தீபாவளிக்கு ஒரு நாள் முன்னாடி இருந்தே ஆரம்பிச்சிட்டாங்க! 1 லட்சம் விற்பனையை எல்லாம் எதிர்பார்க்கவே இல்ல!
இந்தியாவின் வாகனச் சந்தையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனெனில், பொதுவாகவே தீபாவளியின் போதுதான் பலரும் தங்களது புதிய வாகனங்களை வாங்குவர். ஆனால் இந்த தீபாவளிக்கு இதுவரையில் எந்த ஆண்டிலும் இல்லாத உட்சப்பட்சமாக அதிக வாகனங்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், மத்திய அரசாங்கம் தீபாவளி பரிசாக கடந்த செப்டம்பர் மாதத்திலேயே சிறிய ரக கார் & பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை குறைத்தது. இதனாலேயே தீபாவளிக்கு முந்தைய நாளிலேயே இந்தியாவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தொழில் துறை வட்டாரங்களின்படி, இது கடந்த பல ஆண்டுகளில் இல்லாத ஒரு சிறந்த விற்பனையாகும். இந்த மிகப்பெரிய விற்பனை ஆனது பண்டிகை கால தேவை மற்றும் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களின் நேர்மறையான தாக்கத்தால் ஏற்பட்டுள்ளது. தொழில் துறை மதிப்பீடுகளின்படி, சராசரியாக ஒரு வாகனத்தின் விலை ரூ.8.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும் நிலையில், இந்த ஒரு நாள் விநியோகங்கள் சுமார் ரூ.8,500 கோடி முதல் ரூ.10,000 கோடி வரையிலான விற்பனையாகப் பதிவாகியுள்ளன.
மாருதி சுஸுகி இந்தியா (MSIL), டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா (HMIL) போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்த பண்டிகைக் காலத்தில் சாதனை விற்பனையை அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்களின் நம்பிக்கை உச்சத்தை எட்டியதே இதற்குக் காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட்டின் தலைமை வர்த்தக அதிகாரி அமித் காமத் கூறுகையில், "இந்த ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் விநியோகங்கள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு பரப்பப்பட்டு, மங்களகரமான முகூர்த்த நேரங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளன. ஒட்டுமொத்த தேவை வலுவாக உள்ளது.
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் மேலும் நேர்மறையான உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 25,000 வாகனங்களுக்கு மேல் விநியோகிப்போம் என எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்துள்ளார். ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தருண் கார்க் அவர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

"வாடிக்கையாளர்கள் மத்தியில் வலுவான தேவை காணப்பட்டுள்ளது. ஹூண்டாய் கார்கள் விற்பனை கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்து, சுமார் 14,000 கார்கள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வாகனங்களுக்கான தேவை இந்த தீபாவளியில் வெகுவாக அதிகரிக்கும் என்று இந்த நிறுவனங்கள் முன்னரே கணித்ததினால்தான் கூடுதலாக சலுகைகளையும் அறிவித்துள்ளன.
அதாவது, ஜிஎஸ்டி 2.0 திருத்தம் மற்றும் பண்டிகை கால தேவை உடன் சேர்த்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் சலுகைகளையும் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே அறிவித்து, வழங்கி வருகின்றன. இது இல்லாமல், ஒவ்வொரு டீலர்கள் லெவல்களிலும் கணிசமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக, இந்த பண்டிகைக் காலம் வாகனத் துறையை மட்டுமல்லாமல், பிற துறைகளிலும் நுகர்வோர் செலவினங்களை அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்கள் முதல் நகைகள் வரை, தீபாவளி பண்டிகை இந்தியாவின் சில்லறை வர்த்தகத்திற்கு ஒரு நம்பிக்கையான அலையைக் கொண்டு வந்துள்ளது. பண்டிகை மனப்பான்மை, பொருளாதார மீட்சி மற்றும் ஜிஎஸ்டி 2.0-இன் கீழ் வரி சீர்திருத்தங்கள் ஆகியவை இணைந்து நுகர்வோர் உணர்வை மீண்டும் தூண்டியுள்ளன. இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் சுறுசுறுப்பான பண்டிகைக் காலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications









