10 லட்ச ரூபாயில் இவ்வளவு பெரிய காரை கொண்டுவந்ததன் பலன்! சீன கம்பெனிக்கு கீழ் செயல்பட்டாலும் லாபம் கொட்டுது!
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் சமீப கால வளர்ச்சி கவனிக்கத்தக்க அளவில் உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனமும், எம்ஜி மோட்டார் நிறுவனமும் இணைந்த பின்பே இந்த துரிதமான முன்னேற்றம் கை கூடியுள்ளது என சொல்ல வேண்டும். இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 ஜூலை மாதத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை எம்ஜி பதிவு செய்துள்ளது. அதனை எம்ஜி நிறுவனமே புள்ளி விபரங்கள் உடன் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் ஆனது பிரிட்டிஷ் நாட்டில் தோன்றிய கார் நிறுவனமாகும். ஆனால், கடந்த பல வருடங்களாகவே சீனாவின் எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் (SAIC Motor) நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவில் பல்வேறு வணிகங்களை மேற்கொண்டுவரும் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடன் கடந்த 2023இல் எம்ஜி மோட்டார் இணைந்தது.

இந்தியாவில் 2019ஆம் ஆண்டிலேயே ஹெக்டர் (Hector) கார் உடன் நுழைந்தாலும், 2023இல் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடனான கூட்டணிக்கு பிறகே எம்ஜி நிறுவனம் மார்க்கெட்டில் பெரிதும் கவனத்தை பெற ஆரம்பித்தது. எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் இந்த கூட்டணி நிறுவனத்தில் இருந்து வெளிவந்த முதல் எலக்ட்ரிக் காரான கோமெட் இவி இந்தியாவிலேயே விலை குறைவான எலக்ட்ரிக் காராக கவனத்தை பெற்றது.
இருப்பினும், கோமெட் இவி காரை நிறைய பேர் வாங்க முன்வரவில்லை என்பதை உணர்ந்து உடனடியாக அடுத்த எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி (Windsor EV) காரை BaaS என்கிற பேட்டரி குத்தகை முறையில் அறிமுகம் செய்து மார்க்கெட்டை தெறிக்கவிட்டது. இந்தியாவில் தற்சமயம் அதிக பேர் வாங்கும் எலக்ட்ரிக் காராக எம்ஜி விண்ட்சர் இவி விளங்குகிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக அடுத்தடுத்து முயற்சிகளின் மூலமாக கடந்த 2025 ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 6 ஆயிரத்து 678 கார்களை ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் ஒரு மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் அதிகப்பட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களே ஒரு மாதத்தில் எம்ஜி விற்பனை செய்த அதிகப்படியான கார்களின் எண்ணிக்கையாக இருந்தது. ஜூன் மாதத்தில் ஜூலை மாதத்தில் கார்களை எம்ஜி நிறுவனம் அதிகமாக இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

அதேபோல், கடந்த 2024ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 4 ஆயிரத்து 575 எம்ஜி கார்களின் விற்பனை எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையிலும், இந்த 2025ஆம் ஆண்டு ஜூலையில் 2,103 எம்ஜி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் எம்9 (M9) மற்றும் சைபர்ஸ்டர் (Cyberster) என இரு விலையுயர்ந்த கார்களை புதியதாக எம்ஜி விற்பனைக்கு அறிமுகம் செய்து இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கடந்த மாதத்தில் புதியதாக அறிமுகம் செய்த இரு கார்களும் விலையுயர்ந்தவை ஆக விளங்கினாலும் இவற்றினால் எம்ஜி நிறுவனத்தின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என நம்புகிறோம். அதேநேரம், எம்ஜிக்கு ஏற்கனவே விற்பனையில் பெரிதும் உதவியாக இருக்கும் விண்ட்சர் இவி மற்றும் கோமெட் இவி போன்ற எலக்ட்ரிக் கார்களும் எம்ஜியின் தொடர் வளர்ச்சிக்கு பெரிதும் பக்க பலமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









