அடி மாட்டு விலையில் களமிறங்கும் 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்! மார்க்கெட்டை மொத்தமா வளச்சு போட போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார் கடந்த மே மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஐசி இன்ஜின் மாடல் ஆகும். இதை தொடர்ந்து இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார், இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி பார்த்தால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார், வரும் ஜூலை 15ம் தேதி பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அன்றைய தினம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால் விலை (Price) மட்டும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.
அவை கியா இவி6 (Kia EV6) மற்றும் கியா இவி9 (Kia EV9) ஆகியவை ஆகும். இதில், கியா இவி6 எலெக்ட்ரிக் கார் 65.97 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் கியா இவி9 எலெக்ட்ரிக் கார் 1.30 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார் சற்று விலை குறைவானதாக இருக்கும். சொல்லப்போனால் இதுதான் இந்தியாவில் கியா நிறுவனம் உற்பத்தி செய்யும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். மற்ற 2 எலெக்ட்ரிக் கார்களும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
அனேகமாக கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 16 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. இது இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 42 kWh மற்றும் 51.5 kWh ஆகிய பேட்டரிகள் ஆகும். இதில், முதலாவது பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 390 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும், இரண்டாவது பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 473 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும் இருக்கலாம்.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை, கேரன்ஸ் க்ளாவிஸ் இவி பெறவுள்ளது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
இது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு எலெக்ட்ரிக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி மிகவும் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








