டாடாக்கே ஊக்கடித்த கார் மாடல்.. உற்பத்தியில் இமாலய சாதனை.. இந்த காரெல்லாம் இப்படி வளரும்னு யாருமே எதிர்பாக்கல!
டாடா (Tata Motors) நிறுவனத்துக்கே விற்பனையில் ஊக்கடித்த கார் மாடலாக எம்ஜி விண்ட்ஸர் இவி ( MG Windsor EV) இருக்கின்றது. இந்த கார் மாடலே தற்போது உற்பத்தியில் இமாலய சாதனையைப் படைத்திருக்கின்றது. உற்பத்தியில் மட்டுமல்ல இந்த கார் விற்பனையிலும் தொடர்ச்சியாக சாதனைப் படைத்துக் கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியாக கடந்த நான்கு மாதங்களே இதுவே நாட்டின் பெஸ்ட் செல்லிங் மின்சார கார் மாடல் ஆகும். முன்னதாக இந்த இடத்தை டாடா நெக்ஸான் இவி-யே அலங்கரித்து வந்தது.
இந்த இடத்தையே கடந்த 2024 அக்டோபர் மாதம் முதல் விண்ட்ஸர் இவி ஆட்சிச் செய்துக் கொண்டிருக்கின்றது. 2024 அக்டோபர் தொடங்கி சென்ற மாதம் (ஜனவரி 2025) வரை இ-கார் விற்பனையில் விண்ட்ஸர் இவி-யே முதல் இடத்தில் உள்ளது. இத்தகைய அமோக வரவேற்பைத் தொடர்ந்தே இந்த காரின் உற்பத்தியில் தற்போது புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றது.

15 ஆயிரம் யூனிட்டுகள் உற்பத்தி எனும் சாதனையையே அது படைத்திருக்கின்றது. எம்ஜி விண்ட்ஸர் இவி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் சியூவி ரக கார் மாடல் ஆகும். இதற்கு போட்டியாக இந்த பிரிவில் வேறு எந்த கார் மாடலும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த சிறப்பும் இந்த காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு ஓர் முக்கிய காரணமாக உள்ளது. இதைவிட இந்த காரை பேட்டரி அஸ் எ சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழ் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதே அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பிற்கான முக்கிய காரணமாக உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் விண்ட்ஸர் இவி-யை வாங்கும்போது அந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரிக்கான பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. அதேநேரத்தில், ஒவ்வொரு கிமீ பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ஒரு கிமீ இந்த காரில் பயணித்தால் அதற்கு 3 ரூபாய் 50 காசுகள் கட்டணமாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
இந்த திட்டமே விண்ட்ஸர் இவியின் விற்பனையை மிகப் பெரிய அளவில் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், எஸ்யூவி கார்களுக்கே டஃப் கொடுக்கும் வசதியை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும். இதுவும், இந்த கார் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இருப்பதற்கு ஓர் முக்கிய காரணமாக உள்ளது.
இந்த காரில் அதிக இட வசதி மட்டுமல்ல மிகவும் சௌகரியமான டிராவல் அனுபவத்தைப் பெறுவதற்கான வசதிகளையும் இந்த காரில் எம்ஜி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, விமானங்களில் வழங்கக் கூடிய இருக்கைகளை இந்த காரில் அந்நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அதை 135 டிகிரி வரை சாய்த்துக் கொள்ள முடியும்.
இதேபோல், 604 லிட்டர் அளவுள்ள பூட் ஸ்பேஸ், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், 256 வண்ணங்களில் ஒளிரும் வசதிக் கொண்ட ஆம்பியன்ட் லைட் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் மொத்தமாக இந்தியாவில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
எக்சைடு, எக்ஸ்க்ளூசீவ் மற்றும் எஸ்சென்ஸ் ஆகியவையே அவை ஆகும். இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரத்து 800 ஆகும். இது பேட்டரி அஸ் எ சர்வீஸ் அல்லாமல் கிடைக்கும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 332 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு முன்பைவிட இப்போது இரட்டிப்படைந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக எம்ஜி விண்ட்ஸர் இவி உற்பத்தியில் புதிய சாதனையைப் படைத்த சம்பவம் அமைந்திருக்கின்றது. வரும் நாட்களிலும் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








