கியா கார்களை வாங்க ஆள் இல்லைனு யாருங்க சொன்னா... ஷோரூம்களுக்கு பஞ்சமே இல்ல! தேடி போகனும்னு கூட அவசியம் இல்ல!!
கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து கார்களை விற்பனை செய்து வருகிறது. செல்டோஸ் (Seltos) கார் மூலமாக இந்திய மார்க்கெட்டில் நுழைந்த கியா நிறுவனம் தற்சமயம் 6 கார் மாடல்களை விற்பனை செய்கிறது. ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வளர்ந்துக்கொண்டே வரும் கியா இந்தியா நிறுவனம், கடந்த 2024ஆம் ஆண்டில் எத்தனை கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் சில வெளிநாட்டு கார் நிறுவனங்களால் மட்டுமே தங்களது ஆதிக்கத்தை செலுத்த முடிந்துள்ளது. அத்தகைய வெளிநாட்டு கார் நிறுவனங்களுள் ஒன்று, கியா ஆகும். செல்டோஸ் கார் மூலமாக விரைவாக இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்த கியா நிறுவனம், அதனை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக அடுத்த 2020ஆம் ஆண்டில் சொனெட் (Sonet) என்கிற மாஸ்-மார்க்கெட் தயாரிப்பை அறிமுகம் செய்தது.

தென்கொரிய கார் நிறுவனமான கியாவுக்கு ஆந்திராவில் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு உருவாக்கப்படும் கியா கார்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms)-க்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவிற்கு வந்து 5 வருடங்கள் மட்டுமே ஆன போதிலும், கியா நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் டீலர்ஷிப் ஷோரூம்கள் செயல்படுகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டிலும் இந்தியாவில் பல பகுதிகளில் புதியதாக ஷோரூம்களையும், புதிய கார்களையும் கியா அறிமுகம் செய்துள்ளது. 2024இல் புதியதாக 124 டீலர்ஷிப் ஷோரூம்களை கியா திறந்துள்ளது. அதுமட்டுமின்றி, செகண்ட்-ஹேண்ட் கார்களை விற்பனை செய்ததற்காக 36 அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்களையும் திறந்தது. இவற்றின் மூலமாக, கியாவின் கஸ்டமர் மையங்களின் எண்ணிக்கை இந்தியாவின் 301 நகரங்களில் 700ஐ தொட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டில் இந்தியாவின் மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கியா கூடுதல் கவனத்தை செலுத்தியது. அதன் மூலமாக, நாட்டின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து கஸ்டமர்களையும் ஈர்க்கும் கியா நிறுவனம், கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சத்து 55 ஆயிரத்து 38 கார்களை டெலிவிரி செய்துள்ளது. இது 2023ஆம் ஆண்டை காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும்.
ஏனெனில், அந்த ஆண்டில் வெறும் 2 லட்சத்து 40 ஆயிரத்து 919 கியா கார்கள் மட்டுமே டெலிவிரி செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் ஒரு வருடத்தில் கியா அதிக கார்களை டெலிவிரி செய்தது 2024ஆம் ஆண்டில் ஆகும். இதில், கியா சொனெட் காரின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். ஏனெனில், கடந்த ஆண்டில் டெலிவிரி செய்யப்பட்ட 2 லட்சத்து 55 ஆயிரம் கியா கார்களில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்து 337 கார்கள், சொனெட் கார்கள் ஆகும்.

சொனெட்டுக்கு அடுத்து, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் (Carens) கார்களையும் கடந்த ஆண்டில் கியா அதிகமாக டெலிவிரி செய்துள்ளது. மேலும், புதிய கார்னிவல் லிமௌசைன் (Carnival Limousine) காரையும் அறிமுகம் செய்த 2 மாதங்களில் 563 யூனிட்களுக்கும் மேல் கியா டெலிவிரி செய்துள்ளது. இவை தவிர்த்து, இந்தியாவில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்தம் 25 ஆயிரத்து 404 கார்களை வெளிநாடுகளுக்கு கியா ஏற்றுமதி செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற கார் நிறுவனங்களை போன்று, கியாவுக்கும் இந்தியா ஆனது முக்கியமான சந்தை ஆகும். ஏனெனில், அந்த அளவிற்கு நம் நாட்டில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வது செலவு குறைந்ததாக உள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கார்கள் உற்பத்தி மையமாகவும் இந்தியாவை கியா பயன்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









