ஹூண்டாயை பார்த்து இந்தியா வந்த கொரியன் கார் கம்பெனிக்கு கொட்டும் வருவாய்! குறி வெச்சா இரை விழணும்!!
கியா (Kia), தென்கொரிய கார் நிறுவனம். ஹூண்டாயின் வெற்றியை பார்த்து 2019இல் இந்திய சந்தையில் களம்புகுந்த மற்றொரு கொரிய கார் நிறுவனமான கியா, குறுகிய காலத்திற்கு உள்ளாகவே இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக உருவெடுத்து நிற்கிறது.
இதற்கு சான்றாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் கியா விற்பனை செய்த கார் எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். ஆந்திராவில் உற்பத்தி தொழிற்சாலையை வைத்து செயல்படும் கியா, நடந்து முடிந்த 2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 23 ஆயிரத்து 623 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை ஆனது 2024 ஏப்ரலில் இந்தியாவில் கியா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 18.3% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 19 ஆயிரத்து 968 கார்களை மட்டுமே கியா விற்பனை செய்திருந்தது. இதற்கு முக்கிய காரணம், கடந்த 1 வருடத்தில் கியா அறிமுகம் செய்த புதிய கார்கள் ஆகும்.
சிரோஸ் (Cyros), கார்னிவல் லிமௌசைன் (Carnival Limousine) என கடந்த 1 வருடத்தில் கியா புதியதாக அறிமுகம் செய்த கார்கள் கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. அதேநேரம், கியாவில் இருந்து ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கார்களுக்கும் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கியா சொனெட் (Sonet) காரின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது.

நடந்து முடிந்த 2025 ஏப்ரல் மாதத்தில் கியா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார், சொனெட் ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 8 ஆயிரத்து 68 சொனெட் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சொனெட்டிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கியா காராக 2வது இடத்தை செல்டோஸ் (Seltos) பிடித்துள்ளது.
கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை 6,135 ஆகும். செல்டோஸுக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிகம் எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கியா கார், கேரன்ஸ் (Carens) ஆகும். கியாவின் சமீபத்திய விலை குறைவான எம்பிவி (MPV) ரக காரான கேரன்ஸ், கடந்த ஏப்ரல் மாதத்தில் 5,259 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கியா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிரோஸ் இவற்றிற்கு அடுத்ததாக உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 4,000 சிரோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிரோஸ் கார்களை தற்போதைக்கு தேவைக்கேற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்து கியா விற்பனை செய்து வருகிறது. இதனால்தான், சரியாக 4,000 சிரோஸ் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சிரோஸை போன்று கியாவில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார்னிவல் லிமௌசைன் காரும் கடந்த மாதத்தில் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிரோஸ் காருக்கும் கார்னிவல் லிமௌசைன் காருக்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தியாவில் கியாவின் விலையுயர்ந்த சொகுசு காராக விளங்கும் கார்னிவல் லிமௌசைன் கடந்த ஏப்ரல் மாதத்தில் 161 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெல்ல மெல்ல இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக கியா உருவெடுத்து வருகிறது. வரும் மாதங்களில் சிரோஸ் காரின் உற்பத்தி மேலும் அதிகப்படுத்தப்படும் என்பதால், கியா கார்கள் விற்பனை எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது உறுதி. இதனால்தான், பட்ஜெட் விலையில் கொண்டுவரப்பட்டுள்ள சிரோஸ் காரின் மீது கியா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








