விஜய்யை பாக்க கூட்ற கூட்டத்தை விட ஷோரூம்ல கூட்டம் அலை மோதுது! இனி பால் பாக்கெட் வாங்க போறதுக்கு கூட கார்தான்!
2025ம் ஆண்டின் அக்டோபர் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த நேரத்தில், கடந்த செப்டம்பர் மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தற்போது தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சேல்ஸ் ரிப்போர்ட்கள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் இம்முறை வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தன. கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி (GST) குறைக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம். இதன் காரணமாக கார்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. எனவே ஒவ்வொரு கார் நிறுவனமும் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளன? என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

விலை வெகுவாக குறைந்துள்ளதால், எதிர்பார்க்கப்பட்டதை போலவே, பல்வேறு நிறுவனங்களும், கார் விற்பனையில் புதிய உச்சங்களை தொட்டுள்ளன. இதில், ஹூண்டாய் இந்தியா (Hyundai India) நிறுவனமும் ஒன்றாகும். ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட், டீம்-பிஎச்பி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி), 70,347 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 10 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த 70,347 கார்களில், இந்தியாவின் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 51,547 ஆகும். எஞ்சிய 18,800 கார்கள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தம் கடந்த செப்டம்பர் மாதத்தில், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஒடடுமொத்தமாக 70,347 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 64,201 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதில், இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 51,101 ஆகும். எஞ்சிய 13,100 கார்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.
ஒட்டுமொத்தத்தில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 64,201 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அது நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 70,347 ஆக உயர்ந்துள்ளது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த விற்பனை என அனைத்துமே வளர்ச்சி கண்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு மொத்தம் 2 காரணங்கள் உள்ளன. ஒன்று, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு. மற்றொன்று பண்டிகை காலம். இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் களை கட்ட தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவும் கார்களின் விற்பனை உயர தொடங்கியுள்ளது.
பொதுவாகவே பண்டிகை காலத்தில் கார்களின் விற்பனை உயரும். தற்போது பண்டிகை காலத்தில், ஜிஎஸ்டி வரி குறைப்பும் அமலுக்கு வந்துள்ளதால், கார்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் உயர தொடங்கியுள்ளது. ஆனால் இது டீசர் மட்டுமே என நாங்கள் கருதுகிறோம். மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது.
அதாவது கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்துதான் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. எனவே வரும் மாதங்களில், குறிப்பாக நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், கார் விற்பனை மேலும் பல்வேறு புதிய உச்சங்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலையில் மொத்தம் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது.
இதில், எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களின் எண்ணிக்கை 7 ஆகும். அவை ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் க்ரெட்டா என் லைன், ஹூண்டாய் வெனியூ, ஹூண்டாய் வெனியூ என் லைன், ஹூண்டாய் எக்ஸ்டர், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் ஹூண்டாய் டூஸான் ஆகியவை ஆகும்.
அதே நேரத்தில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் 3 கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ், ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹூண்டாய் ஐ20 என் லைன் ஆகியவை ஆகும். மறுபக்கம் செடான் செக்மெண்ட்டில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் மொத்தம் 2 கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது.
அவை ஹூண்டாய் அவ்ரா மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகியவை ஆகும். அதே நேரத்தில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 2 எலெக்ட்ரிக் கார்களையும் தற்போது விற்பனை செய்து கொண்டுள்ளது. அவை ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 ஆகியவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீங்கள் புதிதாக கார் வாங்கலாம் என நினைத்து கொண்டிருந்தால், அதற்கு இது மிகச்சரியான நேரம் ஆகும். ஏனெனில் ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் பண்டிகை கால சலுகைகள் ஆகியவற்றின் மூலம், புதிய காரை நீங்கள் மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும். எனவே இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களின் சொந்த கார் கனவை நிஜமாக்க இது மிகச்சரியான தருணம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








