கொடுத்த காசுக்கு காரை நல்லா பண்ணி வெச்சி இருக்காங்க! ஹூண்டாய் கார் என சொன்னாலும் யாரும் நம்ப மாட்டீங்க!
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் மக்கள் பலரால் விரும்பி வாங்கப்படும் எஸ்யூவி (SUV) ரக கார்களுள் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், இந்தியவில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த கார்களுள் கிரெட்டாவும் ஒன்று. இதனாலேயே கிரெட்டாவை அவ்வப்போது ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. கடைசியாக கடந்த 2024ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கிரெட்டா கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் புதிய கிரெட்டா எலக்ட்ரிக் (Creta Electric) கார் அறிமுகம் செய்யப்பட்டது.
இவ்வாறு புது, புது கிரெட்டா கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், கிரெட்டா கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொள்பவர்களும் இருக்க தான் செய்கின்றனர். அந்த வகையில் இங்கு ஒரு ஹூண்டாய் கிரெட்டா கார் முழுவதுமாக பளபளக்கும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

காரின் பெயிண்ட் மட்டுமின்றி, இந்த கிரெட்டா காரில் இன்னும் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதற்காக, இந்த கிரெட்டா காரை சுற்றிலும் நிறைய பாடி பேனல்கள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. இதனாலேயே இந்த கிரெட்டா கார் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாகவும், பளபளப்பானதாகவும் காட்சியளிக்கிறது.
இந்த மாடிஃபை (Modify) செய்யப்பட்ட கிரெட்டா கார் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த காரின் பின்பக்கத்தில் பெரிய அளவிலான டிஃப்யூஸர் (Diffuser) பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அதேபோல், காரின் பின்பக்கத்தில் பம்பரையும் புதியதாக மாற்றி உள்ளனர். பின்பக்க பம்பருக்கு கீழே குவாட் எக்ஸாஸ்ட் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன் காரின் பின்பக்கத்தில் இரு ஏர் டேம்கள் மற்றும் மழை பெய்வது போன்றதான எஃபெக்ட்டில் எல்இடி விளக்கு உள்ளிட்டவையும் உள்ளன. இவை மட்டுமின்றி, பின்பக்க டிஃப்யூஸர் பகுதியின் மத்தியில் நீல நிறத்திலான டோ ஹூக், பின்பக்க பம்பருக்கு அடிப்பகுதியில் கனார்ட்ஸ் (Canards) மற்றும் பின் பம்பருக்கு கீழ்பகுதியில் எல்இடி டெயில்லைட்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், இந்த கிரெட்டா காரில் ஹூண்டாய் வழங்கிய டெயில்லைட்களை நீக்கிவிட்டு ஆஃப்டர்மார்க்கெட் டெயில்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய டெயில்லைட்கள் ஜெர்மன் லக்சரி கார்கள் தரத்தில் மேட்ரிக்ஸ்-ஸ்டைலில் உள்ளன. பின்பக்க டெக்லிட் பகுதியில் லிப் ஸ்பாய்லர் மற்றும் பெரிய அளவிலான ஸ்பாய்லரும் இந்த மாடிஃபை கிரெட்டா காரின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அப்படியே இந்த கிரெட்டா காரின் பக்கவாட்டிற்கு சென்றால், இந்த ஹூண்டாய் கிரெட்டா கார் ஆனது அகலமான பாடி கிட்டை கொண்டுள்ளது. பின்பக்க மற்றும் முன்பக்க ஃபெண்டர்கள் மோல்டிங் செய்யப்பட்டவைகளாக உள்ளன மற்றும் கூடுதல் சைடு ஸ்கிர்ட்ஸும் உள்ளன. இந்த காரின் பக்கவாட்டில் உள்ள மற்றொரு அசத்தலான அம்சம் என்னவென்றால், அலாய் சக்கரங்கள் ஆகும். 20-இன்ச்சில் நன்கு பெரிய அளவில் உள்ள இந்த அலாய் சக்கரங்கள் தாழ்வான டயர்களை கொண்டுள்ளன.
