மாருதி எர்டிகாவை கதிகலங்க வைக்க போகும் கார் புதிய அவதாரம் எடுக்குது... இதுல இத்தன பேர் போக முடியுமா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவம் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்க கூடிய எம்பிவி (MPV) ரக காரான இது, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கியா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காக கேரன்ஸ் காரில் கியா நிறுவனம் கேரன்ஸ் காரின் 2 புதிய வெர்ஷன்களை களத்தில் இறக்கவுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். செய்திக்குள் செல்லலாம்.
நாங்கள் குறிப்பிட்ட 2 வெர்ஷன்களில் ஒன்று, கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் ஆகும். இது தற்போது விற்பனையில் உள்ள வெர்ஷனை இன்னும் மெருகேற்றி, பல்வேறு அப்டேட்களுடன் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. முக்கியமான டிசைனில் பல்வேறு கவர்ச்சிகரமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

இதன்படி முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய அலாய் வீல்கள், புதிய கலர் ஆப்ஷன்கள், புதிய எல்இடி லைட்கள் ஆகிய அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் பல்வேறு புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்போது விற்பனைக்கு வரும்? என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நடப்பு 2025ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு வரவுள்ளது. அதாவது ஜூலை-டிசம்பர் காலகட்டத்தில் ஏதேனும் ஒரு சமயத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இந்த செய்தியில் நாம் பார்க்க போகும் 2வது வெர்ஷன், கியா கேரன்ஸ் காரின் எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.
இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வது ஒரு 'டிரெண்ட்' ஆக உள்ளது. இன்று மதியம் (ஜனவரி 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) எலெக்ட்ரிக் கார் கூட இதற்கு ஒரு உதாரணம்.
இந்த வரிசையில் கியா கேரன்ஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் கியா கேரன்ஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டாலும் கூட, எப்போது விற்பனைக்கு வரும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் கியா கேரன்ஸ் இவி எலெக்ட்ரிக் கார் பற்றிய ஒரு சில தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன. இதன்படி ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 51.4kWh மற்றும் 42kWh பேட்டரி ஆப்ஷன்கள்தான், கியா கேரன்ஸ் இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபேஸ்லிஃப்ட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களின் வருகைக்கு பின்னர், கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற போட்டி கார்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








