கர்நாடகாவை பாத்து எல்லாரும் கத்துக்கணும்... மத்த மாநிலங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமா மாறீட்டாங்க...
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா (Karnataka) உள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் உள்ள வலுவான உள்கட்டமைப்பு வசதிகள்தான் காரணம். கர்நாடக மாநிலத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன.
எனவே பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தைரியமாக வாங்குகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் 2வீலர்கள், எலெக்ட்ரிக் 3வீலர்கள் மற்றும் எலெக்ட்ரிக் 4வீலர்கள் ஆகிய வாகனங்கள்தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக எலெக்ட்ரிக் பஸ் மற்றும் எலெக்ட்ரிக் லாரி போன்ற வாகனங்களையும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக கர்நாடக மாநிலம் முழுவதும், அதிக திறன் கொண்ட 1,500 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இவை ஒவ்வொன்றின் திறனும், 60kW - 240kW அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜர்கள், தொலை தூர பயணங்களை மேற்கொள்ள கூடிய, எலெக்ட்ரிக் பஸ் மற்றும் எலெக்ட்ரிக் லாரி போன்ற வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த 1,500 ஹை-கெப்பாசிட்டி ஃபாஸ்ட் சார்ஜர்களும், மத்திய அரசின் பிஎம் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் (PM E-Drive Scheme) அமைக்கப்படவுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதற்கான முயற்சிகளை கர்நாடக மாநில அரசு எடுத்து வருவதாக இடி ஆட்டோ தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மெதுவாக சார்ஜ் ஏறக்கூடிய சார்ஜர்களை, ஃபாஸ்ட் சார்ஜர்களாக மாற்றும் பணிகளையும் கர்நாடக மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பெஸ்காம் (Bescom - Bangalore Electricity Supply Company Limited) நிறுவனத்தின் கீழ் இருந்த 209 ஸ்லோ சார்ஜிங் ஸ்டேஷன்களில், தற்போது 184 சார்ஜிங் ஸ்டேஷன்கள், ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களாக மாற்றப்பட்டு விட்டன.
இது குறித்து பெஸ்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவசங்கரா கூறுகையில், ''ஃபாஸ்ட் சார்ஜர்கள், ஒரு வாகனத்தை வெறும் 30-45 நிமிடங்களில், முழுமையாக சார்ஜ் செய்து விடும். ஆனால் ஸ்லோ சார்ஜர்கள் இதை செய்வதற்கு 3-4 மணி நேரத்தை எடுத்து கொள்ளும்'' என்றார்.
இவை எல்லாம் தவிர, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL - Indian Oil Corporation Limited), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL - Hindustan Petroleum Corporation Limited) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL - Bharat Petroleum Corporation limited) போன்ற நிறுவனங்களுடனும், கர்நாடக மாநில அரசு கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியின் மூலம், மேற்கண்ட நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகளில், 400 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலமாக கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் வலிமையாகும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே, பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும். ஏனெனில் போதுமான எண்ணிக்கையில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாவிட்டால், பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மாட்டார்கள். எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் கர்நாடக மாநில அரசின் முயற்சி பாராட்டுக்குரியது. அத்துடன் இன்னும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் அதிகரிக்காத மாநிலங்களுக்கு எல்லாம், கர்நாடகா முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications








