வெறும் 10 லட்ச ரூபாய் காராக இருந்தாலும், இந்த கேமரா உடன் கிடைக்கும்! இருக்கும் இடத்தில் இருந்தே பார்க்கலாம்!
கார்களில் பலரும் எதிர்பார்க்கும் அடிப்படை அம்சமாக மாறிவரும் ஒன்று, 360-டிகிரி கேமரா (360-Degree Camera) வசதி ஆகும். காரை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை காருக்குள் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டே பார்க்கலாம் எனும்போது அது பலரும் பிடித்துள்ளது. இதற்காக காரின் இன்ஃபோடெயின்மெண்ட் (Infotainment) திரையும், காரை சுற்றிலும் பொருத்தப்படும் கேமராக்களும் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
இத்தகைய 360-டிகிரி கேமரா வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்த கார்களில் அனைத்து வேரியண்ட்களிலும் 360-டிகிரி கேமரா வசதி வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. அவை என்னென்ன என்பதையும் இங்கே குறிப்பிட்டு உள்ளோம்.

மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் வாங்கப்படும் செடான் (Sedan) ரக காராக டிசைர் உள்ளது. 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பெக்ட்டான செடான் காரான இது மார்க்கெட்டில் பிரபலமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Swift) காரின் செடான் வெர்சன் ஆகும்.
டிசைர் காரில் கடந்த 2024ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக 360-டிகிரி கேமரா வழங்கப்பட்டது. ஆனால், டிசைர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 360-டிகிரி கேமரா வழங்கப்படுவது இல்லை. விலைமிக்க இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் (ZXi Plus) வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) தற்சமயம் ரூ.9.69 லட்சமாக உள்ளது.

நிசான் மேக்னைட் (Nissan Magnite): ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் இந்திய மார்க்கெட்டில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்கும் முயற்சியாக மிகுந்த நம்பிக்கை உடன் கடந்த 2020ஆம் ஆண்டில் மேக்னைட் காரை அறிமுகம் செய்தது. ஆனால், மேக்னைட் மூலமாக இந்திய மார்க்கெட்டில் 2வது இன்னிங்ஸ் கிடைக்கும் என எதிர்பார்த்த நிசானில் இருந்து தற்சமயம் வெறும் இரு கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் மேக்னைட் ஒன்று.
இத்தகைய ஜப்பானிய-ஸ்டைல் நிசான் காரின் டெக்னா (Tekna) வேரியண்ட்டில் இருந்து 360-டிகிரி கேமரா வசதி வழங்கப்படுகிறது. காருக்கு மேலே இருந்து பறவை போன்று 360 கோணத்திற்கும் காரை மேக்னைட் காரில் பார்க்க முடிகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் 360-டிகிரி கேமரா உடன் கிடைக்கும் காராக மேக்னைட் உள்ளது. இந்த காரின் டெக்னா வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.90 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

மாருதி சுஸுகி பலேனோ/ டொயோட்டா கிளான்ஸா (Maruti Suzuki Baleno/ Toyota Glanza): இந்த இரு கார்களையும் ஒன்றாக பார்ப்பதற்கு காரணம், இவை இரண்டும் ஒரே மாதிரியான டிசைனில் உருவாக்கப்படுவதினால் ஆகும். அதாவாது, பலேனோவின் ரீ-பேட்ஜ்டு வெர்சன் தான், கிளான்ஸா ஆகும்.

பலேனோ மற்றும் கிளான்ஸா கார்களில் ஆரம்பத்தில் இருந்தே 360-டிகிரி கேமரா வழங்கப்படுவது இல்லை. இடையில் ஒருமுறை இரண்டும் அப்கிரேட் செய்யப்பட்ட போது அறிமுகம் செய்யப்பட்டது. பலேனோ காரில் ஆல்பா வேரியண்ட்டில் இருந்தும், கிளான்ஸா காரில் வி வேரியண்ட்டில் இருந்தும் 360-டிகிரி கேமரா வழங்கப்படுகிறது. தற்சமயம், இந்த வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரும் விலைகள் முறையே ரூ.9.82 லட்சம் மற்றும் ரூ.9.92 லட்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரில் 360-டிகிரி கேமரா ஆனது ஆடம்பர அம்சம் மட்டுமில்லை; விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் அம்சமும் கூட. குறிப்பாக, காரில் ரிவர்ஸில் வரும்போது, காரை சுற்றிலும் பார்க்க உதவும் இத்தகைய கேமராக்களினால் நிறைய விபத்துகள் தடுக்கப்பட்டு உள்ளன. இதனால், இத்தகைய வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கார் வாங்க நினைப்பவர்கள் மேலே கூறப்பட்ட கார்களுள் ஒன்றை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









