உள்ள நுழைஞ்சா கப்பலோட கேபினுக்குள் நுழைஞ்ச ஃபீல் கிடைக்கும் போலிருக்கே! தரமான காரைதான் ஹூண்டாய் கொண்டு வருது!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், சீக்கிரமே இந்தியாவில் அதன் கிரெட்டா (Creta) கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. விரைவில் நாட்டில் தொடங்க இருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாகவே இந்த காரை அதிகாரப்பூர்வமாக ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அன்றைய தினமே அதன் விலைகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே விற்பனைக்குக் வருவதற்கு முன்னரே இந்த காரின் பக்கம் இந்தியர்களை வளைத்துப் போடும் முயற்சியில் ஹூண்டாய் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் சமீப சில நாட்களாக கிரெட்டா இவி-யின் டீசர் படம் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலை அது வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில், இப்போது புதிதாக கிரெட்டா இவி காரின் உட்பக்கத்தை விவரிக்கக் கூடிய படங்களை ஹூண்டாய் வெளியிட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக கிரெட்டா இவியின் உள்பக்கம் நவீன கால சொகுசு கப்பலுக்கு இணையான கேபினைக் கொண்டிருக்கும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இதன் லுக் மட்டுமல்ல ரைடு அனுபவமும் கப்பலில் பயணிக்கின்ற மாதிரியானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கேற்ப அம்சங்களை இந்த கார் மாடல் அதிகளவில் தாங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மிக முக்கியமாக புதிய கிரெட்டா இவி-யில் இரண்டு 10.25 அங்குல திரைகள் வழங்கப்பட இருப்பது, தற்போது வெளியாகி இருக்கும் படங்களின் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிரைவருக்கான திரையாகவும் செயல்படும்.
இத்துடன், பன்முக கன்ட்ரோல்களைக் கொண்ட மூன்று ஸ்போக் ஸ்டியரிங் வீல், டச் ஸ்கிரீன் வசதிக் கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் எட்டு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட பவர்டு இருக்கை உள்ளிட்டவை இடம் பெற இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. இதுமட்டுமல்ல இரண்டு விதமான பிரீமியம் நிறங்களால் இந்த காரின் கேபின் அலங்கரிக்கப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது.
கிராணைட் கிரே (Granite Gray) மற்றும் டார்க் நவி (Dark Navy) ஆகிய நிற தேர்வுகளிலேயே கிரெட்டா இவியின் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஞாபக திறன் கொண்ட டிரைவர் இருக்கை (ஏற்கனவே பழக்கப்பட்ட டிரைவருக்கு ஏற்ப பொசிஷன் அட்ஜெஸ்ட் ஆகிக் கொள்ளும்), பாஸ் மோட், காரின் முன் பக்கத்தில் 22 லிட்டர் அளவுள்ள ஸ்டோரேஜ், பின் பக்கத்தில் 433 லிட்டர் ஸ்டோரேஜ் உள்ளிட்டவையும் கிரெட்டா இவியில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
ஆகையால், இந்தியர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் பல இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பதும் இந்த படங்கள் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. எனவே இந்திய மின்சார கார் காதலர்களின் பிரியமான எலெக்ட்ரிக் காராக கிரெட்டா இவி மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் ஓர் முழு சார்ஜில் 450 கிமீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் பல முன்னணி பிராண்டுகளின் எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மிகப் பெரிய தலைவலியான சூழலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, டாடா கர்வ் இவி, எம்ஜி விண்ட்ஸர் இவி மற்றும் இசட்எஸ் இவி ஆகியவற்றிற்கே இதன் வருகை மிகப் பெரிய போட்டியாக மாறும் என யூகிக்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மின்சார கார் பிரிவை மொத்தமாக தன் வசம் வளைத்துப் போட்டு வருகின்றது, எம்ஜி மோட்டார். இந்த நிலையிலேயே இந்தியாவின் மின்சார கார் மார்க்கெட்டை குறி வைத்து ஹூண்டாய் கிரெட்டா இவி-யை களமிறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. கிரெட்டா ஐசிஇ வெர்ஷனைப் போலவே இதுவும் விற்பனையில் எண்ணற்ற சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








