ஒரு காலத்தில் ஒட்டுமொத்த பவுலர்களையும் நடுங்க வைத்த கிரிக்கெட் வீரர்!! மஹிந்திரா உடன் கைகோர்த்தது இதுக்குதானா?
கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen), இந்த பெயரை கிரிக்கெட் உலகில் அவ்வப்போது கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் மட்டைவீரரான கெவின் பீட்டர்சன், நன்கு உயரமான உடலமைப்புடன் அதற்கேற்ப வித்தியாசமான ஷாட்கள் மூலமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக விளங்குகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்படும் கெவின் பீட்டர்சன், அதேநேரம் ஆப்பிரிக்கா கண்டத்தின் வனவிலங்குகளை இந்தியாவின் உதவியுடன் பாதுகாக்கும் சூராய் (SORAi - Save Our Rhinos Africa/ India) என்கிற அமைப்பிலும் அங்கம் வகிக்கிறார்.
இந்த அமைப்பிற்கு பெரும்பாலான உதவிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் இருந்துதான் கிடைக்கிறது. அந்த வகையில், சூராய் அமைப்புடன் தென்னாப்பிரிக்கா (South Africa) நாட்டில் செயல்படும் மஹிந்திரா நிறுவனம் கூட்டணி சேர்ந்துள்ளது. தற்சமயம் இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் இரண்டாவது இடம் வகிக்கும் மஹிந்திரா, இதற்கிடையில் வெளிநாடுகளில் கால் பதிக்கவும் முனைப்புடன் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா (Australia) நாட்டில் மஹிந்திரா ஏற்கனவே தனக்கான மார்க்கெட்டை வலுப்படுத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியா நாட்டிற்கான மஹிந்திரா நிறுவனத்தின் பிராண்ட் தூதராக முன்னாள் பிரபல ஆஸ்திரேலியன் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் (Mathew Hayden) இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
அந்த வகையில், தென்னாப்பிரிக்கா நாட்டின் மஹிந்திரா நிறுவனம் முன்னாள் பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் உடன் இணைந்துள்ளது. இந்த கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக, கெவின் பீட்டர்சன் உடன் எடுத்துக் கொண்ட படங்களை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "காண்டாமிருகங்களுக்கு ஒரு புதிய அணி தோழர் கிடைத்துள்ளார். கெவின் பீட்டர்சன் வேட்டைக்காரர்களிடம் சண்டையிட தயாராக உள்ளார்.

இப்போது அவர் காடுகளுக்காக உருவாக்கப்பட்ட மஹிந்திராவை பயன்படுத்தி வருகிறார். நீங்கள் (கெவின் பீட்டர்சன்) செய்யும் நல்ல வேலையை ஆதரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. கெவின் பீட்டர்சன் சிக்சர்களை அடிப்பதில் இருந்து காண்டாமிருகங்களை காப்பாற்றுவது வரை, நீங்கள் உங்கள் இலக்கை ஒருபோதும் தவறவிட மாட்டீர்கள்" என்ற கேப்ஷன் உடன் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள படங்களில் கெவின் பீட்டர்சன் உடன் வாகனம் ஒன்று நிற்பதை காணலாம்.
விலங்குகளை அதன் இடங்களுக்கே சென்று நோட்டமிடுவதற்காக இந்த வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கி கொடுத்துள்ளது. மஹிந்திரா பிக் அப் சிங்கிள் கேப் சஃபாரி எடிசன் என அழைக்கப்படும் இந்த வாகனத்தில் அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்கு ஏதுவாக, அதிக எண்ணிக்கையிலான இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளதை காணலாம்.
பயணிகள் எழுந்து நின்றப்படியும் பயணம் செய்வதற்காக மேற்கூரை நன்கு உயரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காற்றில் இருந்தும், மழை நீரில் இருந்தும் டிரைவர் மற்றும் முன் இருக்கை பயணியை பாதுகாக்கும் விதமாக வாகனத்திற்கு முன்பக்கத்தில் சிறிய அளவிலான விண்ட்ஷீல்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வாகனத்தின் பக்கவாட்டுகளில் எந்த கண்ணாடியும் வழங்கப்படாமல், பயணிகள் சுற்றுப்புறத்தை விரிவாக பார்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அழியும் தருவாயில் உள்ள காண்டாமிருகங்களை காப்பாற்றும் முயற்சியாக செயல்படும் சூராய் அமைப்பிற்கு, இது போன்று மேலும் பல மஹிந்திரா பிக் அப் வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த வாகனம் அடிப்படையில் மஹிந்திரா ஸ்கார்பியோ பிக் அப் டிரக் (Mahindra Scorpio Pick Up Truck) ஆகும். ஸ்கார்பியோ பிக் அப் டிரக்கை கெவின் பீட்டர்சனின் சூராய் அமைப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கி வழங்க உள்ளதில் இருந்து, இந்த விஷயத்தில் மஹிந்திரா நிறுவனம் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications








