டாடாவால் முடியல... ரோட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் இந்த எம்ஜி எலெக்ட்ரிக் காரை பார்க்கலாம்!
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், அதன் விண்ட்சர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரின் விற்பனையில் 50,000 என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை 400 நாட்களுக்கு உள்ளாக, அதாவது ஒரு வருட காலத்தில் எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. எம்ஜி நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ள இந்த நிகழ்வை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
1 வருடத்தில் 50 ஆயிரம் விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருப்பதன் மூலம், இந்தியாவில் 4-சக்கர எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தனது தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தி, இந்த சாதனையை நிகழ்த்திய முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை எம்ஜி விண்ட்சர் பெற்றுள்ளது.

எம்ஜி விண்ட்சர் இவி காரின் இந்த வெற்றி, புதுமையான வடிவமைப்பு, சிறந்த செயல்பாடு மற்றும் தனித்துவமான உரிமையாளர் அனுபவம் ஆகியவற்றின் கலவையைப் பிரதிபலிக்கிறது. இதுகுறித்து பேசிய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுராக் மெஹ்ரோத்ரா, "விண்ட்சர் இவி-யை நாங்கள் அறிமுகப்படுத்தியபோது, எங்களின் நோக்கம் எளிமையானது ஆனால் லட்சியமானதாக இருந்தது.
அது, நடைமுறைக்கு ஏற்ற ஸ்டைலான மற்றும் மதிப்புமிக்க மொபைலிட்டி தீர்வை வழங்குவதோடு, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதாக இருந்தது. விண்ட்சர் இவி-யின் விரைவான வெற்றி, அதாவது குறுகிய காலத்தில் 50,000 யூனிட்கள் விற்பனை ஆனது இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.

மேலும், வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்வதையும் இது காட்டுகிறது. இந்த மைல்கல் புதிய எரிசக்தி வாகனங்களுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் ஆழப்படுத்த எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. ஒவ்வொரு முறையும் உற்சாகமான அனுபவங்களை வழங்குவதே எங்கள் நோக்கம், மேலும் இந்தியாவின் மொபைலிட்டி எதிர்காலத்தை நாங்கள் வடிவமைக்கும்போது இந்த அளவுகோலை தொடர்ந்து உயர்த்துவோம்," என்று தெரிவித்தார்.
சமீபத்தில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்களால் வெளியிடப்பட்ட எம்ஜி விண்ட்சர் இன்ஸ்பயர் (MG Windsor Inspire) என்கிற ஒரு சிறப்பு பதிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் முதல் அறிவார்ந்த கூபே-ஸ்டைல் எஸ்யூவி காரான எம்ஜி விண்ட்சர், இவி பிரிவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வாகனத் துறையில் ஒரு நவீன அற்புதமாக உருவெடுத்துள்ளது.

இது வசதி, ஸ்டைல் மற்றும் தொழில்நுட்பத்தின் சாராம்சத்தைப் பெற்றுள்ளது. ரூ.9.99 லட்சம் (BaaS ஆரம்ப விலை) + ரூ.3.9/கிமீ என்ற விலையில் கிடைக்கும் இந்த கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார், ஒரு செடானின் அகலத்தையும் ஒரு எஸ்யூவியின் பன்முகத்தன்மையையும் கொண்டுள்ளது. எம்ஜி விண்ட்சர் இவி 100 KW (136ps) சக்தியையும், 200Nm டார்க் திறனையும் வழங்குகிறது.
அட்வான்ஸான 'ஏரோகிளைட்' வடிவமைப்பு மொழியில் எம்ஜி விண்ட்சர் இவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில், 'ஏரோ லவுஞ்ச்' இருக்கைகள் 135 டிகிரி வரை சாய்ந்து கொள்ளக்கூடிய வசதியை வழங்குகிறது. மேலும், சென்டர் கன்சோலில் உள்ள பெரிய 15.6 இன்ச் கிராண்ட்வியூ டச் டிஸ்பிளே ஒரு சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மைல்கல், அதிநவீன நிலையான மொபைலிட்டி தீர்வுகளைத் தேடும் வாடிக்கையாளர்களிடையே எம்ஜி விண்ட்சர் இவி காரின் வளர்ந்து வரும் பிரபலத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மெட்ரோ நகரங்களைத் தாண்டி, சிறு நகரங்களில் இருந்தும் எம்ஜி விண்ட்சர் இவி காருக்கு தொடர்ச்சியான தேவை உள்ளது. இது நிலையான மொபைலிட்டி தீர்வுகளைப் பின்பற்ற இந்தியா தயாராக இருப்பதைக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









