10 லட்ச ரூபாயில் கிடைக்கும் காரில் இதை எல்லாம் எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க! 2 கார்கள் தான் சேல்ஸில் இருக்கு
இன்றைய கால மாடர்ன் கார்களில் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறிவரும் ஒன்று, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே (Heads-up Display) ஆகும். சரியாக ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்பக்கத்தில் முழுவதும் கண்ணாடியால் ஆன திரை ஆக ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே வழங்கப்படுகிறது. இந்த திரையின் மூலமாக, கார் எவ்வளவு வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது? எரிபொருள் எந்த அளவிற்கு உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்கள் டிரைவருக்கு சாலையில் இருந்து பார்வையை எடுக்காமலே கிடைக்கிறது.
முழுக்க முழுக்க கண்ணாடியால் ஆனதாக இந்த டிஸ்பிளே வழங்கப்படுவதால், கார் ஓட்டுனரின் பார்வையில் இருந்து எதுவும் மறைவது இல்லை. இத்தகைய ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே உடன் இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக பலேனோ விளங்குகிறது. இருப்பினும், பலேனோ காரை ரூ.10 லட்சத்திற்குள் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே உடன் வாங்கலாம். இதனாலேயே இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான மக்கள் மிகவும் விருப்பத்துடன் பலேனோ காரை வாங்குகின்றனர்.
பலேனோ காரில் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே ஆனது ஆல்பா (Alpha) வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது. இந்த ஆல்பா வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆனது மேனுவல் கியர்பாக்ஸ் (Manual Gearbox) உடன் ரூ.9.46 லட்சமாகவும், ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் உடன் ரூ.9.96 லட்சமாகவும் உள்ளது.

எந்த கியர்பாக்ஸ் உடன் வாங்கினாலும், பலேனோ ஆல்ஃபா காரில் பொருத்தப்படுவது 1.2 லிட்டர் ட்யூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் ஆகும். இந்த காரில் வழங்கப்படும் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே மூலமாக, கார் இயங்கும் வேகம், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் டச்சோமீட்டர் அளவீடுகளை பெறலாம். இதில், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ஆனது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் காரை வாங்கினால்தான் கிடைக்கும்.
டொயோட்டா கிளான்சா (Toyota Glanza): மாருதி சுஸுகி பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா ஹேட்ச்பேக் கார் தான், கிளான்சா ஆகும். பலேனோ அளவிற்கு இல்லையென்றாலும், பலேனோவை ஒத்த வடிவத்தில் உருவாக்கப்படுவதினாலேயே கிளான்சாவின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் தற்போதைக்கு சிறப்பாக விற்பனையாகும் டொயோட்டா காராக கிளான்சா விளங்குகிறது.

பலேனோ உடன் நிறைய பாகங்களை கிளான்சா பகிர்ந்துக் கொள்கிறது. அந்த வகையில், பலேனோவில் வழங்கப்படும் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே அப்படியே கிளான்சா காரிலும் வழங்கப்படுகிறது. கிளான்சா காரில் வி வேரியண்ட்டில் இந்த டிஸ்பிளே வழங்கப்படுகிறது. பலேனோவின் ஆல்பா வேரியண்ட்டை போன்று, கிளான்சாவின் வி வேரியண்ட்டையும் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம்.
மேலும், பலேனோவில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் கிளான்சா காரிலும் வழங்கப்படுகிறது. இதனாலேயே, விலையில் பலேனோவிற்கும், கிளான்சாவிற்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இல்லை. அதாவது, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே உடன் கிளான்சா காரையும் ரூ.10 லட்சத்திற்கு உள்ளான எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே இருப்பது காரின் உட்புறத்தில் அழகு சேர்ப்பதுடன், பாதுகாப்பான பயணத்திற்கும் வழிவகுக்கிறது. ஏனெனில், சாலையில் இருந்து ஒரு வினாடி பார்வையை விலக்கியதால் நிகழ்ந்த கார் விபத்துகள் ஏராளமானவை உள்ளன. ஆதலால், இத்தகைய அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்களை முடிந்தவரையில் பயன்படுத்த வேண்டும். இந்த டிஸ்பிளேவை பயன்படுத்துவதற்கு முன்பக்க விண்ட்ஷீல்டு கண்ணாடியை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். விண்ட்ஷீல்டு கண்ணாடியை அவ்வப்போது சுத்தம் செய்யாமல் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளேவை பயன்படுத்தும் கார் ஓட்டிகளையும் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications









