இப்போது எல்லாம் லாரிகளில் கார்களை பார்க்க முடியாததற்கு இதுதான் காரணம்... எப்படியெல்லாம் யோசிக்குறாங்க!!
ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor), இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது. மேலும், கார்களை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கொண்டுச்செல்ல இரயில் போக்குவரத்தை பெரிதும் பயன்படுத்தும் கார் நிறுவனங்களுள் ஹூண்டாயும் ஒன்றாகும். இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் இரயில்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்ட ஹூண்டாய் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஒரு நாட்டில் போக்குவரத்து சேவைகள் எந்த அளவிற்கு விரிவடைந்து உள்ளதோ அதற்கு ஏற்பவே அந்த நாட்டின் பொருளாதாரமும் இருக்கும். இந்த விஷயத்தில் நம் இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அதாவது, அந்த அளவிற்கு நம் நாட்டில் பொது போக்குவரத்து சேவைகள் பரந்து விரிந்துள்ளன.

குறிப்பாக, இரயில் சேவை ஆனது நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் இணைக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கிலானோர் இரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். அதேபோல், சரக்கு ஏற்றுமதி/ இறக்குமதிக்கும் இரயில் போக்குவரத்தை பயன்படுத்துவது நம் நாட்டில் அதிகமாக உள்ளது. சமீப ஆண்டுகளாக, பெரிய, பெரிய கார்களை கூட தொழிற்சாலையில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுச்செல்ல அதிகமாக இரயில்களை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
மெல்ல, மெல்ல ஒவ்வொரு கார் நிறுவனமாக ஆரம்பித்து, தற்போது பெரும்பாலான கார் நிறுவனங்கள் கார்களை இடமாற்றம் செய்வதற்கு இரயில்களை பயன்படுத்துகின்றனர். அத்தகைய நிறுவனங்களுள் முக்கியமானது, ஹூண்டாய் மோட்டார் ஆகும். நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரத்து 724 கார்களை இரயில்கள் மூலமாக தொழிற்சாலையில் இருந்து ஷோரூம்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த 1 லட்சத்து 56 ஆயிரத்து 724 கார்களின் எண்ணிக்கை ஆனது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்த விற்பனையாக விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையில் 26 சதவீதம் ஆகும். கனரக லாரிகளில் கார்களை ஏற்றி அனுப்புவதற்கு பதிலாக இவ்வாறு இரயில்கள் மூலமாக அனுப்பியதன் மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரத்து 352 டன் கார்பன்-டை-ஆக்சைடு உமிழப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
அதாவது, கார்களை கனரக வாகனங்களில் அனுப்பியிருந்தால் அந்த வாகனங்கள் வெளியிட்டிருக்கும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவுதான் மேலே குறிப்பிடப்பட்ட 18,352 டன்கள் ஆகும். ஹூண்டாய் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை ஆனது சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர் (Sriperumbudur)-இல் உள்ளது. இந்த தொழிற்சாலை ஆனது வருடத்திற்கு 7.5 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்கள் அதிகமாக இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கடந்த 2021இல் இருந்து 2024 வரையில் இந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 5 லட்சத்து 37 ஆயிரத்து 499 கார்களை இரயில்கள் மூலமாக ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஹூண்டாய் அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலமாக, சுமார் 63 ஆயிரத்து 452 டன் கார்பன்-டை-ஆக்சைடு தடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் மட்டுமில்லாமல், தொழிற்சாலையில் இருந்து கார்களை இரயில்கள் மூலமாக கொண்டு செல்வதை பல கார் நிறுவனங்கள் பின்பற்ற துவங்கியுள்ளன. இதன் மூலமாக, ஏற்றுமதி/ இறக்குமதி வேலைகள் பெரிய அளவில் மிச்சமாகுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பன்-டை-ஆக்சைடு வாயு வாகனங்களில் இருந்து வெளியேறுவதும் பெரிய அளவில் தடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








