டாடாவிற்கு எமனாக மாற போகும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! களத்துக்கு வரப்போறது உறுதி! அவரே சொல்லீட்டாரா!
இந்திய சந்தையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) திகழ்கிறது. தற்போதைய நிலையில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) என மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்கிறது.
இந்த சூழலில், மிகவும் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ சிமெண்ட் (JSW Cement) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் (JSW Paints) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த் ஜிண்டால் (Parth Jindal) இது குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ''ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இது எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை விட சிறியதாக இருக்கும். எனவே 10-12 லட்ச ரூபாய் விலைக்குள், அந்த எலெக்ட்ரிக் காரை உருவாக்கி விட முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
இந்த எலெக்ட்ரிக் கார் தவிர பெரிய எஸ்யூவி ரக கார் ஒன்றையும் நாங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது ஐசி இன்ஜின், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் என மொத்தம் 3 வெர்ஷன்களில் கிடைக்கும்'' என்றார். இது குறித்து ஃபினான்ஸியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் வருகைக்கு பின்னர், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கை ஓங்கியுள்ளது.
குறிப்பாக இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனி சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது கடும் போட்டியை வழங்கி கொண்டுள்ளது. இதற்கு கடந்த ஜூன் மாதம் கூட ஒரு உதாரணம்.
கடந்த ஜூன் மாதத்தில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3,972 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 1,480 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 168 சதவீத வளர்ச்சியை அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.
நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை விட வெறும் 736 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் குறைவாக விற்பனை செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 4,708 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 4,594 ஆக இருந்தது. இது 2.48 சதவீத வளர்ச்சி ஆகும். ஆனால் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனமோ எலெக்ட்ரிக் கார் விற்பனையில் 168 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி கொண்டிருப்பதை இந்த எண்கள் தெளிவாக உணர்த்துகின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் மிகவும் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. மிகவும் விலை குறைவானது என்பதால், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை வெகுவாக உயர்த்த இது உதவலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் களமிறக்கவுள்ள விலை குறைவான எலெக்ட்ரிக் கார், விற்பனையில் சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








