630 கிமீ பயமே இல்லாம போகலாம்.. வழியில எங்கேயுமே நிக்காது.. கியாவின் புது எலெக்ட்ரிக் கார் வெளியீடு!
கியா (Kia) நிறுவனம் ஓர் முழு சார்ஜில் 630 கிமீ ரேஞ்ச் தரக் கூடிய புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இவி4 (EV4) எனும் கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. விரைவில் இந்த காரை கியா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை முன்னிட்டே இந்த காரை கியா நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை இரண்டு விதமான அவதாரங்களில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, கியா.
செடான் மற்றும் ஹேட்ச்பேக் இந்த இரண்டு வெர்ஷன்களிலேயே அக்காரை விற்பனைக்கு வழங்க இருக்கின்றனர். ஆனால், மின்சார வெர்ஷனுடன் சேர்த்து ஐசிஇ அவதாரத்திலும் அது விற்பனைக்கு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. முதன் முதலில் இந்த காரை தன்னுடைய தாய் நாட்டிலேயே விற்பனைச் செய்ய கியா நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

தென்கொரியாவே இதன் தாய் நாடு என்பது கவனிக்கத்தகுந்தது. அடுத்த மாதமே அங்கு கியா இவி 4 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 58.3 kWh மற்றும் 81.4 kWh ஆகியவையே அவை ஆகும்.
இதில், 81.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே ஓர் முழு சார்ஜில் 630 கிமீ ரேஞ்சை வழங்கும். எனவே, 630 கிமீ தூரிம் வரை சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்கிற பயமே இல்லாமல் பயணிக்கலாம். ஆனால், டிரைவிங் ஸ்டைல் மற்றும் பயன்பாட்டைப் பொருத்து இந்த ரேஞ்ச் திறனில் மாற்றம் ஏற்படும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

58.3 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 430 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்து வரை மேலே இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளிலும் 150 kW திறன் கொண்ட மோட்டாரே இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த மோட்டார் அதீத ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. வெறும் 7.4 செகண்டுகளிலேயே இந்த மோட்டார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடுமாம். இதுமட்டுமல்ல இது வேகமாக சார்ஜாகும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகின்றது.

10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை ஏற்ற இதற்கு வெறும் 31 நிமிடங்களே போதும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இது ரேஞ்ச் தருவதில் மட்டுமல்ல தொழில்நுட்ப வசதிகளைத் தங்கியிருப்பதிலும் மிக சிறந்ததாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அந்தவகையில், யுட்யூப் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் வசதிக் கொண்ட 30 அங்குல பெரிய திரைகூட இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.
இதுதவிர, ஐ-பெடல் 3.0 ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், அடாஸ் அம்சம், மோதலைத் தவிர்க்கும் டெக்னாலஜி உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூப்பரான திறன்களைத் தாங்கியிருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலையே விரைவில் கொரிய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது உலக சந்தையில் விற்பனைக்கு வரும் எனில் மிக அமோகமான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் இந்திய வருகை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில், இது விற்பனைக்கு வரும் எனில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாருதி சுஸுகி இ விட்டாரா தொடங்கி ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் இவி வரை என அனைத்திற்கும் போட்டியாக மாறும்.


Click it and Unblock the Notifications









