110 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி குறைய போகுதா!.. இதனால் யார் யாரெல்லாம் பலனைடய போறாங்க தெரியுமா?
இந்திய அரசாங்கம் மின்சார வாகனம் (EV)-களுக்காக புதிய கொள்கைளை அறிவிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கின்ற விதமான அறிவிப்புகள் பல இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் டெஸ்லா போன்ற முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்களே பெரும் பலனை அடைய இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்தியாவில் வெகு விரைவில் தன்னுடைய கால்தடத்தைப் பதிக்க இருக்கின்றது.
இதற்கான பணிகளையும் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதுமட்டுமல்ல, அது பணிக்கு ஆட்களைத் தேர்வுச் செய்யும் வேலைகளையும் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

Source: economictimes எனவே விரைவில் இந்தியாவில் தன்னுடைய உற்பத்தி ஆலையை அமைத்து நாட்டிலே மின்சார கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதற்கு முன்னதாகவே அது தன்னுடைய மின்சார கார்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்தியர்களுக்கு விற்பனைக்கு வழங்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் அது அதன் தயாரிப்புகளை குறைவான விலையில் விற்பனைக்கு வழங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கின்றது. ஆனால், இதற்கு இந்தியா விதித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய இறக்குமதி பெரும் தடைக் கல்லாக உள்ளது. இதை உடைப்பதற்கான பணிகளையே மத்திய அரசு தற்போது களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசாங்கம் மிகக் குறைவான இறக்குமதி வரியை விதிக்க இருக்கின்றது. இப்போது 110 சதவீதம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படுகின்றன. இதை 15 சதவீதமாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டு இருக்கின்றது. ஆனால், அரசின் இந்த திட்டத்தில் பலனடைய குறிப்பிட்ட அந்த மின்சார கார் உற்பத்தி நிறுவனம் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
ரூ. 4,150 கோடி அல்லது அதற்கும் அதிக மதிப்பில் அவர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்கிற மாபெரும் விதியையே அரசு நிபந்தனையாக முன் வைத்திருக்கின்றது. இந்த மாபெரும் முதலீட்டை ஓர் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யும் எனில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் மற்றும் நாட்டின் உற்பத்தி திறன் மேம்படும் என அரசு நம்புகின்றது.
இதன் அடிப்படையிலேயே இந்த நிபந்தனையை மத்திய அரசாங்கம் முன் வைத்திருக்கின்றது. டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இது அவ்வளவு பெரிய தடையாக இருக்காது என்றே நம்பப்படுகின்றது. இதுமட்டுமல்ல நிறுவனங்களின் தங்களின் டர்ன்ஓவரை ஆண்டுக்கு ஆண்டு இரட்டிப்பாக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் அரசு முன் வைத்திருக்கின்றது. இவ்வாறு நிறுவனம் வளர்ந்தால் மட்டுமே இந்தியாவில் அந்த நிறுவனங்களின் நிலையான பொருளாதார பங்களிப்பை நாட்டில் உறுதி செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் மட்டுமல்ல தமிழகத்தில் தன்னுடைய மிகப் பெரிய மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைத்துக் கொண்டிருக்கும் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இதன் வாயிலாகப் பெரிய பலனை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல, அரசு இந்த வரி குறைப்பு நடவடிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் இவர்களை போல இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








