் குறைவானது ஆகும். ஆனால், முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது கிரெட்டா எலக்ட்ரிக்கை காட்டிலும் 90மிமீ அதிகமாக உள்ளது. அகலத்தில் இ-விட்டாரா கார் 10மிமீ கூடுதல் அகலமானதாக இருப்பினும், கிரெட்டா எலக்ட்ரிக் கார் இ-விட்டாரவை விட 15மிமீ கூடுதல் உயரமானது ஆகும்.
பவர்டிரெயின் & பேட்டரி: இ-விட்டாராவில் 49kWh மற்றும் 61kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கிரெட்டா எலக்ட்ரிக் காரையும் 42kWh மற்றும் 51.4kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உடன் விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. பேட்டரிக்கு ஏற்ப அவை பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து கிடைக்கும் இயக்க ஆற்றலும் வேறுப்படும்.
49kWh பேட்டரி உடன் இ-விட்டாரா காரில் எந்த அளவிற்கான ரேஞ்சை பெறலாம் என்கிற விபரங்களை மாருதி சுஸுகி வெளியிடவில்லை. அதுவே, 61kWh பேட்டரி உடன் சுமார் 500கிமீ ரேஞ்சை பெறலாம் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. கிரெட்டா எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், 42kWh பேட்டரி உடன் 390கிமீ வரையிலான ரேஞ்சையும், 51.4kWh பேட்டரி உடன் 473கிமீ ரேஞ்சையும் பெறலாம்.
வசதிகள்: இரண்டுமே மாடர்ன் எலக்ட்ரிக் கார்கள் என்பதால், தொழிற்நுட்ப வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கிரெட்டா எலக்ட்ரிக் காரில் குரல் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய பனோராமிக் சன்ரூஃப்-உம், இ-விட்டாராவில் எலக்ட்ரிக் மூலமாக செயல்படக்கூடிய சிங்கிள்-பேன் சன்ரூஃப்-உம் வழங்கப்பட்டுள்ளது. டேஸ்போர்டில் இந்த இரு கார்களும் 10.25-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை பெற்றுள்ளன.
ஆனால், இ-விட்டாராவில் டிரைவருக்கான தகவல்களை வழங்கும் திரை சற்று சிறியதாக 10.1 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாருதி எலக்ட்ரிக் காரில் ஹர்மன் நிறுவனத்தின் சவுண்ட் சிஸ்டமும், கிரெட்டா எலக்ட்ரிக் காரில் 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு எலக்ட்ரிக் கார்களிலும் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், மடக்கும் வசதிக் கொண்ட பின் இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.99 லட்சம்- ரூ.24.38 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், இ-விட்டாராவின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதன் விலையையும் கிரெட்டா எலக்ட்ரிக் காருக்கு இணையாக ரூ.18 லட்சம்- ரூ.23 லட்சம் என்கிற அளவிலேயே எதிர்பார்க்கிறோம். இந்த இரண்டில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








