மீண்டும் உயிர் பெற்று வந்த டாடா கார் தான் இதில் ஹைலைட்டே...!! 2025இல் கார் மார்க்கெட் தலைக்கீழா மாறி இருக்கு!
2025ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் வாகனத் துறையைப் பொறுத்தவரை ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த 11 மாதங்களில் பல முக்கிய புதிய கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க எலெக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தியாளரான டெஸ்லாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வருகை, வியட்நாம் நாட்டை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன பிராண்டான வின்ஃபாஸ்ட் (VinFast) இந்தியாவுக்குள் நுழைந்தது மற்றும் புகழ்பெற்ற எஸ்யூவி (SUV) காரான டாடா சியராவின் பிரம்மாண்டமான மறுவருகை ஆகியவை இதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
டாப்-5: வியட்நாமைச் சேர்ந்த கார் பிராண்டான வின்ஃபாஸ்ட், தனது 'வி.எஃப்6' (VF 6) மற்றும் 'வி.எஃப்7' (VF 7) எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தி இந்திய சந்தையில் கடந்த 2025 ஜனவரியில் நுழைந்தது. தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள அதன் ஆலையில் இந்த கார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்படுகின்றன. 5 இருக்கைகள் கொண்ட வின்ஃபாஸ்ட் விஎஃப்6 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ரூ.16.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது.

இது 59.6 kWh பேட்டரி பேக்குடன் 468கிமீ தூரம் வரை பயணிக்கக்கூடியது. வின்ஃபாஸ்ட் விஎஃப்7 ஒரு ஸ்போர்ட்டியான எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இதன் விலை ரூ.20.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 59.6 kWh மற்றும் 70.8 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது அதிகபட்சமாக 532கிமீ தூரம் வரை இயங்கும் திறன் கொண்டது.
டாப்-4: இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் எஸ்யூவி காரான ஹூண்டாய் கிரெட்டா, இந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ நிகழ்வில் கிரெட்டா இவி அறிமுகமானது. கிரெட்டா இவி 42 kWh மற்றும் நீண்ட தூரம் செல்லக்கூடிய 51.4 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலைகள் ரூ.18.02 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றன. சிறிய பேட்டரி பேக் அதிகபட்சமாக 420 கிமீ தூரமும், பெரிய பேட்டரி பேக் சுமார் 510 கிமீ தூரமும் ரேஞ்சை வழங்குகின்றன. இந்த காரில் இரட்டை ஸ்கிரீன் செட்-அப்கள், வென்டிலேட்டட் இருக்கைகள், லெவல்-2 ADAS அம்சங்கள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஷிஃப்ட்-பை-வயர் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற பல அம்சங்களும் உள்ளன.
டாப்-3: டாடா மோட்டார்ஸ் தனது ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரை 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை ரூ.21.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். யானை பாறையில் ஏறும் சவால் மற்றும் பியாஸ் நதியை கடக்கும் சவால் மூலம் தனது ஆஃப்-ரோடு (Off-road) திறன்களை வெளிப்படுத்திய ஹாரியர் இவி சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இது 65 kWh மற்றும் 75 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் மற்றும் ரியர்-வீல்-டிரைவ் & ஆல்-வீல்-டிரைவ் என இரண்டு டிரைவ்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த டாடா எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக 238 பிஎஸ் ஆற்றலையும், 504 என்.எம் டார்க் திறனிலும் இயங்கக்கூடியதாக உள்ளது. ஹாரியர் இவி 627 கிமீ வரை (நிஜ உலகில் 504 கிமீ வரை) அதிகபட்ச ரேஞ்சை வழங்குகிறது.
டாப்-2: உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் பிராண்டுகளில் ஒன்றான டெஸ்லா, 2025ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தது. அமெரிக்க இவி கார் தயாரிப்பு நிறுவனமான இது தனது மாடல் ஒய் (Model Y) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் ரூ.59.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இது ஒரு எலக்ட்ரிக் செடான் கார் ஆகும்.

இது முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 661கிமீ தூரம் வரை செல்லக்கூடியது. இதில் முழுமையாக ஆட்டோமேட்டிக்காக இயங்கும் திறன், ஃபாஸ்ட் சார்ஜிங், 15.4 இன்ச் சென்டர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 8 இன்ச் ரியர் டிஸ்ப்ளே மற்றும் 19 இன்ச் அலாய் சக்கரங்கள் போன்ற சிறம்பம்சங்கள் உள்ளன. இந்த காருக்கு 4 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ அடிப்படை வாரண்டி வழங்கப்படுகிறது.
டாப்-1: 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய கார் அறிமுகம் டாடா சியரா (Tata sierra) ஆகும். இது 1990களின் புகழ்பெற்ற எஸ்யூவி காரின் மறுவருகை ஆகும். ரூ.11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் இந்தக் கார், நவீன வடிவமைப்பு அம்சங்கள், இன்ஃபோடெயின்மெண்ட் வசதிகள், பாதுகாப்பு மற்றும் சொகுசான உட்புறங்களைக் கொண்டுள்ளது.

இது 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய சியரா எஸ்யூவி கார் B-பில்லருக்கு அருகிலும் சிறிய கண்ணாடி அமைப்புடன் பெட்டியான வடிவமைப்பில், உயரமான பின்புறத்தை கொண்டுள்ளது. கூடுதலாக, இதில் மூன்று ஸ்கிரீன் செட்-அப்கள், வென்டிலேட்டட் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் இடம்பெறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக பெரிய கார் சந்தையான இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு பிரிவுகளில், பல எண்ணிக்கைகளில் கார்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) உடன் துவங்கிய இந்த 2025ஆம் ஆண்டிலும் பல புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவற்றுள் டாப்-5 கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம்.


Click it and Unblock the Notifications









