டாடா, எம்ஜி 2 பேரும் ஓரமா போய் விளையாடுங்க.. ஹூண்டாய் கிரெட்டா இவி வெளியீடு.. ஃபுல் சார்ஜ்ல இவ்ளோ தூரம் போகுமா
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா இவி (Creta EV)-யை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது. கிரெட்டா ஐசிஇ வெர்ஷனுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மிக அமோகமான வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே புத்தாண்டு பரிசாக இந்த காரை இன்று (டிசம்பர் 2) சர்ப்ரைஸாக வெளியீடு செய்திருக்கின்றது. விரைவிலேயே இந்த காரை அது பொது பார்வைக்கும் கொண்டு வர இருக்கின்றது. இந்தியாவில் இன்னும் சில தினங்களில் உலக புகழ்பெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 நடைபெற இருக்கின்றது.
இங்கு வைத்தே இந்த காரை முதன் முதில் காட்சிப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மின்சார கார்கள் பிரிவு போட்டி மிகுந்ததாக மாறி உள்ளது. குறிப்பாக, இந்த பிரிவில் எம்ஜி (MG) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கமே மிகப் பெரிய அளவில் உள்ளது.

முன்னதாக இந்த பிரிவை மொத்தமாக டாடா மோட்டார்ஸே தன் பக்கம் வளைத்துப் போட்டு வைத்திருந்தது. ஆனால், இப்போது எம்ஜி நிறுவனமே இந்த பிரிவை ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றது. இவர்கள் இருவருக்கும் டஃப் கொடுக்கவே விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது ஹூண்டாய் கிரெட்டா இவி.
இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா இவி-யை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. சமீபத்திலேயே இந்த காரின் டீசர் படங்களை அது வெளியிட தொடங்கியது. சொல்லப்போனால் இதுவரை ஒரே ஒரு டீசர் படம் மட்டுமே இந்த காருக்காக வெளியிடப்பட்டது.

இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவர வேண்டும் என்கிற நோக்கில் முழுமையாக கிரெட்டா இவி-யை வெளியீடு செய்திருக்கின்றனர். இதன் வாயிலாக, கிரெட்டா இவி-யின் தோற்றம் எப்படி இருக்கும், முழு சார்ஜில் எவ்வளவு ரேஞ்ச் தரும் மற்றும் என்ன மாதிரியான பேட்டரி பேக்கை அது கொண்டிருக்கும் என்பது போன்ற பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக, அதிக ஆற்றலை உருவாக்கக் கூடிய மின்சார காராகவும் கிரெட்டா இவி தயாராகி இருப்பது இப்போது உறுதியாகி இருக்கின்றது. கிரெட்டா இவிக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 7.9 செகண்டுகளே போதுமாம். இதையே தற்போது வெளியீட்டை முன்னிட்டு வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோவும் உறுதிப்படுத்துகின்றன.

தொடர்ந்து ஓர் முழு சார்ஜில் 473 கிமீ வரை இந்த கார் ரேஞ்ச் தரும் என்பதும் உறுதியாகி உள்ளது. இதுதவிர, இந்தியாவின் பன்முக சாலைக்கு ஏற்ற வாகனமாகவும் கிரெட்டா இவி இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், கிரெட்டா இவி மழைக் காலத்திற்கும் உகந்த வாகனமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
இதேபோல், அட்வான்ஸ்டு அம்சங்களையும் மிக தாராளமாக இது தாங்கியிருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, செல்போனையே சாவியாக பயன்படுத்தும் வசதி, பன்முக டிரைவிங் மோட்கள், குரலுக்கு கட்டுப்படும் வசதிக் கொண்ட பனோரமிக் சன்ரூஃப், வாகனத்தில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும் வசதி என ஏகப்பட்ட அம்சங்களை கிரெட்டா இவி தாங்கியிருக்கின்றது.
கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட காராகவும் இது இருக்கின்றது. முழுமையாக அடைக்கப்பட்ட கிரில், முன் பக்கத்தில் சார்ஜிங் போர்ட், மெல்லிய எல்இடி லைட்டுகள் உள்ளிட்டவையே இந்த காருக்கு அதிக கவர்ச்சியைச் சேர்க்கக் கூடியவையாக இருக்கின்றன. இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு அம்சங்களை இந்த காரின் வெளிப்புற அழகிற்காக ஹூண்டாய் பயன்படுத்தி இருக்கின்றது.
இதேபோல், ரைடை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு 10.25 அங்குல அளவுக் கொண்ட திரைகள் இரண்டும், ஆறு ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா போன்ற அம்சங்களும் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இன்னும் பல்வேறு சிறப்புகளை இந்த மின்சார கார் தாங்கியிருக்கப் போகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டா இவி இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா கர்வ் இவி, எம்ஜி விண்ட்ஸர் இவி மற்றும் இசட்எஸ் இவி போன்றவற்றிற்கு போட்டியாக அமையும். இதுமட்டுமல்ல ஒட்டுமொத்த மின்சார கார் காதலர்களையும் கிரெட்டா இவி தன்பக்கம் வளைத்துப் போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், மொத்த இ-கார் மார்க்கெட்டுக்கும் இதன் வருகையை தலைவலியை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