காரின் உடல்பகுதிக்கு ஏற்ப, அலாய் சக்கரங்களும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, இந்த கிரெட்டா காரின் பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளின் மூடியும் கருப்பு நிறத்தில் உள்ளன. இந்த மாடிஃபை செய்யப்பட்ட கிரெட்டா காரை ஸ்போர்டியரான தோற்றத்தில் காட்டுவதில், இந்த கருப்பு நிற வெளிப்பக்க கண்ணாடிகளின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
இந்த கிரெட்டா காரில் பிரத்யேகமான பொனெட் பகுதியை பெரிய அளவிலான ஸ்கூப் (Scoop) உடன் வழங்கியுள்ளனர். பொதுவாக, இவ்வாறான ஸ்கூப் ஆனது ஸ்போர்ட்ஸ் கார்கள் (Sports Cars)-இல் காரின் ஏரோடைனாமிக்ஸ் (Aerodynamics)-க்காக வழங்கப்படுவது ஆகும். ஆனால், அவ்வாறான ஸ்கூப் அம்சத்தை கிரெட்டா போன்றதான காரில் வழங்கியுள்ளதால், இது இந்த காரில் செயல்படக்கூடியதாக உள்ளதா அல்லது காட்சிக்காக மட்டும் வழங்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
இந்த கிரெட்டா காரின் முன்பக்கத்தில் அளவில் பெரியதான கிரில் மற்றும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பம்பர் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்கலாம். இவை மட்டுமின்றி, காரின் ஹெட்லைட்களையும் மாற்றியுள்ளனர். முன்பக்க பம்பரில் கூடுதலாக ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முன்பக்க பம்பரின் கீழ்பகுதியில் ஹைட்ராலிக் சப்போர்ட் உடன் ஸ்பிளிட்டர் வழங்கப்பட்டுள்ளது.
மற்றப்படி, இந்த கிரெட்டா காரின் உட்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாடிஃபிகேஷன்கள் என்னென்ன என்பது தெரியவரவில்லை. அதேபோல், இந்த கிரெட்டா காரின் என்ஜின் & சஸ்பென்ஷன் உள்ளிட்ட இயந்திர பாகங்களில் ஏதேனும் மாற்றங்களை செய்துள்ளனரா என்பதும் தெரியவில்லை. பெரும்பாலும், அவ்வாறான மாடிஃபிகேஷன்களை எல்லாம் செய்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில், அவற்றை செய்வதற்கு எல்லாம் அதிகம் செலவாகும். கிரெட்டாவில் தற்சமயம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்பன அவை ஆகும். இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் உடன் மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

அதுவே, டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதில், எந்த என்ஜின் & கியர்பாக்ஸ் உடன் இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா உள்ளது என்பது தெரியவில்லை. ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.11 லட்சத்தில் இருந்து ரூ.20.50 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தத்தில் இந்த கிரெட்டா கார் முற்றிலும் பார்ப்பதற்கு வித்தியாசமானதாகவும், அதேநேரம் எவரொருவரையும் எளிதில் கவரக்கூடியதாகவும் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், வழக்கத்தை காட்டிலும் இந்த கிரெட்டா காரை மிகவும் அதிகமாக மாடிஃபை செய்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே மிகவும் சிக்கலான டிசைனை கொண்டதாக இந்த மாடிஃபை செய்யப்பட்ட கிரெட்டா கார் காட்சியளிக்கிறது.
இந்த குறிப்பிட்ட கிரெட்டா கார் ஆனது கர்நாடகாவில் இவ்வாறு மாற்றப்பட்டு உள்ளது. இவ்வாறான கார் மாடிஃபிகேஷன்களுக்கு இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. முறையாக ஆர்டிஓ (RTO)-விடம் அனுமதி வாங்கி இருக்கவில்லை எனில், உங்களது கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது.
தற்போது இணைய கலாச்சாரம் அதிகமாகிவிட்டதால், சாலையில் யாரேனும் இந்த கிரெட்டா காரை வீடியோ எடுத்து போட்டாலே போதும் போலீசார் தங்களது நடவடிக்கையை ஆரம்பித்துவிடுவர். ஆர்டிஓ-இல் முறையாக அனுமதி பெற்றால் போதுமா என நீங்கள் கேட்கலாம்... எந்தவொரு ஆர்டிஓ-விலும் இந்த அளவிற்கு காரை மாடிஃபை செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications









