சாலையில் சென்றவர்கள் ஒரு நிமிஷம் நின்று பார்த்துட்டு போனாங்க... பின்ன வித்தியாசமான வாகனம் ஆச்சே!!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் வித்தியாசமான வாகனம் இந்தியாவில் சாலையில் சென்ற போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் இல்லாத இந்த வாகனம் மும்பையில் சாலையில் இயக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. ஹூண்டாயில் இருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ள இந்த புதிய வாகனம் ஆனது கியாவின் கார்னிவல் (Carnival) காரின் பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக உள்ளது. இந்த வாகனத்தை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இந்த 2025ஆம் ஆண்டில் பல புதிய வாகனங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. ஆனால், தற்போது மும்பை சாலைகளில் உலாவந்துள்ள ஸ்டாரியா (Staria) என்கிற எம்பிவி கார் (MPV Car) அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே. இந்த வாகனம் தான் தற்போது மும்பையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாகனத்தில் வெள்ளை நிற நம்பர் பிளேட் (Number Plate) பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வெள்ளை நிற நம்பர் பிளேட் ஆனது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களுக்கு தான் வழங்கப்படுவது வழக்கம். ஹூண்டாய் ஸ்டாரியா ஆனது ஏற்கனவே சில வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமானதாக உள்ளது.
ஹூண்டாயின் ஸ்டார்கஸார் (Stargazer) எம்பிவி காரை காட்டிலும் அளவில் சற்று பெரியதாக விளங்கும் ஸ்டாரியா சுமார் 5.3 மீட்டர் நீளம் கொண்டதாக விளங்குகிறது. இது முழுக்க முழுக்க அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற உலகின் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட வாகனம் ஆகும். அது தற்போது இந்தியாவில் காட்சி தந்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

தென்கொரியாவில் இந்த ஹூண்டாய் வாகனத்திற்கு கியாவின் கார்னிவல் ஆனது நேரெதிர் போட்டியாக விளங்குகிறது. மிகவும் அட்வான்ஸான தோற்றம், விசாலமான கேபின் மற்றும் ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகள் உள்ளிட்டவை தான் ஹூண்டாய் ஸ்டாரியாவின் சிறப்பம்சங்கள் ஆகும். இவற்றின் மூலமாக பல வெளிநாட்டினரை கவர்ந்துள்ள ஸ்டாரியா தென்கொரியாவில் டீசல் மற்றும் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டில்தான் ஸ்டாரியா எம்பிவி காரை அப்டேட் செய்திருந்தது. சர்வதேச மார்க்கெட்டில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் புதியதாக ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன் இந்த வாகனத்தில் கடந்த ஆண்டில்தான் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டாரியா ஹைப்ரீட் வாகனத்தில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 242 பிஎச்பி மற்றும் 367 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. தற்போது மும்பையில் உலாவந்துள்ள ஹூண்டாய் ஸ்டாரியா காரில் பெரிய அளவிலான சைடு கண்ணாடிகள், தள்ளக்கூடிய பின் கதவுகளை காணலாம். அதாவது, இது கிட்டத்தட்ட கியா கார்னிவல் காரை தான் ஞாபகப்படுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா கார்னிவலுக்கு கடந்த சில மாதங்களாக நல்ல வரவேற்பு கிடைக்கும் போதிலும், ஹூண்டாய் ஸ்டாரியா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே. இருப்பினும், தற்போது மும்பையில் காட்சி தந்திருப்பதற்கு காரணம், ஏதேனும் தனி நபர் வாங்கி பயன்படுத்தி இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் ஆய்வுகளாக ஓட்டிப் பார்க்கப்பட்டு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









