3 வருஷத்துக்கு அப்புறமும் 2வது பேட்டரியை இலவசமா தராங்களா? ஹூண்டாய் கம்பெனிக்கு ரொம்ப தாராள மனசு!
ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5), உலகளவில் பிரபலமான ஹூண்டாய் எலக்ட்ரிக் கார் (Electric Car). உலகிலேயே, பேட்டரியை ஒருமுறை சார்ஜ் நிரப்பினால் அதிக தொலைவிற்கு இயங்கக்கூடிய எலக்ட்ரிக் கார்களுள் ஹூண்டாய் ஐயோனிக் 5 ஒன்றாகும். இத்தகைய ஹூண்டாய் கார் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.46.30 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் முழு காராக உருவாக்கப்பட்டு ஐயோனிக் 5 விற்பனை செய்யப்படுகிறது.
இத்தகைய எலக்ட்ரிக் காரை தென்கொரியா (South Korea)-இல் குறுகிய காலத்தில் மிக நீண்ட தொலைவிற்கு ஓட்டி ஆச்சிரியப்படுத்தி உள்ளனர். மேலும், இந்த சம்பவம் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் நீடித்து உழைக்கும் தரத்தையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. பொதுவாகவே, எலக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று போதிய சார்ஜிங் வசதிகள் இல்லாதது ஆகும்.

அதாவது, பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்களை போன்று எலக்ட்ரிக் கார்களை தொலைத்தூர பயணங்களுக்கு தைரியமாக கொண்டு செல்ல முடிவதில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு நம் நாட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதிகள் எல்லா இடங்களிலும் வரவில்லை. இதனாலேயே, நம் நாட்டில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவோர் தங்களது கார்களை 1 லட்ச கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு ஓட்டுவது அரிதானதாக உள்ளது.
ஆனால், உலக பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக விளங்கும் தென்கொரியாவில் நிலைமையே வேறு. தென்கொரியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னரே உருவாகி விட்டது. அளவில் சிறிய நாடு என்பதால், அங்கு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை நிறைய இடங்களில் கொண்டுவருவதும் எளிதாக இருந்துள்ளது.

இதனால், தென்கொரியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை சிறப்பாக இருப்பது மட்டுமின்றி, மக்கள் நிறைய பேர் பெட்ரோல், டீசல் கார்களையே மொத்தமாக மறந்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு சாட்சியாக, தென்கொரியாவில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார் ஒன்று வெறும் 3.5 வருடங்களில் சுமார் 6 லட்சத்து 66 ஆயிரத்து 255கிமீ தொலைவிற்கு ஓட்டப்பட்டு உள்ளது.
தென்கொரியாவில் இருந்து ஃபேஸ்புக் (Facebook)-இல் வெளியிடப்பட்டுள்ள இந்த ஐயோனிக் 5 கார் தொடர்பான பதிவில், 5 லட்சத்து 80 ஆயிரம் கிமீ தொலைவிற்கு ஓட்டிய பின்னரே காரின் பேட்டரியை மாற்றியதாக தெரிவித்துள்ள இந்த ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் உரிமையாளர், பேட்டரியை ஹூண்டாய் நிறுவனம் இலவசமாக மாற்றிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

3.5 வருடத்தில் 6,66,255கிமீ தொலைவு பயணம் என்றால், ஒவ்வொரு நாளும் சராசரியாக 541கிமீ தொலைவிற்கு காரை ஓட்டி உள்ளார். ஒரு வருடத்தில் ஏறக்குறைய 1.5 லட்ச கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு காரை ஓட்டுகிறார். 3.5 வருடங்களில் இத்தனை லட்ச கிமீ தொலைவு பயணத்திற்கு பின்பும் தென்கொரியாவில் 2வது பேட்டரியை ஹூண்டாய் நிறுவனம் இலவசமாக வழங்கி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 3.5 வருடங்களில் அனைத்து நாட்களிலும் இந்த ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரை ஓட்டியதாக அதன் ஓனர் தெரிவித்தாலும், குறைந்தப்பட்சம் ஞாயிற்றுக்கிழமைகளிலும், தென்கொரிய அரசாங்க விடுமுறை நாட்களிலும் குறைவான தொலைவிற்கே காரை ஓட்டி இருப்பார். அப்படியென்றால், வார நாட்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 550கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு காரை ஓட்டியுள்ளார்.

தென்கொரியா அளவில் சிறிய நாடு என்பதால், மிக நீண்ட தொலைவு பயணங்கள் எல்லாம் அந்த நாட்டில் கிடையாது. ஆக... இந்த ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார் ஓனர் தனது காரை குறிப்பிட்ட பகுதிக்குள் தான் அதிகமாக ஓட்டிக் கொண்டிருக்கிறார். தொலைத்தூர பயணங்களுக்கு கொண்டு சென்றாலும், தென்கொரியா போன்ற நாட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெறுவது ஒன்றும் சிரமமானது கிடையாது.


Click it and Unblock the Notifications









