ரூ.10 லட்சம் கொடுத்து கார் வாங்கினால், 6 லட்சம் திரும்ப கிடைக்கும்! பழச கொடுத்து புதுசுக்கு மாறிக்கலாம்!!
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) சொந்தமாக்குவதை வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக்கவும் தடையற்றதாகவும் மாற்றும் நோக்கத்துடன், எங்கும் கேள்விப்படாத, துறையிலேயே முதல் முயற்சியாக ஒரு புதிய திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்ன... அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன... என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பிரிட்டிஷ் நாட்டில் தோன்றி சீனாவின் SAIC குழுமத்தால் வாங்கப்பட்டு, தற்போது இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் நிறுவனம் தான், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் ஆகும். BaaS என்கிற பேட்டரியை குத்தகை முறையில் வழங்கும் முறையை துவங்கியது மற்றும் தனது எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரிக்கு முழு ஆயுட்கால உத்தரவாதத்தை அறிவித்தது என கடந்த சில வருடங்களில் பல புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த வரிசையில் தற்போது, தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு 3- 5 ஆண்டுகள் வரை, உறுதி செய்யப்பட்ட மதிப்பை திரும்ப வாங்கும் (Assured Buy Back) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்தகைய திட்டத்தை வழங்கும் நாட்டின் முதல் கார் பிராண்டாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் உருவெடுத்துள்ளது. இது, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் காரின் நிலையான மறுவிற்பனை மதிப்பை உறுதி செய்வதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயனர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த தனித்துவமான திட்டத்தின் கீழ், எம்ஜி எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து, மூன்று, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரவாதமான மறுவிற்பனை மதிப்பை பெறலாம். இந்த திட்டம், வாகனத்தை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 60% மதிப்பை திரும்ப வாங்கும் எம்ஜி மோட்டாரின் ஏற்கனவே உள்ள உத்தரவாத திட்டத்தின் விரிவாக்கமாகும். அதாவது, இந்த திட்டத்தை 4 மற்றும் 5 வருட பழைய எலெக்ட்ரிக் கார்களுக்கும் எம்ஜி நீட்டித்துள்ளது.

இது, எந்தவொரு கடன் அல்லது நிதி திட்டத்துடனும் சம்பந்தமில்லாமல் செயல்படுகிறது. சற்று அதிக விலையிலான எம்ஜி இசட்.எஸ் இவி (ZS EV) எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்கள் கூட மூன்று ஆண்டுகள் வரை ஓடிய வாகனங்களுக்கு மறுவிற்பனை மதிப்பு பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார். இந்த மூன்று வருடங்களில் கார் 1.80 லட்சம் கிமீ-க்குள் ஓடியிருக்க வேண்டும்.
வருடம் மற்றும் ஓடிய கிமீ அதிகரிக்க அதிகரிக்க காருக்கான மதிப்பு குறையும். இருப்பினும், 4 வருட பழைய காருக்கு 50% மற்றும் 5 வருட பழைய காருக்கும் அதன் 40% மதிப்பை வழங்குவதாக எம்ஜி தற்போது அறிவித்துள்ளது. 5 வருடத்திற்கும் மேல் பழமையான எம்ஜி கார்களுக்கு இந்த திட்டம் செல்லப்படி ஆகாது என்பது எம்ஜி அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

ஜுனோ ஜெனரல் இன்சூரன்ஸ் (Zuno General Insurance), இந்தத் திட்டத்தின் காப்பீட்டு பங்குதாரராக, நீண்டகால எலெக்ட்ரிக் வாகன உரிமையை எளிதாக்குவதற்கான டிஜிட்டல் பாதுகாப்பை உருவாக்குவதில் உறுதிபூண்டுள்ள ஒரு புதிய தலைமுறை காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்துடன் இணைந்து லாக்க்டன் இந்தியா இன்சூரன்ஸ் புரோக்கிங் அண்ட் அட்வைசரி லிமிடெட் (Lockton India Insurance Broking and Advisory Ltd) நிறுவனம் இந்த உறுதி செய்யப்பட்ட கார் மதிப்பை திரும்ப வாங்கும் திட்டத்தை எம்ஜி கார் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பட்ஜெட் விலையிலான எலெக்ட்ரிக் வாகனப் பிரிவிலேயே புதுமையான இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, வாகனத்தின் மதிப்பு குறைவதால் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்த புதிய எம்ஜி கார்களுக்கு மாறுவதை எளிதாக்குகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை வைத்துக்கொள்வதா அல்லது திருப்பி ஷோரூமிலேயே கொடுத்து அதற்கான மதிப்பை பெறுவதா அல்லது அதன் மூலம் புதிய எம்ஜி காருக்கு மாறுவதா என்று முடிவெடுக்க அனுமதிக்கிறது.
காரின் மதிப்பு குறைவது பற்றிய கவலைகளைக் குறைப்பதன் மூலம், இந்தத் திட்டம் எம்ஜி கார் வாங்குபவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டைத் துரிதப்படுத்தவும் உதவும். இது அதிக நிதி சார்ந்த முன்னெச்சரிக்கை தன்மை, வசதி மற்றும் நீண்ட கால மன அமைதியையும் வழங்குகிறது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் இந்த புதிய நடவடிக்கை, வாடிக்கையாளர்கள் எம்ஜி எலெக்ட்ரிக் கார்களை சொந்தமாக்குவதை எளிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும்.


Click it and Unblock the Notifications









