ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 12.6கிமீ காரை ஓட்டலாம்... கியா ஷோரூமில் கேட்டாலே பொருத்தி கொடுப்பாங்க!
கியா இந்தியா (Kia India) நிறுவனம் தனது கேரன்ஸ் எம்பிவி கார் வரிசையில் புதிய சிஎன்ஜி (CNG) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.11.77 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது வழக்கமான கேரன்ஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்டான பிரீமியம் (ஆப்ஷ்னல்) பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டை விட ரூ.77,900 அதிகம் ஆகும்.
ஏனெனில், பிரீமியம் (ஆப்ஷ்னல்) பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.10.99 லட்சமாக உள்ளது. இந்த சிஎன்ஜி கிட் லோவாட்டோ (Lovato) என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும், இந்த மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

கியா டீலர்கள் மூலமாக இந்த சிஎன்ஜி வசதி அளிக்கப்படுவதால், வாகனத்தின் அடிப்படை கட்டமைப்பு அல்லது வாரண்டி பாதிக்கப்படாது. கேரன்ஸ் சிஎன்ஜி காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இது 115 ஹெச்பி ஆற்றலையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவும் வழக்கமான கேரன்ஸ் காரை போலவே 7 இருக்கை அமைப்பைக் கொண்டுள்ளது. சிஎன்ஜி கிட் சேர்க்கப்பட்டதால் வாகனத்தின் செயல்திறன் மாறியுள்ளதா அல்லது எவ்வளவு மாறியுள்ளது என்பதை கியா நிறுவனம் வெளியிடவில்லை. கேரன்ஸ் பிரீமியம் (ஆப்ஷ்னல்) வேரியண்ட், 8 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, செமி-லெதரெட் இருக்கைகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 12.5 அங்குல எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

புதிய கேரன்ஸ் சிஎன்ஜி கார் க்ளியர் ஒயிட், ஸ்பார்க்கிளிங் சில்வர், கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் பேர்ல், இம்பீரியல் ப்ளூ மற்றும் பியூட்டர் ஆலிவ் என்கிற ஆறு வண்ணங்களில் கிடைக்கும். உள்ளே, இந்த எம்பிவி கார் செமி-லெதரெட் (கருப்பு மற்றும் இண்டிகோ) இருக்கைகள், 60:40 விகிதத்தில் பிரிக்கக்கூடிய இரண்டாவது வரிசை இருக்கைகள், 50:50 விகிதத்தில் பிரிக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள் போன்ற அதிக பேருடன் பயணிப்பதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
பின்பக்கப் பயணிகளுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளிலும் மேற்கூரையில் ஏசி வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. கேபின் சாட்டர்ன் பிளாக், கோகூன் பழுப்பு மற்றும் நேவி வண்ணங்களிலும், டாஷ்போர்டு இண்டிகோ மெட்டல் பெயின்ட் உடனும் கிடைக்கும். 8 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாய்ஸ் கண்ட்ரோல், ஆறு ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பு ஆகியவை சிறப்பான ஓட்டுநர் அனுபவத்தை அளிக்கின்றன.

கீலெஸ் என்ட்ரி, பர்கலர் அலாரம், LED டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய மின்சாரம் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ORVM-கள், டைனமிக் வழிகாட்டிகளுடன் கூடிய ரிவர்ஸ் வியூ கேமரா, பின்பக்க கதவு சன்ஷேட் திரைச்சீலைகள், மேனுவலாக டிரைவர் இருக்கையின் உயரத்தை சரி செய்யும் வசதி மற்றும் மூன்று இருக்கை வரிசைகளிலும் ஐந்து USB டைப்-சி போர்ட்கள் போன்ற வசதிகளும் புதிய கேரன்ஸ் சிஎன்ஜி காரில் தொடரப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கு, கேரன்ஸ் சிஎன்ஜி 10 பாதுகாப்பு தொகுப்புகளை கொண்டுள்ளது. இதில் ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வைகல் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ABS, பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர்களின் காற்றழுத்தத்தை கண்காணிக்கும் கருவி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா கேரன்ஸ் சிஎன்ஜி ஆனது மேம்பட்ட எரிபொருள் திறனையும், குறைந்த இயக்க செலவுகளையும் வழங்குகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு கணிசமான தேவை உருவாகி வருவதால், அதன் மூலம் புதிய கேரன்ஸ் சிஎன்ஜி பயன்பெறும். இந்த காருக்கான சிஎன்ஜி கிட் ஆனது டீலர்ஷிப் ஷோரூம் மூலமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த காரை புக் செய்து டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டிய கால அளவு சற்று அதிகமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









