டாடா நெக்ஸானை எந்த காராலும் நெருங்க கூட முடியல! 2வது இடத்தில் மாருதி கார்!
இந்தியாவின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் சந்தை, எப்போதும் கடும் போட்டி நிறைந்ததாகவே உள்ளது. கடந்த 2025 அக்டோபர் மாத விற்பனையில் மார்க்கெட்டின் இந்த சவாலான சூழல் தெளிவாக தெரிகிறது. டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் ஸ்கோடா போன்ற முன்னணி கார் நிறுவனங்கள், பண்டிகை காலத்தை சாதகமாக்கி காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன.
கடந்த 2025 அக்டோபர் மாத சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனைப் பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) மீண்டும் முன்னிலை வகிக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் 22 ஆயிரத்து 83 நெக்ஸான் கார்கள் விற்பனையாகி, கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபரை விட 50 சதவீத வளர்ச்சியுடன் விற்பனையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.

நெக்ஸானின் மேம்படுத்தப்பட்ட வேரியண்ட்களும், பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஈர்க்கின்றன. அடுத்த தலைமுறை நெக்ஸான், இன்னும் சில ஆண்டுகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸானைத் தொடர்ந்து, மாருதி சுஸுகியின் ஃபிரான்க்ஸ் 17 ஆயிரத்து 3 யூனிட்கள் விற்பனை உடன் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
பலேனோவின் ஹார்ட்டெக்ட் (Heartect) தளத்தில் கட்டப்பட்ட ஃபிரான்க்ஸ், அதன் கூபே போன்ற வடிவமைப்பு, திறமையான என்ஜின் மற்றும் பல விதமான வேரியண்ட்கள் மூலம், சப்-4-மீட்டர் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலமாகவே, 2024 அக்டோபரை காட்டிலும் விற்பனையில் 4 சதவீத வளர்ச்சியை ஃபிரான்க்ஸ் பதிவு செய்துள்ளது.

டாடா பன்ச் (Tata Punch) ஆனது மைக்ரோ எஸ்யூவி கார்கள் பிரிவில் தனது விற்பனை வேகத்தைத் தக்க வைத்து, 16 ஆயிரத்து 810 யூனிட்கள் விற்பனை உடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் உயர்தர கட்டுமானம், உயரமான தோற்றம் மற்றும் மலிவு விலையிலான வேரியண்ட்கள், குடும்பங்களையும், முதல் முறையாக கார் வாங்குபவர்களையும் கவர்ந்துள்ளன.
விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டாடா சியரா மற்றும் பெட்ரோல் ஹாரியர், சஃபாரி கார்களின் அறிமுகத்திற்குப் பிறகு 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பன்ச் பெட்ரோல் காரின் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்து, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 12 ஆயிரத்து 72 கார்கள் விற்பனை செய்யப்பட்டு, 2024 அக்டோபரை விட 27 சதவீத சரிவைக் கண்டுள்ளது.

ஹூண்டாயின் வென்யூ, 11 ஆயிரத்து 738 யூனிட்கள் விற்பனை உடன் சிறப்பான விற்பனையை தக்கவைத்து, 2024 அக்டோபரை விட 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. புதிய தலைமுறை வென்யூவின் வருகை, இந்த பிரிவில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அதன் முதல் மாத விற்பனை எப்படி இருக்கும் என்பதை டிசம்பர் மாதத்தில் தான் பார்க்க வேண்டும்.
வென்யூவின் சிறிய மாடலான எக்ஸ்டர் (Exter) 6 ஆயிரத்து 294 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்த போதிலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. மார்க்கெட்டுக்கு புதிய வருகைகளான ஸ்கோடா கைலாக் (Kylaq) மற்றும் டொயோட்டா டைசர் (Taisor) கார்கள் முறையே 5 ஆயிரத்து 78 யூனிட்கள் மற்றும் 4 ஆயிரத்து 561 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
| Rank & Model | October 2025 Sales | October 2024 Sales | YoY |
|---|---|---|---|
| 1. Tata Nexon | 22,083 | 14,759 | 50% |
| 2. Maruti Suzuki Fronx | 17,003 | 16,419 | 4% |
| 3. Tata Punch | 16,810 | 15,740 | 7% |
| 4. Kia Sonet | 12,745 | 9,699 | 31% |
| 5. Mahindra XUV 3XO | 12,237 | 9,562 | 28% |
| 6. Maruti Suzuki Brezza | 12,072 | 16,565 | -27% |
| 7. Hyundai Venue | 11,738 | 10,901 | 8% |
| 8. Hyundai Exter | 6,294 | 7,127 | -12% |
| 9. Skoda Kylaq | 5,078 | – | – |
| 10. Toyota Taisor | 4,561 | 3,092 | – |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி ரக கார்களுக்கு தான் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி ரக கார்களை வாங்கவே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே கடந்த அக்டோபர் மாத சேல்ஸ் ரிப்போர்ட்டில் கார்கள் ஒவ்வொன்றின் விற்பனை எண்ணிக்கைகளும் குறைவான வித்தியாசங்களுடன் உள்ளன.


Click it and Unblock the Notifications









