ஒவ்வொரு மணிநேரமும் 88 பேர் இந்த காரை வாங்குறாங்க... மாருதி, டாடா உருவாக்கும் கார் இல்ல
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சமீப காலத்தில் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்துள்ள கார் என்றால், அது கிரெட்டா என சொல்லலாம். இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் கிரெட்டா கார்கள் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தென்கொரியா உள்பட வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுவந்த கிரெட்டா காரை அப்படியே இந்தியாவிலும் 2015 ஆம் ஆண்டில் ஹூண்டாய் அறிமுகம் செய்தது. அதன்பின், கிரெட்டாவின் புதிய தலைமுறை மாடல் கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் சமயத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அசாதாரணமான சூழலின்போது அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், கிரெட்டாவுக்கு நல்ல வரவேற்பு உடனடியாக கிடைக்க ஆரம்பித்தது. 2020க்கு பின்பும் அவ்வப்போது அப்கிரேட் செய்யப்படுவதால், கிரெட்டா கார்கள் விற்பனையில் பெரியதாக எந்த சரிவும் இதுவரையில் ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், கடந்த சில வருடங்களாக கிரெட்டாவின் விற்பனை உச்சத்தை தொட்டு வருகிறது.
அது, இந்த 2025ஆம் வருடத்திலும் தொடர்ந்துள்ளது. புதிய 2025ஆம் ஆண்டின் முதல் ஜனவரி மாதத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 522 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்ததில் இருந்து, ஒரு மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டது கடந்த 2025 ஜனவரி மாதத்தில் ஆகும்.

இதன் மூலமாக, கடந்த ஜனவரியில் இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி காராக கிரெட்டா விளங்குகிறது. கடந்த 2025 ஜனவரியில் விற்பனை செய்யப்பட்டுள்ள கிரெட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கையான 18,522ஐ வைத்து பார்த்தால், கடந்த மாதத்தில் ஒவ்வொரு மணிநேரத்திலும் இந்தியா முழுவதும் 88க்கும் அதிகமான கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் இதே ஜனவரி மாதத்தில் ஆயிரம் கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த 2025ஆம் ஆண்டு ஜனவரியில் கிரெட்டா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

4 மீட்டர் நீளம் கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி காரான கிரெட்டாவில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் கார் (Electric Car) சமீபத்தில்தான் கடந்த 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-இல் காட்சிக்கு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 ஜனவரியில் 18,522 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், ஒரே மாதத்தில் 20 ஆயிரம் ஹூண்டாய் கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய பிரபலமான காரை எலக்ட்ரிக் வெர்சனில் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே ஹூண்டாய் நிறுவனம் கொண்டு வந்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications









