இந்த கருவியைதான் கிரெட்டா இ-கார் ஓனர்களுக்கு தர போறாங்களா! இந்த காருக்காக டீசரை வெளியிடுவது இதுவே முதல் முறை..
இந்தியாவின் மின்சார கார் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் விரைவிலேயே கிரெட்டா இவி (Creta EV)-யை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு மிக அதிகமாக நிலவுகின்றது. கிரெட்டாவின் ஐசிஇ (Creta ICE) வெர்ஷன் இந்தியாவின் எஸ்யூவி கார் பிரிவில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றது. இதைப் போலவே சந்தையின் இ-கார் பிரிவை கிரெட்டா இவி-யும் மிக அளவில் ஆதிக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப இந்த காரின் பக்கம் இப்போதே இந்தியர்களைக் கவரும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது, ஹூண்டாய் நிறுவனம்.
இதன் அடிப்படையில் கிரெட்டா இவி-யின் டீசர் படத்தை ஹூண்டாய் தற்போது வெளியிட்டு இருக்கின்றது. இதுவே கிரெட்டா இவி-யின் முதல் டீசர் படம் ஆகும். கிரெட்டா இப்போது மின்சார அவதாரத்தில் என்பதை அறிவிக்கின்ற விதமான வாக்கியத்துடனேயே அந்த டீசர் படம் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

அத்துடன், காரை சார்ஜ் செய்ய உதவும் வீட்டு சார்ஜிங் கருவியையும் அந்த டீசர் படத்தில் வெளிக்காட்டி இருக்கின்றனர். இந்த சார்ஜிங் கருவியையே வீடுகளில் வைத்து கிரெட்டா இவி காரை சார்ஜ் செய்துக் கொள்ள அக்காரின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. மேலும், இந்த காரை விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025-இல் வைத்துக் காட்சிப்படுத்தவும் ஹூண்டாய் திட்டமிட்டு இருக்கின்றது.
ஆகையால், அன்றைய தினத்திலேயே காரின் வெளியீடு மற்றும் பல்வேறு முக்கிய விபரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி 17 அன்றே இந்த காரை வெளியீடு செய்ய இருக்கின்றது, ஹூண்டாய். கிரெட்டா ஐசிஇ வெர்ஷனை அப்படியே பிரதிபலிக்கும் வகையிலேயே இதன் தோற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், சில தனித்துவமான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும் கிரெட்டா இவி தன்னுள் தாங்கி இருக்கும். அந்தவகையில், முழுமையாக அடைக்கப்பட்ட தோற்றம் கொண்ட கிரில், பன்முக பிரத்யேக ஹெட்லைட், கவர்ச்சியான டிஆர்எல் லைட் மற்றும் புதிய ஸ்டைலிலான இன்டிகேட்டர் லைட் உள்ளிட்டவை இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுமட்டுமல்ல 10.25 அங்குல அளவிலான டிஜிட்டல் டிரைவருக்கான திரை, 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், போஸ் சவுண்டு சிஸ்டம் மற்றும் குரலால் கட்டுப்படுத்தும் வசதிக் கொண்ட பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் கிரெட்டா இவியில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீலும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
மிக முக்கியமாக இந்த காரில் லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பம் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் வாயிலாக ஆட்டோமேட்டிக் அவசர கால பிரேக்கிங் சிஸ்டம், பிளைண்டு ஸ்பாட் டிடெக்சன் போன்ற வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ரேஞ்சை பொருத்த வரை ஓர் முழு சார்ஜில் 450 கிமீ வரையில் இந்த கார் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிரெட்டா இவி விற்பனைக்கு வரும்பட்சத்தில் எம்ஜி விண்ட்ஸர் இவி, இசட்எஸ் இவி உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அமையும். இதற்கு மட்டுமல்ல விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் மாடலுக்கும் இதன் வருகை போட்டியாக அமைய இருக்கின்றது. இத்தகைய காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாகவே தற்போது டீசர் படம் வெளியிடப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டே கிரெட்டா இவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், இது பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








