ரெண்டு எலெக்ட்ரிக் கார்கள் மூலம் எம்ஜி தப்புச்சிக்கிட்டு இருக்கு! வரவங்க பெட்ரோல் கார்களை கேட்குறது இல்ல!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, விண்ட்சர் இவி கடந்த 11 மாதங்களாக நாட்டின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் காராகத் திகழ்கிறது. விண்ட்சர் இவி, 2024 அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எம்ஜியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அஸ்டர், ஹெக்டர், க்ளோஸ்டர் மற்றும் இசட்.எஸ் இவி போன்ற பிற எம்ஜி கார்களும் சீரான விற்பனையுடன் சந்தையில் நிலைத்து நிற்கின்றன. இந்த வெற்றியைத் தொடர்ந்து, எம்ஜி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட க்ளோஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இது அதன் பிரீமியம் எஸ்யூவி கார்கள் பிரிவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய ஜிஎஸ்டி குறைப்புகளுக்குப் பிறகு, எம்ஜி மோட்டார் தனது அனைத்து கார்களின் விலையையும் குறைத்துள்ளது. இதனால், பெட்ரோல்/ டீசல் மற்றும் எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த மதிப்பு கிடைக்கிறது. மேலும், பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்புடன், இந்த நடவடிக்கைகள் ஒட்டுமொத்த எம்ஜி வாடிக்கையாளர் உணர்வையும் விற்பனையையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
2025 செப்டம்பரில், எம்ஜி மோட்டார் இந்தியா மொத்தம் 6,728 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 செப்டம்பரில் விற்பனையான 4,588 எம்ஜி கார்களுடன் ஒப்பிடுகையில் 47% அதிகம் ஆகும். 2025 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையான 6,578 எம்ஜி கார்களுடன் ஒப்பிடுகையிலும், இது மாதத்திற்கு மாதம் 2% அதிகரிப்பை காட்டுகிறது.

2025 செப்டம்பரிலும் தொடர்ந்து எம்ஜியின் முன்னணி விற்பனை மாடலாக விண்ட்சர் இவி முன்னிலை வகித்துள்ளது. இது கடந்த மாதத்தில் 4,741 யூனிட்கள் விற்பனையாகி, 2025 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் 5% வளர்ச்சியை கண்டுள்ளது. எம்ஜியின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 70% பங்களிப்புடன், இந்த மாடல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்ட்சர் இவி இன்ஸ்பையர் எடிசன், 300 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இது விண்ட்சர் இவி இந்தியாவில் அறிமுகமாகி ஒரு வருடம் ஆனதைக் கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டது. கோமட் இவி, 1,203 யூனிட்கள் விற்பனை உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை விட விலை குறைவான கோமட் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை 2024 செப்டம்பரை விட 5% குறைந்திருந்தாலும், 2025 ஆகஸ்ட் மாதத்தை விட 8% வளர்ச்சி அடைந்துள்ளது.

இது பண்டிகைக் கால கார்கள் தேவையின் வலுவான மீட்சியை உணர்த்துகிறது. ஹெக்டர் 409 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2024 செப்டம்பரை விட 70% கடுமையான சரிவு என்றாலும், ஆகஸ்ட் மாதத்தை விட 8% அதிகரித்துள்ளது. ஹெக்டரின் எலெக்ட்ரிக் வெர்சனான இசட்.எஸ் இவி 250 யூனிட்களுடன் 2024 செப்டம்பரை விட 74 சதவீதமும், 2025 ஆகஸ்ட்டை விட 34 சதவீதமும் சரிவைச் சந்தித்துள்ளது.
எம்ஜி அஸ்டர் 90 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி, ஆண்டுக்கு 88% மற்றும் மாதத்திற்கு மாதம் 50% சரிவுடன் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. க்ளோஸ்டர் 2025 செப்டம்பரில் 35 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது ஆண்டுக்கு 83% சரிவு என்றாலும், ஆகஸ்ட் மாதத்தின் 16 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் மாதத்திற்கு மாதம் 119% அதிகரித்துள்ளது.
| No | MG Car Sales | Sep-25 | Sep-24 | Diff | Growth % YoY | % Share Sep 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Windsor | 4,741 | 0 | 4,741 | 70.47 | - |
| 2 | Comet | 1,203 | 1,268 | -65 | -5.13 | 17.88 |
| 3 | Hector | 409 | 1,380 | -971 | -70.36 | 6.08 |
| 4 | ZS EV | 250 | 980 | -730 | -74.49 | 3.72 |
| 5 | Astor | 90 | 760 | -670 | -88.16 | 1.34 |
| 6 | Gloster | 35 | 200 | -165 | -82.50 | 0.52 |
| - | Total | 6,728 | 4,588 | 2,140 | 46.64 | 100.00 |
| No | MG Car Sales | Sep-25 | Aug-25 | Diff | Growth % MoM | % Share Aug 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Windsor | 4,741 | 4,511 | 230 | 5.10 | 68.58 |
| 2 | Comet | 1,203 | 1,113 | 90 | 8.09 | 16.92 |
| 3 | Hector | 409 | 379 | 30 | 7.92 | 5.76 |
| 4 | ZS EV | 250 | 380 | -130 | -34.21 | 5.78 |
| 5 | Astor | 90 | 179 | -89 | -49.72 | 2.72 |
| 6 | Gloster | 35 | 16 | 19 | 118.75 | 0.24 |
| - | Total | 6,728 | 6,578 | 150 | 2.28 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கிய மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. எலெக்ட்ரிக் கார்கள் எம்ஜி நிறுவனத்தின் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி, இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், பெட்ரோல், டீசல் கார்களை மட்டும் எம்ஜி விற்பனை செய்திருந்தால் இந்த அளவிற்கான வளர்ச்சியை பதிவு செய்திருக்காது என்பதுதான் உண்மை.


Click it and Unblock the Notifications









