ஸ்ரீபெரும்புதூரில் சுற்றி திரிந்த விசித்திரமான கார்! ஹூண்டாய் ஃபேக்ட்ரி பக்கத்துலனு சொல்றாங்க!!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து உலகளவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுள் (Electric Cars) ஒன்று, ஐயோனிக் 5 (Ioniq 5) ஆகும். உலகின் பல நாடுகளில் இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலும் கடந்த சில வருடங்களாகவே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எலக்ட்ரிக் காருக்கு வெளிநாடுகளில் ஹூண்டாய் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை (Facelift Update) வழங்கி உள்ளது. அதாவது காரின் முன் & பின்பகுதிகளில் மாற்றங்களை கொண்டுவருவதுடன், காரின் உட்புறத்திலும் புதிய தொழிற்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியாவில் இன்னமும் ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. ஏனெனில், வெளிநாடுகளை போல் இல்லாமல் கடந்த சில வருடங்களாக தான் ஐயோனிக் 5 இந்தியாவில் விற்பனையில் உள்ளது. இருப்பினும், இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் புதிய ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் தயாராகி வருகிறது.

எங்களுக்கு தெரிந்தவரையில், ஆகஸ்ட்- செப்டம்பர் சமயத்தில் தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில் தற்போது இந்த புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகத்திற்கு முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்துள்ளது.
இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களின் மூலம், இந்த சோதனை ஓட்டம் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தான் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்குதான் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார்கள் அசெம்பிள் (Assemble) செய்யப்படுகின்றன.

அதாவது, காரின் பாகங்கள் தென்கொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் அவற்றை ஒன்றாக இணைத்து, முழு காராக உருவாக்கி இந்தியாவில் விற்பனை செய்கின்றனர். இதனை சிகேடி (CKD) என அழைக்கின்றனர். புதிய ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் காரையும் இவ்வாறு சிகேடி முறையில்தான் இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வர் என எதிர்பார்க்கிறோம்.
அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் புதிய ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்றம் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளது. காரின் அலாய் சக்கரங்கள் உள்பட. குறிப்பாக, காரின் முன் & பின்பகுதியின் தோற்றம் துளியும் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் ஹூண்டாய் நிறுவனம் தீவிரமாக உள்ளது.
ஆனால், வெளிநாட்டில் உள்ள ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் தோற்றம் நமக்கு தெரியும் என்பதால், இந்த காரின் தோற்றம் குறித்து ஓரளவிற்கு நமக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது. ஒட்டுமொத்தத்தில், ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் ஏரோடைனாமிக் (Aerodynamic) டிசைனை ஹூண்டாய் மேம்படுத்தி உள்ளது. காரின் முன்பக்கத்தில் ஏர் இண்டேக் (Air Intake) தற்போது இருப்பதை விட அகலமாக்கப்பட்டு உள்ளது.
பின்பக்க பம்பரின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் (Reverse Parking Sensors) தற்சமயம் பின்பக்க பம்பரில் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய ஐயோனிக் 5 காரில் இந்த சென்சார்களின் இடம் மாற்றப்பட்டுள்ளது. பின்பக்க ஸ்பாய்லரின் நீளம் 50மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளதால், இது காரின் செயல்படுதிறனில் எதிரொலிக்கும். ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் காரின் நீளம் 20மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, காரின் பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஐயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் கார் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டாலும், இந்தியர்களுக்கு ஏற்ப இந்த எலக்ட்ரிக் காரில் சில மாற்றங்களை ஹூண்டாய் கொண்டுவரும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இந்தியர்களால் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காராகவே ஐயோனிக் 5 பார்க்கப்படுகிறது.
Source: Rushlane


Click it and Unblock the Notifications








